For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

12,347 ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் நியமன ஆணை: பணியில் உடனடியாக சேர தமிழக அரசு உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கு நேற்று ஒரே நாளில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறைக்கு 10,531 பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி துறைக்கு 167 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 12,347 பேர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு, கடந்த 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்தது.

கலந்தாய்வின் கடைசி நாளன்று பணிநியமன ஆணை வழங்கப்பட இருந்தது. இந்நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஆசிரியர் பணிநியமன ஆணை வழங்குவதற்கு தடை விதித்தது.

இதன் காரணமாக, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்ய பட்டதாரி ஆசிரியர் களுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி ஒதுக்கீட்டு ஆணை மட்டும் வழங்கப்பட்டது. யாருக்கும் நியமன ஆணை வழங்கப்படவில்லை.

இதற்கிடையே, பணிநியமன ஆணை வழங்குவதற்கு விதித்திருந்த தடையை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமையன்று நீக்கியது.

இதைத்தொடர்ந்து, 12,347 ஆசிரியர்களுக்கும் ஏற்கெனவே கலந்தாய்வு நடந்த மையங்களில் நேற்று பிற்பகல் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

பள்ளிக்கல்வித் துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் இருந்தும், தொடக்கக்கல்வித் துறைக்கு பணிவாய்ப்பு பெற்றவர்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளிடமும் நியமன ஆணையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

80 இடங்கள் காலியாக வைக்க உத்தரவு

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிராகவும், இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாதது உட்பட பல்வேறு நிவாரணங்கள் கோரி தாக்கலான 73 மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் ஆஜராகி, "நீதிமன்றம் விதித்துள்ள தடையால் மாநிலத்தில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமன நடைமுறைகள் தடைபட்டுள்ளன.

மனுதாரர்கள் 73 பேருக்காக 14 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே தடையை நீக்க வேண்டும். பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.

இதையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை பட்டதாரி, இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 80 இடங்களை காலியாக வைக்க வேண்டும். எஞ்சிய பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

English summary
Tamil Nadu Government ordered 12,347 teachers appoinment and the immediate join in the work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X