For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடுமாறும் தமிழக அரசும், அரசியல் சாசன நெருக்கடியும்- ஆர். மணி

By R Mani
Google Oneindia Tamil News

சென்னை: தற்போதய நிலையில் தமிழக அரசு நிருவாகம் ஒரு முழு அளவிலான அரசியல் சாசன நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர் அரசியல் சாசன சட்டத்தை நன்கறிந்த (constitutional experts) வழக்கறிஞர்கள். அக்டோபர் 11 ம் தேதி இரவு, தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து விடுக்கப் பட்ட ஒரு அறிக்கையில் முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பு வகிக்கும் எல்லா இலாக்காக்களும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. ''மாண்புமிகு முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் இந்த உத்திரவை ஆளுநர் பிறப்பிக்கிறார்'' என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் வசம் உள்ள அனைத்து இலாக்காக்களும், ஐஏஎஸ், ஐபிஎஸ், காவல் துறை, பொது நிருவாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இனிமேல் ஓபிஎஸ் தான் கவனிக்க விருக்கிறார். அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் ஓபிஎஸ் தான் தலைமை வகிப்பார் என்று தெளிவாக ஆளுநர் அறிக்கையில் கூறப் பட்டிருக்கிறது.

இது கடுமையான சட்டச் சிக்கலை, அரசியல் சாசன நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக விவரம் அறிந்த மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். முதலாவது ஜெயலலிதா வின் தற்போதய உடல் நிலையில் அவரால் ஆளுநருக்கு எப்படி ஆலோசனை சொல்ல முடியும் என்பது. இரண்டாவது முதலமைச்சர் வகித்து வந்த எல்லா இலாக்காக்களையும் ஓபிஎஸ் ஸிடம் கொடுத்தாலும் அவரால் முதலமைச்சர் மட்டுமே எடுக்கக் கூடிய முடிவுகளை எடுக்க முடியாது, முதலமைச்சர் என்ற அந்தஸ்த்தில் கையெழுத்துக்களை போட முடியாது என்பது.

TN govt. faces constitutional crisis?

''செப்டம்பர் 22 ம் தேதி முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். எவரும் முதலமைச்சரை சந்தித்ததாக தகவல் வரவில்லை. அப்படியிருக்கையில் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் இந்த ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக சொல்லப் படுவதை எப்படி புரிந்து கொள்ளுவது? அது என்ன மாதிரியான ஆலோசனை வாய் மொழி ஆலோசனையா அல்லது எழுத்து பூர்வமான ஆலோசனையா?'' என்று ஒன் இந்தியாவிடம் கேட்கிறார் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன்.

இரண்டாவது இந்த ஏற்பாடே அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என்கிறார் விஜயன். ''பொறுப்பு முதலமைச்சர் என்ற வார்த்தையெல்லாம் அரசியல் சாசனத்தில் இல்லை. ஆளுநர் மூன்று விதங்களில் முடிவுகளை எடுக்கலாம். ஒன்று அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில், இரண்டாவது தன்னிச்சையாக முடிவு எடுப்பது (1995 ஏப்ரலில் முதலமைச்சர் ஜெயலலிதா வுக்கு எதிராக வழக்கு தொடர சுப்பிரமணியன் சுவாமி க்கு அனுமதி கொடுத்தது போன்று) மூன்றாவது ஒரு நெருக்கடியான கட்டத்தில் அரசியல் சாசன பிரிவு 162 ன் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் படி முடிவு எடுப்பது. தற்போது முதலமைச்சர் ஜெ வின் ஆலோசனை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் முதலமைச்சர் மட்டுமே கையெழுத்து போட வேண்டிய கோப்புகளில் நிச்சயமாக ஓபிஎஸ் கையெழுத்து போட முடியாது. முதலமைச்சராக பொறுப்பு ஏற்காத வரையில் ஓபிஎஸ் ஸால் முதலமைச்சரின் இலாக்காக்களை வேண்டுமானால் கவனிக்கலாம், கோப்புகளைப் பார்க்கலாம். அவற்றில் கையெழுத்து கூட போடலாம். ஆனால் முதலமைச்சர் மட்டுமே செய்யக் கூடிய அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமையிலிருந்து வரக்கூடிய காரியங்களை அவரால் ஒரு போதும் செய்ய முடியாது'' என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் விஜயன்.

