For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்துக்கு பழ.நெடுமாறன், வேல்முருகன் எதிர்ப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விவசாயி நிலங்களை கையகப்படுத்தும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு செயல்படுத்தினால் விவசாயிகள் உரிமை பாதிக்கப்படும் என தழிழர் தேசிய முன்னனி தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

TN parties slam Centre over Land Acquisition act

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மத்தியில் உள்ள மோடி அரசு விவசாய.நிலங்களை பறிக்கும் அவசர சட்டத்தை கையில் எடுத்துளளது. தொழிற்சாலை உள்ளிட்ட வளர்சசி பணிகளுக்காக விவசாய நிலங்கலை கையகப்படுத்த 70 சதவீத விவசாயிகளின் ஓப்புதல் வேண்டும். ஆனால் இதை அசவர சட்டத்தில் அதை திருத்தியுள்ளனர். அவசர சட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படும்.

நெல்லையில் வேளாண் உதவி செயற்பொறியாளர் தற்கொலை செய்து கொண்டதற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்த விசாரிக்கவும், போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவும் ஐநா அமைத்த மனித உரிமை ஆணையத்தை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை. தற்போது புதிய அதிபர் சிறிசேனா அதற்கான விசாரணையை 6 மாத காலம் தள்ளி வைத்துள்ளார். போர் குற்றம் நடந்து 5 ஆண்டுகள் முடிந்த பின்னர் அங்கு எந்த தடயமும் கிடைக்காது. இருக்கவும் விட மாட்டார்கள். அதை கூட விசாரிக்க அனுமதி மறுக்கின்றனர். இதை கண்டித்தும், மனித உரிமை ஆணையம் உடனடியாக விசாரணை நடத்த கோரியும் வரும் மார்ச் 13ஆம் தேதி சென்னை, மதுரை, சேலம், தஞ்சை ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மரண தண்டனைக்கு அனுப்புவதற்கு சமம் என்றும் அவர் கூறினார்.

தி.வேல்முருகன் அறிக்கை

வேளாண்நிலங்களை பாழாக்கி விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுகிற நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்ப்போம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தங்கள் நாடு முழுவதும் வேளாண் பெருங்குடிமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம்

கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், நில உடைமையாளர்களில் குறைந்தது 80% அனுமதி இருந்தால் மட்டுமே நிலத்தை கையகப்படுத்தலாம்; கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் நில உடமையாளர்களுக்கே திரும்பி போய் சேரும் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் மக்களுக்கான மாற்றத்துக்கான என்ற முழக்கத்துடன் அரியணையில் ஏறி இருக்கும் நரேந்திர மோடி அரசோ, முந்தைய அரசின் சட்டத்தைத் திருத்துகிறோம் என்று கூறிக் கொண்டு 80% மக்களின் அனுமதி தேவை இல்லை; 5 ஆண்டுகாலம் ஆனாலும் அரசிடமே நிலம் இருக்கும் என்பது உள்ளிட்ட மக்கள் விரோத அம்சங்களை புகுத்தி அவசர சட்டமாக்கி தற்போது நாடாளுமன்றத்தின் மூலம் சட்டமாக்க முனைகிறது.

இப்படி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே நிலத்தை அபகரித்துக் கொள்ளையடிப்பதுதான் மக்களுக்கான ஒரு அரசின் லட்சணமா?

விவசாயிகள் புரட்சி

மேற்கு வங்கத்தின் சிங்கூரில் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக மாபெரும் புரட்சி நடந்த வரலாறு மோடி அரசுக்கு தெரியாதா?

ஏன் மோடியின் குஜராத் மாநிலத்தின் பாவ்நகரில் அணுமின் நிலையம் அமைப்பதற்காக 120 கிராம மக்களின் நிலத்தை கையகப்படுத்தி 1 லட்சம் மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு பலர் பலியானதை மோடி அரசு மறந்துவிட்டதா? தமிழ்நாட்டில் என்.எல்.சி. நிறுவனத்துக்காக நிலத்தை கொடுத்துவிட்டு இன்னமும் ஒப்பந்த கூலி அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.. அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் தரமாட்டோம் என்று போர்க்கொடி தூக்குகின்றனர்..

என்.எல்.சி.யின் ஒருபகுதியாக ஜெயங்கொண்டம் அனல்மின் நிலையம் அமைக்க 15 ஆண்டுகாலத்துக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து சொற்ப விலைக்கு பறிக்கப்பட்ட விளைநிலங்கள் இன்னமும் அப்படியே கைவிடப்பட்ட நிலையில்தான் இருக்கிறது.

நடுத்தெருவில் தொழிலாளர்கள்

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விவசாயிகளிடம் நிலக்கொள்ளை நடத்தி நோக்கியா போன்ற பெருநிறுவனங்கள் லாபமடைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்தீர்களே? அங்கே நிலத்தைக் கொடுத்த அந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை நம்பிய பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளார்களே?அவர்களுக்கு என்ன பதில் இருக்கிறது?

விவசாயிகளிடம் இருந்து அவர்களின் ஒப்புதல் இன்றி ஒருபிடி மண்ணைக் கூட அரசு என்ற பெயராலும் அபிவிருத்தி என்ற பெயராலும் அபகரித்துக் கொள்வதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? ஆகையால் அதானி போன்ற பெருநிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் மட்டுமே பயனடைவார்கள் என்ற கண்ணோட்டத்தில் அணுகாமல் சொந்த நாட்டு குடிமக்களின் வாழ்வாதாரம் என்ன? எதிர்காலம் என்ன? என்பதை முதலில் மோடி அரசு சிந்திக்க வேண்டும்.

விவசாயிகள் தற்கொலை

விவசாயிகளின் நிலத்தைப் பறித்துவிட்டால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு மடிவதைத் தவிர வேற என்ன வழி இருக்கிறது? விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டத்தான் இந்த மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதா? ஆட்சியில் இருக்கிறதா?

விவசாயப் பெருங்குடிமக்களின் எதிர்காலத்தை நிர்மூலமாக்குகிற நாசமாக்குகிற இந்த மோடி அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தத்தை கைவிடும்வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் போராடும் அனைத்து ஜனநாயக சக்திகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கரம் கோர்க்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
The BJP-led government at the Centre today faced flak from Tamil Nadu political parties including Tamilagavalurima katchi over the ordinance to amend Land Acquisition Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X