For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவை தமிழகத்தை விட்டே விரட்டியடியுங்கள்.. பிரேமலதா ஆவேசம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து விரட்டுங்கள்... ஸ்டிக்கர் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்று காஞ்சிபுரம் அருகே வேடலில் நடந்த அரசியல் திருப்புமுனை மாநாட்டில் கொந்தளிப்போடு பேசினார் தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா.

சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா கூறியதால் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது ஊடகங்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.

அனைத்து சாலைகளும் காஞ்சியை நோக்கி திரும்ப... பரபரபப்பாக தொடங்கியது தேமுதிக மாநாடு. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருக்க மைக் பிடித்தார் பிரேமலதா. ஆரம்பம் முதல் இறுதிவரை பிரேமலதாவின் பேச்சில் அனல் பறந்தது.

Throw out Jaya govt, Premalatha

அதிமுகவும், திமுகவும் ஊழலில் திளைத்த கட்சிகள் என்று சாடிய பிரேமலதா, ஓ.பி.எஸ் ஒரு யு.பி.எஸ் என்று வசைபாடினார்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று கூறிய பிரேமலதா, அரசு அதிகாரிகள் தற்கொலை செய்யும் அவலம் நிலவுகிறது என்றார். சத்துணவு ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றியதுதான் ஜெயலலிதா செய்த ஒரே சாதனை என்றும் பிரேமலதா கூறினார்.

ஜெயலலிதாவை தமிழகத்தை விட்டே அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறிய பிரேமலதா,
உண்மையான வளர்ச்சியையோ, நல்ல திட்டங்களையோ ஜெயலலிதா கொண்டு வரவில்லை என்றார்.

விஜயகாந்த் தயவால்தான் உங்க அம்மா முதல்வராக இருக்காங்க என்று கூறிய பிரேமலதா, எங்களாலும் கீழ்த்தரமாக பேச முடியும், எங்களுக்கும் பேசத் தெரியும் என்று கூறினார்.

3 முறை தொடர்ந்து முதல்வராக வந்தவர் எம்.ஜி.ஆர். உங்க அம்மாவால் ஒரு முறையாவது வர முடிந்ததா? 3 முறை முதல்வராக வந்தாலும் 2 முறை சிறைக்குப் போய் களி தின்னத்தான் முடிந்தது அவரால் என்றார் பிரேமலதா.

நீயெல்லாம் ஒரு மனிதனா என்று ஓ.பன்னீர் செல்வத்தையும் கடுமையாக தாக்கினார் பிரேமலதா. ஜீரோ பன்னீர் செல்வம் என விமர்சனம் செய்த பிரேமலதா, கரண்ட் கட் ஆனாத்தான் யுபிஎஸ் வேலை செய்யும். அதேபோல அந்த அம்மாவோட பவர் போனாத்தான் ஒபிஎஸ் என்ற யுபிஎஸ் வேலை செய்யும் என்றும் கிண்டலடித்தார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு வசனம் பேசுவார் ஜெயலலிதா. நமக்கு வாய்த்த அடிமைகள் நல்ல அடிமைகள் என்பது ஜெயலலிதாவுக்குப் பலித்துள்ளது. அதிமுகவில் உள்ளவர்களை அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

ஆண்கள் என்றால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்க வேண்டும் ஆனால் அதிமுகவில் அல்லி ராஜ்ஜியம் நடக்கிறது. அல்லி ராணி ஜெயலலிதாவை தமிழக மக்கள் நாட்டை விட்டே வெளியேற்றுவார்கள்

ஜெயலலிதா செய்தது சாதனை ஆட்சியா? வெள்ளத்தில் மக்களை தத்தளிக்க வைத்தவர். ஏழைகள் மட்டுமல்ல... பணக்காரர்கள், நடுத்தர மக்களும் தண்ணீரில் தத்தளித்தனர். இதுதான் சாதனையா?

காமராஜர் செய்த ஆட்சிதான் நல்ல ஆட்சி. ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் தலைமுதல் வால் வரை லஞ்ச ஊழலில் திளைக்கின்றனர்
திமுக, அதிமுகவும் லஞ்ச ஊழலில் திளைத்த கட்சிகள் என்று கூறினார் பிரேமலதா.

திமுகவை அண்ணா வளர்த்தார்... திமுகவில் இருந்து பிரிந்து வளர்ந்த கட்சி என்று முதன்முறையாக திமுகவை விமர்சனம் செய்தார் பிரேமலதா.

இது லஞ்சம் ஊழலில் வளர்ந்த கட்சியல்ல. அனைவரும் சொந்த செலவில் மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கின்றனர் என்றும் கூறினார் பிரேமலதா.

சொந்த செலவில் மாநாட்டில் பங்கேற்க வந்த தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று கூறிய பிரேமலதா, இது தலையா, கடல் அலையா என்று தொண்டர்களைப் பார்த்து கேட்டார்.

இது பிரியாணி கொடுத்து பீர் கொடுத்து கூட்டிய கூட்டமல்ல. இது காசுக்காக கூடிய கூட்டமல்ல என்றும் பிரேமலதா பேசிக்கொண்டிருக்கும் போதே மேடைக்கு வந்தார் விஜயகாந்த்.

அக்னியாய் நாம் பேசிக்கொண்டிருக்கும் போதே நம் கேப்டன் வந்துள்ளார் என்று கூறிய பிரேமலதா, கூட்டணி பற்றி நான் பேச மாட்டேன் என்று கூறிவிட்டு அதிமுக ஆட்சியில் முட்டையில் ஊழல்,கோகோ கோலா ஆலைக்கு இடம் ஒதுக்கியதில் ஊழல் என்று பட்டியலிட்டார்.

ஜெயலலிதா புத்திசாலியா? சிறந்த நிர்வாகியா? என்று கேட்ட பிரேமலதா, ஜெயலலிதா ஒரு பூஜ்ஜியம், அவர் சிறந்த நிர்வாகியல்ல என்றும் சாடினார்.

நம் கேப்டன் 'கிங்'ஆக இருக்க வேண்டுமா? 'கிங் மேக்கராக' இருக்க வேண்டுமா என்று மூன்றுமுறை கேட்டார். கடைசியில் நமது கேப்டன் 'கிங்' ஆகத்தான் எப்போதும் இருப்பார், இருக்கவேண்டும் என்று எதையோ சூசசமாக உணர்த்திவிட்டு அமர்ந்தார்.

English summary
DMDK leader Premalatha asked the people to throw out theJaya govt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X