இதில் தற்போது உடனடியாக வரக்கூடிய சிக்கல் உள்ளாட்சித் தேர்தல்கள் தள்ளிப் போயிருப்பதால் இன்னும் சில நாட்களில் அவசர சட்டம் போடப் பட வேண்டிய விவகாரம். அக்டோபர் 24 ம் தேதி நள்ளிரவுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைகிறது. ஏற்கனவே அக்டோபர் 4 ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்த போது, அவற்றின் நிருவாகத்திற்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆகவே அக்டோபர் 24 ம் தேதிக்கு முன்பாக அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இது அவ்வளவு சுலபம் அல்ல என்று கூறப்படுகிறது.

முதலில் இந்த அவசர சட்டத்துக்கான வரைவை மாநில சட்டத்துறை உருவாக்க வேண்டும். பின்னர் அது உள்ளாட்சி நிருவாகத் துறைக்கு அனுப் பட வேண்டும். அதன் பின்னர் ஆளுநருக்கு அந்த பரிந்துரை அனுப்ப படுவதற்கு முன்னால் முதலமைச்சரின் கையெழுத்து அதில் இடப் பட வேண்டும். ''தற்போதய சூழ்நிலையில் முதலமைச்சரின் கையெழுத்து பெறப் படமுடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஏனெனில் செப்டம்பர் 22 ம் தேதியிலிருந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் செயற்கை சுவாசத்தில் இருக்கிறார். அவருக்கு பேசிவ் ஃபிசியோதெரபி, அதாவது கை,கால்களை, தசைகளை மற்றவர்கள் உதவியுடன் அசைக்கும் பயிற்சி கொடுக்கப் படுகிறது என்பது அப்போல்லோ மருத்துவமனை அக்டோபர் 3 ம் தேதி மற்றும் 8 ம் தேதி அளித்திருக்கும் பத்திரிகை செய்திகளில், மருத்துவ அறிக்கைகளில் தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது'' என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

அப்படியென்றால் தமிழகம் ஒரு அரசியல் சாசன நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. இதற்கு வழக்கறிஞர் விஜயன் இவ்வாறு பதிலளிக்கிறார். ''நாம் ஏற்கனவே ஒரு முழு அளவிலான அரசியல் சாசன நெருக்கடியில் நின்று கொண்டிருக்கிறோம்''. அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? ''முதலில் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு, புதியதாக சட்டமன்ற அஇஅதிமுக சார்பில் ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும். அதன் பின்னர் அவரது ஆலோசனையின் பேரில் அமைச்சர்கள் நியமிக்கப் பட வேண்டும். ஜெயலலிதா குணமாகி வந்த பின்னர் அவரே மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்ளலாம். ஆனால் இதனை செய்யாமல் வேறு எந்த மாற்று ஏற்பாடுகள் செய்தாலும் தற்போதய சூழலில் அது அரசியல் சாசன நெருக்கடியில் மட்டும்தான் முடியும்'' என்கிறார் விஜயன்.

ஆனால் வேறு சில ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் தற்போதய ஏற்பாட்டில் சட்டச் சிக்கல் ஏதுமில்லை என்று கூறுகின்றனர். ஆனால் அவர்களும் முதலமைச்சர் செய்யும் எல்லா காரியங்களையும் ஓபிஎஸ் செய்து விட முடியாது என்றே கூறுகின்றனர். ''அமைச்சரவை கூட்டங்களுக்கு ஓபிஎஸ் தலைமை தாங்கப் போகிறார். அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் முடிவுகளை எடுப்பார். முதலமைச்சர் செய்ய வேண்டிய பணியை, ஓபிஎஸ் செய்யப் போகிறார். இதில் எந்த தவறும் இல்லை என்றுதான் பார்க்கிறேன். ஆனால் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக நேற்றைய ஆளுநர் செய்திக் குறிப்பு சொல்லுவது நம்ப முடியாதது. இது ''முதல் பொய்'' (first lie) என்றே கருதுகிறேன். மேலும் இந்த ஏற்பாடு நீண்ட நாட்கள் தொடர முடியாது. அரசியல் ரீதியில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும்போதுதான் விவகாரம் வெடிக்கும். மாலுமி இல்லாத கப்பல் நீண்ட நாட்கள் ஓட முடியாது'' என்று ஒன் இந்தியாவிடம் கூறினார் ஹரியாணா மாநிலத்தின் ஓய்வு பெற்று தலைமைச் செயலாளர் எம்.ஜி. தேவசஹாயம்.

