For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேயர்கள், பஞ். தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊழியர்கள் மீதான புகார்களை விசாரிக்க தீர்ப்பாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மீதான குற்றச்சட்டுகளை விசாரிக்க தமிழக அரசு தீர்ப்பாயம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் ரோசய்யாவின் ஒப்புதலுடன், தமிழக அரசின் சட்டத்துறை செயலாளர் இதனை அரசிதழில் வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் முதன்மை செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரி ஒருவர் அந்த தீர்ப்பாயத்தின் நீதிபதியாக செயல்படுவார் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசரச் சட்டம் என்பதால், அது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

TN governor constitute tribunal to probe corruption charges of local body

இதுகுறித்து, அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி (ஊராட்சி கிடையாது) ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அளவில் விசாரணை அதிகாரியை அமர்த்துவது அவசியமாகிறது. அதன் அதிகாரிகள், ஊழியர்கள், மேயர், துணை மேயர், தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் மீது எழும் குற்றச்சாட்டுகள், முறைகேட்டுப் புகார்களை விசாரிப்பதற்காக, அவசரச் சட்டம் மூலம் விசாரணை அதிகாரி நியமிக்கப்படுகிறார்.

முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், முதன்மைச் செயலாளர் நிலைக்குக் குறையாத அதிகாரி ஒருவர், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர் மூன்றாண்டுகள் காலத்துக்கு பணியாற்றுவார்.

எழுத்து மூலம் அரசு புகார் அளித்தாலோ, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், ஊழியர்கள், பிரதிநிதிகளின் தவறான நிர்வாகம், ஊழல் முறைகேடுகள் பற்றிய தகவல் அளிக்கப்பட்டாலோ, விசாரணையை அந்த அதிகாரி மேற்கொள்ளலாம்.

உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த ஊழியர் செய்திருக்கும் முறைகேடு கிரிமினல் குற்றமாக இருந்தால், அதை சம்பந்தப்பட்ட துறைக்கு விசாரணைக்காக அந்த அதிகாரி அனுப்பலாம். உள்ளாட்சி அமைப்பின் ஊழியர், அதிகாரிகள் வேண்டுமென்றே கடமை தவறும் பட்சத்தில், அவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் துறை ரீதியான விசாரணை நடத்த பரிந்துரைக்கலாம்.

தவறான செயல்பாட்டின் காரணமாக உள்ளாட்சி அமைப்புக்கு நிதி இழப்பு நேரிட்டிருந்தால், அந்த ஒழுங்கீனத்துக்குக் காரணமான நபரிடம் இருந்து அதைத் திரும்ப வசூலிப்பதற்கு அவர் உத்தரவிடலாம்.

சிவில் வழக்கு விசாரணை சட்டத்தின் அடிப்படையில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்குள்ள அனைத்து அதிகாரமும் விசாரணை அதிகாரிக்கு உள்ளது. குற்றச்சாட்டைக் கூறும் புகார்தாரர், சாட்சிகளுக்கு நோட்டீஸ் அளித்து விசாரணைக்கு வரவழைக்கவும், சத்தியப் பிரமாணம் செய்த பிறகு சாட்சி அளிக்கவும் உத்தரவிடலாம். விசாரணை அதிகாரி தனக்குத் தேவையான ஆவணங்களைக் கோரலாம்.

சாட்சியங்களை எழுத்து மூலம் பெறலாம். நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்களில் இருந்து ஆவணங்களை கேட்டுப் பெறலாம். குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நிவாரணத் தொகையை வழங்க புகார்தாரருக்கு உத்தரவிடலாம்.

முறைகேட்டின் மூலம், உள்ளாட்சி அமைப்புக்கு இழப்பு ஏற்படுத்தியவர்களுக்கு, அதை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டும், குறித்த காலத்தில் அவர் அதைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், தமிழ்நாடு வருவாய் மீட்புச் சட்டத்தின் கீழ் அந்தத் தொகையை மீட்கவும் செய்யலாம்.

விசாரணை அதிகாரி, இடைக்காலத்தில் பதவி விலக நேரிட்டால், தனது ராஜினாமா கடிதத்தை எழுத்து மூலம் ஆளுநருக்கு அளிக்கலாம். தகுதியின்மை அல்லது முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால், அவரை நீக்கம் செய்வது குறித்து சட்டப்பேரவையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, அதன் அடிப்படையில் அவரை நீக்க ஆளுநர் உத்தரவிடலாம்.

English summary
Tamil Nadu governor has constituted a tribunal to probe the corruption charges on the representation of the local bodies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X