For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்மால் பஸ்களில் இருப்பது தமிழர் வாழ்வோடு கலந்த இலைகளின் அடையாளம்: அமைச்சர் விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் ஸ்மால் பஸ்களில் இருப்பது தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்த பல்வேறு இலைகளின் அடையாளம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சட்டசபையில் அவர் அளித்த விளக்கம்:

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 23ந் தேதி தொடங்கிய வைத்துள்ள புதிய சிற்றுந்துகளுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பை தி.மு.க. தலைவர் கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, சிற்றுந்துகளில் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் சின்னம் வரையப்பட்டுள்ளது என்ற ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் கொடுக்க வைத்துள்ளார் கருணாநிதி.

சிற்றுந்துகளில் அ.தி.மு.க சின்னமான இரட்டை இலை பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, புகைப்படங்களுடன் 25.10.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து அவைக்கு வெளியே சென்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உறுப்பினர் துரைமுருகன், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, எதிர் வரிசையில் இருந்த ஹண்டே எழுந்து, அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டைரியில் முதலமைச்சரின் படத்தினை எப்படி வெளியிடலாம் என பிரச்னையைக் கிளப்பினார் என்றும், அதற்கு பதில் அளித்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, "எனது படத்தை அரசு டைரியில் வெளியிட்டு விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எனது கவனத்திற்கு அது தெரியாமல் வந்திருக்கலாம். அப்படி இருந்தால் அது உடனே கிழிக்கப்படும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

வசனகர்த்தா துரைமுருகன்

வசனகர்த்தா துரைமுருகன்

இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பதை துரைமுருகன் சட்டமன்ற குறிப்புகளிலிருந்து மேற்கோள் காட்டி தெரிவித்தால், இதுபோன்றதொரு விவாதம் உண்மையிலேயே சட்டமன்றப் பேரவையில் நடைபெற்றதா அல்லது உறுப்பினர் துரைமுருகனின் கற்பனையில் உதித்ததா என்பது நாட்டு மக்களுக்கு தெரியவரும். அவ்வாறு மேற்கோள்காட்டவில்லையெனில், உறுப்பினர் துரைமுருகன் நடிகர் மட்டுமல்ல, சிறந்த வசனகர்த்தா என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

பசுமையான சூழல், இலை

பசுமையான சூழல், இலை

சிற்றுந்துகளில் வரையப்பட்டுள்ள பசுமையான சூழலையும், இலையையும், அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தோடு இணைத்துப் பேசுவது, குற்றம்சாட்டுவது தேவைதானா என்பதை தி.மு.க. உறுப்பினர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி பற்றி குறை சொல்ல ஒன்றும் இல்லை என்ற காரணத்தினால், இங்கே ஏதாவது நடத்திப் பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருக்கிறார்களோ என்ற ஐயம் தான் எழுகிறது. தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்று பேசுவதை தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.மு.க. உறுப்பினர்களும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழர் வாழ்வோடு கலந்த இலை

தமிழர் வாழ்வோடு கலந்த இலை

பேருந்துகளில் இடம் பெற்றுள்ள வண்ணப் படங்கள் தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்த பல்வேறு இலைகளின் அடையாளம், அது கட்சி சின்னத்தை குறிப்பது அல்ல.

என்னென்ன இலைகள்

என்னென்ன இலைகள்

வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உணவு தர படைப்பது வாழை இலை, உணவில் வாசத்தை ஏற்படுத்துவது கருவேப்பிலை. உணவாகவே சமைக்கப்படுவது கீரை இலை, சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை, வீட்டு வாசலில் அலங்கரிப்பது மா-இலை, மனிதனின் நோய் போக்குவது துளசி இலை இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்தது இலை. செடியில் இலை, கொடியில் இலை, மரத்தில் இலை என எங்கும் இலை, எதிலும் இலை..

அது இலையின் அலை...

அது இலையின் அலை...

இப்படி, மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இலையின் அலை பற்றி, ஆத்திரத்தோடு, உண்மைக்கு மாறாக திரித்துச் சொல்லும் தி.மு.க.வினருக்கு சிலவற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். இது காலத்தின் கட்டாயம்.

நீங்க செய்தது என்ன?

நீங்க செய்தது என்ன?

