For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"வெண்ணிற" ஆடை முதல் "பச்சை" ஆடை வரை – ஜெ.வின் வாழ்க்கைப் பயணம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான தருணங்கள் இவைதான்.

முதன்முதலில் 1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி திரை நட்சத்திரமாக பல ஆண்டுகள் ஜொலித்தார்.

1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதா, 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

TN CM Jayalalitha’s way of life

1983 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவர் மேற்கொண்ட பிரச்சாரம் அக்கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

சத்துணவு திட்டத்திற்கான உயர்மட்டக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்த ஜெயலலிதா 1984 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஜெயலலிதா தமிழகமெங்கும் மேற்கொண்ட சூறாவளி சுற்றுபயணமும் எம்.ஜி.ஆரை மீண்டும் முதல்வராக்குவோம் என்கிற சூளுரையும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

அந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து எம்.ஜி.ஆர் மீண்டும் முதலமைச்சர் ஆனார். எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தது.

இந்த சூழ்நிலையில் 1989 ஜனவரியில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி தனித்துப் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை பெற்றது.

அந்த தேர்தலில் அவர் போடி நாயக்கனூர் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989 ஆம் ஆண்டு பிப்ரவரியில், அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தது. ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989 ஆம் ஆண்டு அதிமுகவிற்கு மீண்டும் இரட்டை இலை சின்னத்தை அவர் மீட்டுக் கொடுத்தார்.

1989 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டிலும், புதுவையிலும் அதிமுக காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஜெயலலிதா அரசியல் வாழ்வில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.

அதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு மருங்காபுரி, மதுரை கிழக்கு, பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது.

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மரணமடைந்த சூழ்நிலையில் அதிமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெற்று மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 225 தொகுதிகளைக் கைப்பற்றியது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக முதல் முறையாக இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது.

தான் போட்டியிட்ட பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று 1991 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி தமிழகத்தின் முதல் அமைச்சராக முதல் முறையாக பொறுப்பேற்றார்.

ஊழல் குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் சேர்த்து நடைபெற்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.

ஒரு எம்.பி.தொகுதியில் கூட வெற்றிபெறாத அதிமுக 4 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வி அடைந்தார். ஜெயலலிதா வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியைத் தேடித் தந்த தேர்தலாக இந்த தேர்தல் அமைந்தது.

தோல்வியால் துவண்டுவிடாத ஜெயலலிதா சவால்களை சமாளித்து இரண்டே ஆண்டுகளில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை 30 இடங்களில் வெற்றிபெறச் செய்தார். அதிமுக 18 இடங்களில் வெற்றி பெற்றது.

ஒரே ஆண்டில் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த அதிமுக 10 இடங்களில் மட்டுமே வென்றது.

2001 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக தமிழகத்தில் 132 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது.

2001 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றார்.

டான்சி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதலமைச்சர் பதவியிலிருந்து 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜினாமா செய்தார்.

டான்சி ஊழல் வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் 2002 ஆம் ஆண்டும் மார்ச் 2 ஆம் தேதி தமிழகத்தின் முதல் அமைச்சராக மூன்றாவது முறையாக பதவியேற்றார்.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. இந்த தேர்தலில் அந்த கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை.

2006 ஆம் ஆண்டு தேர்தலில் மதிமுக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 69 இடங்களே கிடைத்தது. திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றது.

2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்வியே காத்திருந்தது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் 12 இடங்களையும் திமுக கூட்டணி 27 இடங்களையும் கைப்பற்றியது.

மூன்று தொடர் தோல்விகளால் துவண்டுவிடாமல் அதிமுகவிற்கு புத்துணர்வூட்டி தோல்விப் பாதையிலிருந்து மீட்டெடுத்து 2011 ஆம் ஆண்டு அக்கட்சிக்கு மிகப்பெரும் வெற்றியைத் தேடித் தந்தார்.

அந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தல் களம் கண்டது. அந்த கூட்டணிக்கு 203 இடங்கள் கிடைத்தது. அதிமுக மட்டும் 150 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2011 ஆம் ஆண்டு மே மாதம் 16ந்தேதி தமிழகத்தின் முதலமைச்சராக 4 ஆவது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்றுக்கொண்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 2014 ஆம் ஆண்டு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையால் ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவியும் எம்.எல்.ஏ பதவியும் ரத்தானது.

இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டில் ஜெயலலிதா நிரபராதி என கடந்த 11 ஆம்தேதி நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

இதனால் முதலமைச்சர் பதவி வகிக்க ஜெயலலிதாவிற்கு இருந்த தடை நீங்கிய நிலையில் இன்று தமிழகத்தின் முதலமைச்சராக 5 ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ளார் ஜெயலலிதா.

English summary
Tamil Nadu CM Jayalaitha’s life journey from vennira adai to Central minister today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X