2001 ம் ஆண்டு செப்டம்பர் 21 ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா பதவியேற்றது செல்லாதென்று தீர்ப்பளித்தது. பின்னர் ஜெ மீண்டும் டான்சி வழக்கில் வென்று 2002 மார்ச்சில் பதவியேற்றார். பின்னர் 2014 செப்டம்பரில் நீதிபதி மைக்கேல் டீ ஜான் குன்ஹா வால் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெ பதவியிழந்தார். மீண்டும் மே 2015 ல் முதலமைச்சராக வழக்கில் வென்று பதவியேற்றார். இந்தக் காலகட்டங்களில் ஓபிஎஸ் தான் முதலமைச்சராக இருந்தார். ஆனால் அப்போதயை சூழலுக்கும் தற்போதய சூழலுக்குமான வித்தியாசம் அன்றைய கால கட்டத்தில் அவர் முழு அளவிலான முதலமைச்சராக இருந்தார். தற்போது முதலமைச்சரின் இலாக்காக்களை கவனிக்கும் அமைச்சராகவும், அமைச்சரவை கூட்டங்களுக்குத் தலைமை தாங்கும் அமைச்சராகவும் இருக்கிறார். இதில் தற்போதைக்கு நிருவாகச் சிக்கல் இல்லாமல் அரசு நிருவாகம் என்கின்ற வண்டியை சில காலத்துக்கு ஓட்டலாம் தான். ஆனால் முதலமைச்சரின் பணி என்பது அரசு நிருவாகம் மட்டுமல்ல, வலுவான அரசியல் முடிவுகளை எடுப்பதும் தான். அரசியல் முடிவுகள் எடுக்கப் படாமல் நிரந்தரமாகத் தள்ளிப் போவதும், கால தாமதம் ஆவதும், நிருவாக்தைச் சிதைத்து சின்னா பின்னாமாக்கும்.

அரசியல் ரீதியிலும் அஇஅதிமுக வுக்கு பெரிய பிரச்சனைகள் காத்திருக்கின்றன என்றுதான் கூறப்படுகிறது. தமிழகத்தில் மூன்று சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெற விருக்கின்றன. இதில் ஒரு அஇஅதிமுக எம்எல்ஏ இறந்து போனதால் வெற்றிடமான திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் வரும் நவம்பர் 16 ம் தேதிக்குள் நடத்தப் பட வேண்டும். தேர்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப் பட்ட தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தேர்தல்கள் எப்போது நடத்தப் பட வேண்டும் என்பது பற்றி தெளிவாக சட்டத்தில் சொல்லப் படவில்லை. ''ஆம். தொகுதி காலியானால் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்று இருக்கிறது. இது ஒரு எம்எல்ஏ இறந்து போனால் வரும் நிலைமை. ஆனால் பணப் பட்டுவாடா போன்ற விவகாரங்களால் தேர்தல்கள் ரத்து செய்யப் படும் தொகுதிகள் பற்றிய விஷயத்தில் சட்டம் அமைதி காக்கிறது, அது மங்கலான விவகாரமாக அதாவது "grey area" வாக இருக்கிறது. இந்த தேர்தல்களில் அஇஅதிமுக வுக்கு ஒதுக்கப் பட வேண்டிய இரட்டை இலை சின்னம் பற்றிய கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு பொதுச் செயலாளர் என்கின்ற முறையில் ஜெ தான் கொடுக்க வேண்டும்.

அது தற்போது நடக்குமா என்பதுதான் கேள்வி'' என்கிறார் பெயர் கூற விரும்பாத பத்திரிகையாளர் ஒருவர். ஆனால் வேறு சிலர் அஇஅதிமுக வின் உள் விதிகள் படி பொதுச் செயலாளர் மட்டுமின்றி வேறு சிலரும் இதனை கொடுக்கலாம் என்று இருந்தால் அப்போது பிரச்சனை வராது என்கின்றனர். ''இதில் அஇஅதிமுக வின் பை லா எனப்படும் உட் கட்சி விதிமுறைகள் என்ன சொல்லுகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும்'' என்கிறார் தேவசஹாயம்.

முழு அளவிலான அரசியல் சாசன, நிருவாக, அரசியல் நெருக்கடியை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது ................

English summary
Here the Journalist Mani's article on "TN govt. faces constitutional crisis"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X