For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்துல் கலாம் நினைவிடம் அமைக்கத் தேவையானதை விட அதிக அளவு நிலத்தை ஒதுக்குக- அன்புமணி

Google Oneindia Tamil News

சென்னை: அப்துல் கலாமின் நினைவிடம் அமைக்கத் தேவையானதை விட அதிக அளவு நிலத்தை ஒதுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைக்க 5 ஏக்கர் நிலம் தேவை என்று மத்திய அரசு கோரியது. ஆனால், தமிழக அரசு 1.8 ஏக்கர் நிலத்தை மட்டுமே ஒதுக்கியது என்று மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்ததாக அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது

அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட ராமேஸ்வரத்தில் அவரது நினைவிடம் அமைக்கப்படும்; அதற்கான அடிக்கல் நாட்டும் விழா அவரது முதலாவது நினைவு நாளான வரும் 27-ந் தேதி நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் நினைவிடம் அமைக்கத் தேவையான நிலத்தை ஒதுக்காமல் தமிழக அரசு தாமதம் செய்வதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கின்றன.

அப்துல் கலாம் மறைவு

அப்துல் கலாம் மறைவு

மாணவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுத் தருவதையே தமது லட்சியமாகக் கொண்டிருந்த அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ந் மேகலாயாவின் ஷில்லாங் நகரில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த நிலையிலேயே காலமானார். அதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி, அப்துல் கலாமுக்கு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

பணி தொடங்கப்படவில்லை

பணி தொடங்கப்படவில்லை

தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற அப்துல் கலாமின் 84-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால், அதன்பின் 9 மாதங்களாகியும் நினைவிடம் அமைக்கும் பணி தொடங்கவில்லை.

மனோகர் பாரிக்கரின் பதில்

மனோகர் பாரிக்கரின் பதில்

இது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் டேரக் ஓ பிரையன் எழுப்பிய வினாவுக்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், ''ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைக்க 5 ஏக்கர் நிலம் தேவை என்று மத்திய அரசு கோரியது. ஆனால், தமிழக அரசு 1.8 ஏக்கர் நிலத்தை மட்டுமே ஒதுக்கியது.

இதனால் தான் தாமதம் ஆனது. ஆனால், இனியும் கூடுதல் நிலத்திற்காக மத்திய அரசு காத்திருக்கப்போவதில்லை. அப்துல் கலாமின் நினைவிடத்திற்கான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு விட்டது. அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு நாளான வரும் 27-ந் தேதி அடிக்கல் நாட்டப்படும். இது உறுதி'' என்று தெரிவித்தார்.

நிலம் வழங்க அரசு மறுப்பது ஏன்?

நிலம் வழங்க அரசு மறுப்பது ஏன்?

அதேநேரத்தில் அப்துல் கலாமின் நினைவிடம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தைக் கூட வழங்குவதற்கு தமிழக அரசு மறுப்பதற்கான காரணம் என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்ற முறையில் அப்துல் கலாம் ஆற்றிய பணிகளால் தமிழகத்திற்கு பெருமை கிடைத்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. அதேபோல், தமிழ்நாட்டு மக்களின் மனதில் அவருக்கு என்று தனி இடம் இருக்கிறது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

தமிழக அரசு துரோகம் இழைத்திருக்கிறது

தமிழக அரசு துரோகம் இழைத்திருக்கிறது

அவர் மறைந்த போது தமிழகம் வடித்த கண்ணீர் தான் அப்துல் கலாமுக்கு மக்களிடையே நிலவும் செல்வாக்கிற்கு உதாரணம் ஆகும். அப்படிப்பட்ட தலைவருக்கு நினைவிடம் அமைக்க அரசு தாராளமாக நிலம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் மூலம் தமிழக அரசு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறது.

மறைந்த குடியரசுத் தலைவர்கள் கியானி ஜெயில்சிங், ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர். நாராயணன் ஆகியோருக்கு தில்லியில் 22.50 ஏக்கர் நிலத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைச் எடுத்துக் கொண்டால் எம்.ஜி.ஆருக்கு சென்னை கடற்கரையில் 8.25 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப் பட்டிருக்கிறது. அதற்கு அருகில் அண்ணாவுக்கு கிட்டத்தட்ட அதே பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

மனப்பாற்றாக்குறை

மனப்பாற்றாக்குறை

டெல்லி மற்றும் சென்னையில் நெரிசல் மிகுந்த, நிலம் கிடைக்காத பகுதிகளிலேயே தலைவர்களிடம் நினைவிடம் அமைக்க இந்த அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் 5 ஏக்கர் அல்ல... 50 ஏக்கர் நிலத்தைக் கூட அரசால் ஒதுக்க முடியும். அவ்வாறு செய்யாததற்கு காரணம் மனப்பற்றாக்குறையே தவிர நிலப்பற்றாக்குறையல்ல.

தலைவர்கள் பங்கேற்பு

தலைவர்கள் பங்கேற்பு

அப்துல் கலாமின் உடல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ந் தேதி ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் ரோசய்யா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா ஆகியோரும், தமிழக அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இறுதிச்சடங்கை புறக்கணித்த ஜெ.,

இறுதிச்சடங்கை புறக்கணித்த ஜெ.,

ஆனால், சென்னையிலிருந்த முதல்வர் ஜெயலலிதா இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அப்துல் கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல மாநிலங்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தி திறக்கப்பட்டன.

நாடகத்தின் ஓர் அங்கம்

நாடகத்தின் ஓர் அங்கம்

அப்துல் கலாமை அவமதிக்கும் நோக்குடன் திட்டமிட்டே இவ்வளவும் செய்யப்பட்ட நிலையில், அவரது நினைவிடத்திற்கு நிலம் ஒதுக்காதது மட்டும் இயல்பாக நடந்திருக்க வாய்ப்பில்லை. அதையும் அப்துல் கலாமை அவமதிக்கும் தொடர் நாடகத்தின் ஓர் அங்கமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இடத்தை ஒதுக்க வேண்டும்

இடத்தை ஒதுக்க வேண்டும்

அப்துல் கலாமை அவமதிப்பது என்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதிப்பதற்கு ஒப்பானதாகும். எனவே, இதுபோன்ற மலிவான செயல்களில் ஈடுபடுவதை விடுத்து, அப்துல் கலாமின் நினைவிடம் அமைக்கத் தேவையானதை விட அதிக அளவு நிலத்தை ஒதுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
PMK Youth Wing President Anbumani urged TN Govt., that to give more land for the memorial to Abdul Kalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X