For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடி பாக்கி - தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்குக- வேல்முருகன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 27 தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடியை வழங்காமல் இழுத்தடித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.

TN Govt should take over private sugarcane mills : Velmurugan

கரும்பில் இருந்து மொலாசஸ், எரி சாராயம், மின்சாரம், இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு டன் கரும்பில் சர்க்கரை ஆலைக்கு ரூ.8 ஆயிரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு தர வேண்டும் என்று நிர்ணயித்த மிகக் குறைந்தபட்ச தொகையான ரூ2,650 என்பதை முழுமையாகக் கூட தரமறுக்கின்றன தனியார் சர்க்கரை ஆலைகள். இதில் ரூ300ஐக் குறைத்து கரும்பு டன்னுக்கு ரூ 2,350 என்ற அளவில்தான் வழங்குகின்றன. இந்த வகையில் விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ500 கோடி.

ஏற்கெனவே சில தனியார் சர்க்கரை ஆலைகள், லாரிகளில், டிராக்டர்களில் கரும்பை ஏற்றிச் சென்று எடை போடும் போது குளறுபடிகள் செய்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்றன. அதாவது ஒரு லாரியில் 10 டன் கரும்பை விவசாயி ஏற்றினால் எடை போடும்போது 2 டன் குறைத்து 8 டன் என்ற அளவில்தான் இருப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு அதன் மூலமே பல்லாயிரம் கோடிரூபாயை சுருட்டுகின்றன.

இப்படி வஞ்சித்து சம்பாதிக்கும் பல்லாயிரம் கோடி ரூபாயை வேறு தொழில்நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டு விவசாயிகளுக்குத் துரோகம் செய்கின்றன தனியார் சர்க்கரை ஆலைகள்.

அத்துடன் விவசாயிகளிடம் கொள்ளை அடிக்கும் இந்த தனியார் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசிடம் இருந்து ரூ 6ஆயிரம் கோடி அளவுக்கு வட்டியில்லா கடனைப் பெறுகிறது. இந்த வட்டியில்லா கடன் என்பதே விவசாயிகளுக்கு நிலுவையில்லாமல் தொகை வழங்குவதற்காகத்தான். ஆனால் மத்திய அரசின் கடனையும் பெற்றுக்கு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தராமல் தனியார் சர்க்கரை ஆலைகள் வைத்திருப்பது சட்டவிரோதமாகும்.

விவசாயிகளிடம் கொள்ளையடித்தும், அரசு நிர்ணயித்த தொகையையில் குறிப்பிட்ட தொகையைத் தந்துவிட்டு நிலுவைத் தொகையை ஆண்டுக் கணக்கில் தராமல் இழுத்தடித்தும் விவசாயிகளை தனியார் சர்க்கரை ஆலைகள் வஞ்சிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

கரும்பிலிருந்து கிடைக்கும் மூலப்பொருளை கொண்டு தயாரிக்கும் மதுவுக்கு விலை ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் கரும்பைக் கொடுத்த விவசாயிகளுக்கோ அவர்களுக்குச் சேர வேண்டிய தொகை முழுமையாக கிடைக்காமல் ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்திருப்பது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் கரும்புக்கான கொள்முதல் விலை மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் டன் ரூ.3,200, பஞ்சாபில் ரூ.3,020, அரியானாவில் ரூ.3,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலும் ரூ500 கோடி பாக்கி வைத்து தனியார் சர்க்கர் ஆலைகள் கரும்பு விவசாயிகள் வயிற்றில் அடிப்பது வேதனைக்குரியதாகும். தனியார் சர்க்கரை ஆலைகள் உரிய காலத்தில் நிலுவைத் தொகையை தராததால் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமலும் பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.

தற்போதும் கூட 2014-15 அரவை பருவத்துக்கு முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டவில்லை. விவசாயிகள் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கி வரும், விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ500 கோடி அளவு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை உடனே அரசுடைமையாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

விலைவாசி உயர்வு, கூலி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ3,500 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அத்துடன் கரும்பு விவசாயிகள் கூட்டுறவு மற்றும் பொது சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டி அனுப்பவும் சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்.

அதேபோல் விவசாயிகள் கரும்பு வெட்டிய 15 நாட்களுக்குள் ஒட்டுமொத்த நிலுவைத் தொகையை வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

English summary
TVK leader Velmurugan demands that Tamilnadu Govt should take over Private Sugarcane mills which was not paid the balance amount to sugarcane growers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X