For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தத் தீர்ப்பால் ஜெவுக்கு மேலும் ஆதரவு அதிகரிக்கும் - துக்ளக்கில் சோ தலையங்கம்

By Shankar
Google Oneindia Tamil News

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வந்துள்ள தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த வாய்ப்பாக கருத முடியாது. மாறாக தமிழக அரசியல் எதிர்காலத்துக்கு வந்த சோதனை என்றுதான் கருத வேண்டும் என துக்ளக் பத்திரிகையில் தலையங்கம் எழுதியுள்ளார் சோ ராமசாமி.

ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் என்று மீடியாவால் வர்ணிக்கப்படுபவர் சோ எஸ் ராமசாமி. மூத்த வழக்கறிஞரும் கூட.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெற்றுள்ள தண்டனை குறித்து அவர் தனது துக்ளக் பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:

பதினெட்டு வருடங்களாக நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் - ஆகியவற்றின் அடிப்படையில் பெங்களூரு விசேஷ நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்மானித்து, அவருக்கு நான்கு ஆண்டு சிறைவாசமும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது; ஜெயலலிதாவுடன் கூட மூன்று பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

Thuglak Cho's editorial about Judgement against Jayalalithaa

தங்கள் முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருந்தாலும், அந்த ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு இப்படி மட்டும்தான் அமையும் என்று சொல்லிவிட முடியாது.

அதே ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்திருக்க முடியும். அப்படி ஒரு தீர்ப்பு வருவதற்குப் போதுமான ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக வழக்கின் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இப்போது வந்துள்ள தீர்ப்பைப் பாராட்டி, 'நீதிபதி நேர்மையாளர், துணிவு மிக்கவர்' என்றெல்லாம் கருத்துககள் கூறப்பட்டு வருகின்றன. 'குற்றம் எதுவும் நடக்கவில்லை' என்று தீர்ப்பு வந்திருந்தால், இந்த மாதிரி பாராட்டுகள் வந்திருக்காது.

அதாவது 'ஜெயலலிதா குற்றவாளி என்று கூறி அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தின் நேர்மையே சந்தேகத்துக்குரியதாகிவிடும்' எனும் அளவுக்கு வெளியே பிரச்சாரம் நடந்தது. அந்த மாதிரி சந்தேகத்துக்கிடமளிக்காத வகையில் இப்போதைய தீர்ப்பு அமைந்திருக்கிறது.

தீர்ப்பு இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று நாம் உட்பட பலரும் எதிர்ப்பார்க்கவில்லை. திமுக மட்டும் எதிர்ப்பார்த்தது. இதையே நம்பியிருக்கிற அளவுக்கு அக்கட்சியின் தலைவரும், அம்மாதிரி எதிர்ப்பார்ப்புடனேயே கருத்துக்களைக் கூறி வந்தார். இவர்கள் எப்படி இந்த மாதிரி நிலைப்பாட்டுக்கு முன்கூட்டியே வந்தனர் எனபது நமக்குத் தெரியவில்லை. இதற்கு மேல் இதுபற்றி விவாதித்துக் கொண்டு போனால் அது நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆபத்தான எல்லைக்குள் நுழைவதாகிவிடும்.

சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பற்றி, தாங்கள் கொடுத்த விவரங்களை வருமான வரி இலாகா ஏற்றுக் கொண்டுள்ளது என்ற ஜெயலலிதா தரப்பு வாதத்தை நீதிமன்றம் பரிசீலித்ததா இல்லையா என்று தெரியவில்லை. தீர்ப்பின் முழு விவரங்கள் வெளியாகிறபோதுதான், இதுபற்றியெல்லாம் நாமும் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

இப்போது வந்திருக்கிற தீர்ப்பு இந்த விவகாரம் பற்றிய ஒரு இறுதியான முடிவல்ல. அப்பீல் இருக்கிறது. அதில் மறுபரிசீலனை நடக்கும். அப்போது இன்றைய தீர்ப்பு ரத்தாகக் கூடிய வாய்ப்பும் உண்டு. ஜெயலலிதா தொடர்பான வழக்குகளிலேயே கூட, ஓரிரு வழக்குகளில் கீழ்கோர்ட் விதித்த தண்டனை, அப்பீலில் ரத்தாகியுள்ளது. அம்மாதிரி வாய்ப்புகள் இருக்கிற சூழ்நிலையில், அவருடைய அரசியல் வாழ்க்கையே ஒரு பெரும் சோதனைக்கு உள்ளாகிவிட்டது போல் நினைக்க வேண்டிய அவசியமில்லை.

சொல்லப் போனாலி, அவருக்கு மக்களிடையே ஏற்கெனவே உள்ள அபரிமிதமான ஆதரவு, இந்தத் தீர்ப்பின் மூலம் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் உண்டு. ஏனென்றால் தீர்ப்பின் கடுமை மக்களிடையே ஜெயலலிதா பக்கம் ஒரு அனுதாப சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறது. ஆகையால் இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திவிட்டதாக திமுக கருதிக் கொள்ள முடியாது. இந்த வழக்கோடு 2ஜி சமாச்சாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அக்கட்சியை நிராகரிக்கிற மனநிலையிலிருந்து மக்கள் மாறாமல் இருப்பார்கள் என்றுதான் எதிர்ப்பார்க்க முடியும்.

இப்போது ஒரு புதிய முதல்வரின் கீழ் அமைகிற அதிமுக அரசு, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன்தான் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த திமுக ஆட்சியின்போது மாநிலத்திலும், மத்தியிலும் அரங்கேறிய அரசியல் அவலங்களும், ஊழல் விவகாரங்களும் மக்கள் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.

இங்கு அமையவிருக்கிற அரசு செயல்படுகிற விதத்தின் மூலமாக, திமுகவுக்கு மீண்டும் செல்வாக்கு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்தத் தீர்ப்பின் காரணமாக தமிழக அரசியல், குழப்பத்தைச் சந்திக்க நேரிடலாம்.

அந்தக் கோணத்தில் பார்க்கிறபோது, இந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பின்டைவோ, இல்லையோ - தமிழக அரசியல் எதிர்காலத்துக்கு, ஒரு சோதனை காலமாகிவிடும்.

நன்றி: சோ, துக்ளக்

English summary
In his Editorial for Thuglak weekly, Cho S Ramaswamy says that the verdict against Jayalalithaa in wealth case is a big setback for Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X