For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல்.. கிலோ ரூ. 55- க்கு விற்பனை: தமிழக அரசு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ரூ55-க்கு விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

TN govt procure onions from other states

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வெளிச்சந்தையில், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் செல்லும் காலங்களில், வெளிச்சந்தை விலை உயர்வினை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாகவும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், நுகர்வோர்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஒரே சீராக கிடைக்கவும், வழி செய்யும் வகையில் "விலை நிலைப்படுத்தும் நிதியம்" ஒன்று 100 கோடி ரூபாய் நிதித் தொகுப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி மற்றும் நல்லெண்ணெய் போன்ற அத்தியவாசியப் பொருட்களின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக இந்த நிதியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் வெளிச்சந்தை விலையினை கட்டுப்படுத்தும் வகையில், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை குறைந்த விலையில் விற்கும் ஒரு விற்பனை திட்டம் 24.5.2015 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

வெளிச் சந்தையில் உயர்ந்து வந்த காய்கறிகளின் விலையினைக் கட்டுப்படுத்தும் வகையிலும், விவசாயிகள் தமது விளை பொருள்களுக்கு நல்ல விலை பெற்றிடவும், ஏழை எளிய நடுத்தர மக்கள் தரமான காய்கறிகளை குறைந்த விலையில் பெற்று பயன்பெறும் வகையில், விவசாயிகளையும் நுகர்வோர்களையும் இணைக்கக் கூடிய மக்கள் சேவைத் திட்டமான பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் 20.6.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் 58 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக தரமான காய்கறிகள் நுகர்வோர்களுக்குகுறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் இரண்டு நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் உள்ளன.

2013- ஆம் ஆண்டு வெங்காயத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்த போது, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து அதிக அளவில் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளின் வாயிலாக குறைந்த விலையில் தரமான வெங்காயம், தங்கு தடையின்றி நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது, பருவநிலை மாறுதலால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்ததால் வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. எனவே, இந்த விலையேற்றத்தின் காரணமாக பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்கும் வகையில் வெங்காய விலையேற்றத்தினை கட்டுப்படுத்த வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயம் கொள்முதல் செய்து, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், நுகர்வோர்களுக்கு தேவையான அளவு வெங்காயம் வெளிச் சந்தையை விட குறைந்த விலையில் தங்கு தடையின்றி வழங்குவதற்காக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் பகுதியிலிருந்தும், மகாராஷ்டிரா மாநிலம் லாசல்கான் பகுதியிலிருந்தும் கூடுதலாக பெரிய வெங்காயம் கொள்முதல் செய்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 42 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக கிலோ 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நடவடிக்கை மூலம் தனியார் விற்பனை நிலையங்களில் 70 ரூபாய் வரை விற்கப்படும் வெங்காயத்தின் விலையை விட குறைவான விலையில் வெங்காயம் பொதுமக்களுக்கு கிடைக்க வழி வகை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெங்காயம் குறைந்த விலையில் நுகர்வோர்களுக்கு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும், தேவைக்கு ஏற்ப, கூடுதல் வெங்காயம் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu govt had procured onions from Other States and sold at Rs 55.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X