For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொந்த நிறுவனங்களையே தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையே அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் இந்நிலையில், எவ்வாறு தனியார் நிறுவனங்களை அரசு தன் கட்டுக்குள் கொண்டுவரும் என்றும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது...

M.K.Stalin

பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் மோசமான முறைகேடுகள் நடந்து வருவதாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். மின் பற்றாக்குறைக்காக விநியோகிப்பாளர்களிடமிருந்து இழப்பீட்டை பெறாததால் அரசு கருவூலத்துக்கு தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 280.37 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், நீண்ட கால அடிப்படையில் மின்சார கொள்முதல் திட்டத்தை வகுக்காமல், மின் பற்றாக்குறைக்கும் டேன்ஜெட்கோ வழிவகுத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அதிகபட்ச தேவை இருப்பினும், அதற்காக 2012-2013 மற்றும் 2013-2014 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 3,000 கோடி ரூபாய் நிதியிலிருந்து ஒரு ரூபாயை கூட உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களில் பெரும்பாலானவை மாசு கட்டுப்பாட்டு விதிகளை காற்றில் பறக்கவிட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் செயலாற்றி வருவதையும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கண்டுபிடித்துள்ளார். தன்னுடைய சொந்த நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதையே கட்டுப்படுத்த முடியாத மாநில அரசு, எவ்வாறு தனியார் நிறுவனங்களை தன் கட்டுக்குள் கொண்டுவரும்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடியாத தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையையும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநில அரசின் ஆணைகளை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையை பின்பற்றாத காரணத்தால், சாலை திட்டங்கள் தாமதமாவதோடு, அதனால் 299.34 கோடி ரூபாய் நிதியும் முடக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை பொறுத்தவரை, காவிரி டெல்டாவில் உள்ள 38,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளை உள்ளடக்கிய 30,000 ஏக்கர் நிலங்களை, யுனிவர்சல் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாநில அரசு கொண்டுவராமல் விட்டுவிட்டதால் அரசு கருவூலத்துக்கு 28.54 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன் மீது மாநில அரசு எந்த அக்கறையுமின்றி நடந்து வருவதால், தமிழகம் படுபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகிறோம்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை எங்களது குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்தியுள்ளது. எனவே, அ.தி.மு.க. அரசின் பொய்யான அறிக்கைகளை நம்ப வேண்டாமென்றும், யதார்த்தை புரிந்து கொண்டு, விழிப்புடன் நடந்து கொள்ளுமாறும் நான் தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
TN govet couln't control even it's own companies? Says M.K.Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X