For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியார்-அம்பேத்கர் அமைப்புக்கு ஐ.ஐ.டி.யில் தடை- இளைஞர்களிடம் "கலகம்" ஏற்படும்- ஸ்டாலின் "வார்னிங்"

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பெரியார்- அம்பேத்கர் பெயரிலான அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது இளைஞர்களிடத்தில் கலகத்தை ஏற்படுத்தும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்

சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பெரியார்- அம்பேத்கர் பெயரில் வாசகர் வட்டம் ஒன்று இயங்கி வந்தது. இந்த அமைப்பு பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவா கொள்கைகளை விமர்சிப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒரு அனாமதேய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஐ.ஐ.டி. இயக்குநருக்கு மத்திய மனிதவள அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. இத்தகைய மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தும் கருத்துகளை பரப்புவது அதிர்ச்சி அளிக்கிறது; இது தொடர்பாக கருத்தை தெரிவிக்குமாறு ஐ.ஐ.டி. நிர்வாகத்தை அக்கடிதம் கேட்டுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து பெரியார்- அம்பேத்கர் பெயரிலான அந்த வாசகர் வட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதுநாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அங்கீகாரம் ரத்து ஏன்?

அங்கீகாரம் ரத்து ஏன்?

இது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி. சென்னையில் அரங்கேற்றப்பட்டுள்ள சகிப்புத்தன்மையற்ற செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஐ.ஐ.டி. வளாகத்தில் செயல்பட்டு வந்த ‘‘அம்பேத்கார்-பெரியார் மாணவர் வட்டம்'' என்ற அமைப்பின் அங்கீகாரத்தை சமீபத்தில் இந்தக் கல்வி நிறுவனம் ரத்து செய்திருக்கிறது. இந்த மாணவர் வட்டத்தின் சார்பில் மோடி அரசாங்கத்தை விமர்சித்து ஒரு சிறு புத்தகம் வெளியிட்டதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால் வெளி வந்துள்ள செய்திகளின் படி பார்த்தால் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இந்த மாணவர் வட்டத்தின் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே இந்த அங்கீகாரம் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது.

கருத்து சுதந்திரத்தை நெறிப்பது

கருத்து சுதந்திரத்தை நெறிப்பது

மத்திய அரசும், கல்வி நிறுவனமும் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தை நெறிக்கும் செயலாகும். ஒரு கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டில் மத்திய அரசு தேவையற்ற முறையில் தலையிடுவதையே இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று நாம் அனைத்து இளைஞர்களையும் ஊக்கப்படுத்துகிறோம்.

கலகத்தை ஏற்படுத்தும்

கலகத்தை ஏற்படுத்தும்

ஆனால் இது போன்ற அடக்குமுறைகளும், பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளும் இளைஞர்களிடம் அமைதியின்மையும், கலகத்தையும் தான் ஏற்படுத்தும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஆகவே குடிமக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கும், பேச்சுரிமைக்கும் மதிப்புக்கொடுத்து, அவர்களின் மாற்றுக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மத்திய அரசு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட மாணவர்களிடம் விளக்கம்கூட கேட்காமல் இப்படித் தடை விதிக்கப்பட்டிருப்பது மாணவர்களின் கருத்துரிமைக்கு எதிரானதாகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக அந்தத் தடை விலக்கிக்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்துகிறோம். சென்னை ஐஐடி சமூகநீதிக்கு எதிரான ஒரு நிறுவனமாகவே நீணடகாலமாக செயல்பட்டுவருகிறது. அங்கே மாணவர் சேர்க்கையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை.தப்பித் தவறி சேர்கிற மாணவர்களும் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அங்கிருக்கும் ஆசிரியர்களில் எஸ்சி/எஸ்டி பிரிவினர் ஒரு சதவீதம்கூட இல்லை.இதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பலமுறை போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனாலும்கூட அதன் போக்கு மாறவில்லை என்று கூறியுள்ளார்.

வேல்முருகன்

வேல்முருகன்

இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளிகளின் பெயரிலான மாணவர் அமைப்பானது, இந்துத்துவாவின் கோர முகத்தை அம்பலப்படுத்தியது என்ற ஒற்றை காரணத்துக்காக இத்தடையை விதித்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மண்ணில் தமிழர் தலைவர் தந்தை பெரியார் பெயரில் ஒரு அமைப்பு இயங்கக் கூடாது என்று இந்திய பேரரசு தடை விதித்திருப்பது நமது சுயமரியாதைக்கு விடுக்கப்பட்டிருக்க மிகப் பெரும் அறைகூவல்! இது அப்பட்டமான தமிழினத்தின் மீதான கொடூரமான ஒடுக்குமுறை- இது ஒரு இந்திய அரச பயங்கரவாதமே என்று கூறியுள்ளார்.

தலைவர்கள்

தலைவர்கள்

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்கங்களின் தலைவர்களும் ஐ.ஐ.டி.யின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

English summary
The Political leaders in Tamilnadu, across party lines have come down heavily on Friday on the de-recognition of the Ambedkar Periyar Study Circle at IIT-Madras, demanding withdrawal of the order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X