அரசு சிமெண்ட் பைகளில் உதயசூரியன் படம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு கலைஞர் காப்பீடு திட்டம் என்று பெயர் சூட்டிக் தேடிக்கொண்டவர்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

மத்து எல்லாம் சும்மா

மத்து எல்லாம் சும்மா

சித்திரையே தமிழ் ஆண்டின் சிறந்த தொடக்கமென்று முத்திரை பதித்து முறைமை செய்தவர் எங்கள் அம்மா மத்தது எல்லாம் இங்கே சும்மா, அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய், மஞ்சள் காமாலை கண்ணுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சள், கேட்டவற்றை சிந்திப்பதை தெளிவுற விசாரித்து பகுத்து ஆராய்வது ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டிய பண்பு.

50 பேருந்தா? 500 பேருந்தா?

50 பேருந்தா? 500 பேருந்தா?

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை மாநகரில், துவக்கி வைத்த சிற்றுந்துகளின் எண்ணிக்கை 50. ஆனால், உறுப்பினர் ஸ்டாலின் 25.10.2013 அன்று அவைக்கு வெளியே, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அரசுப் பேருந்துகளில் அ.தி.மு.க.வினுடைய சின்னத்தை இன்றைக்கு போட்டு 500 பேருந்துகளை நேற்றைய முன்தினம் முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். அதிலே 500 பேருந்துகள் சென்னையிலே விடப்பட்டிருக்கிறது. ஆக அனைத்துப் பேருந்துகளிலும் அ.தி.மு.க.வினுடைய சின்னத்தை பதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கற்பனை செய்திகள்

கற்பனை செய்திகள்

கற்பனையாக, கதை வசனமாக, முன்னுக்கு பின் முரணாக, தவறான தகவல்களை இந்த சபைக்கும், ஊடகத்தினை சார்ந்த செய்தியாளர்களுக்கும் தந்து கொண்டு இருக்கிறார்கள் தி.மு.க.வினர்.

மண்ணைக் காக்கும் மரத்தின் அங்கம் இலை

மண்ணைக் காக்கும் மரத்தின் அங்கம் இலை

இந்த மண்ணின் மரபார்ந்த விஷயம் இலை. மண்ணையும், மழையையும், காப்பது மரம். மரத்தின் அங்கமாக திகழ்வது இலை. மரமும் இலையும் இல்லை என்றால் காற்று இல்லை, காற்று இல்லை என்றால் பசுமை இல்லை. மண்ணின் பெருமையை, தமிழர்களின் மரபை, மங்கல அடையாளத்தை, பசுமை புரட்சியை ஏற்படுத்தும் இலைகளின் சிறப்பை நல்ல நோக்கில் சென்னை மாநகரில் மூலை முடுக்கெல்லாம் செல்லும் சிற்றுந்துகளில் இலைகளின் கலைநயத்தோடு கூடிய நான்கு, நான்கு இலைகள் ஓவியமாக இடம்பெற்று இருப்பது பசுமைக்கு வித்திடும் செடிகளின் இலைகளின் அடையாளமான ஓவியமே தவிர, கட்சி சின்னம் அல்ல.

குளிர்ச்சிக்கு பசுமைக்கு இலைகள் ஓவியம்

குளிர்ச்சிக்கு பசுமைக்கு இலைகள் ஓவியம்

மக்கள் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனங்களுக்கு இதமாகவும் சிற்றுந்துகள் விளங்க வேண்டும் என்பதற்காக பசுமையின் விளக்கமாக சிற்றுந்துகளில் இலைகள் வரையப்பட்டுள்ளனவே தவிர, அதில் உள்ளவை அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை இல்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் தங்கள் வாயிலாக தெள்ளத் தெளிவாக, உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி சின்னம் இரட்டை இலை

வெற்றி சின்னம் இரட்டை இலை

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை 1972 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மக்கள் மனங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இரட்டை இலை சின்னத்தை சிற்றுந்துகளில் வரைந்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் அ.தி.மு.க.வுக்கு கிடையாது. அரசின் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஐந்து முறை முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழகில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

செங்கோட்டையில் வெற்றி சரித்திரம்

செங்கோட்டையில் வெற்றி சரித்திரம்

தாயின்றி தவிக்கும் பாரதமே! விரைவில் உன் கவலை ஒழிந்து போகும்! வீர சரித்திரம் படைப்பதற்கு புரட்சித்தலைவியின் பாதம் பட்டு நாளை செங்கோட்டையிலும் எங்கள் அம்மா அவர்களின் வெற்றி சரித்திரம் எழுதப்படும் என்று கூறி, தமிழக அரசின் திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பினை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், தி.மு.க.வினர் இதுபோன்ற அற்ப குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். உண்மைக்கு மாறான இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்ற இயலாது என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

English summary
Tamilnadu Transport Minister K.T. Senthil Balaji denied DMK’s contention that the leaves symbol on the small buses were representative of ruling AIADMK’s symbol, the Two Leaves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X