For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமளி துமளிகள்... வெளிநடப்புகள் ஓய்ந்தது: சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்ததை முன்னிட்டு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகள், அமளி துமளிகள், வெளிநடப்புகள், புறக்கணிப்புகள் என இந்த கடைசி கூட்டத்தொடரில் அரங்கேறின.

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடைசி கூட்டத்தொடர் கடந்த 16ம்தேதி தொடங்கியது. முதல் நாளில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், மறுநாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களிலும் விவாதம், பதிலுரை மற்றும் முதல்வரின் அறிவிப்புகள் என முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

TN Assembly session has been postponed

முதல் இரண்டு நாட்கள் கூட்டத் தொடரில் பங்கேற்ற திமுக, தேமுதிக கட்சி உறுப்பினர்கள் பின்னர் சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

14வது சட்டப்பேரவையின் இறுதி கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று உறுப்பினர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து 2015-16ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீட்டினை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதில் மொத்தம் ரூ.10,605 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்-சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.3,039 கோடியே 24 லட்சம் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் குடிசை வாழ் குடும்பங்களை மறு குடியமர்த்த வசதிகள் செய்ய குடிசை மாற்று வாரியத்துக்கு சிறப்பு மானியமாக ரூ.107 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் பட்ஜெட் விவாதத்திற்கு பதிலுரை வழங்கினார். இறுதி நாளான இன்று உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்றைய அலுவல்கள் முடிந்ததும் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதையடுத்து சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

English summary
The Tamil Nadu assembly session has been postponed without mentioning the next assembly session date
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X