For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அது வாங்கினா இது ஃப்ரீ… இது வாங்கினா அது ஃப்ரீ… இலவசம் எனும் மாயவலை!

Google Oneindia Tamil News

சென்னை: ஃப்ரீயா கொடுத்தா ஃபினாயில கூட குடிப்பாரு நம்ம ஆளுன்னு சிலரை பற்றி சொல்வோம். ஆனால் உண்மையில் நாம எல்லோருமே இப்படிப்பட்ட ஆட்கள்தான் என்கிறார்கள். இதை சரியா புரிஞ்சிகிட்டதாலதான் பெரிய நிறுவனங்கள் முதல் சின்ன தெருவோர கடை வரைக்கும் சும்மா வெச்சிக்குங்க என்று சில பல இலவசங்களை தருகிறார்கள் என்கிறார்கள் சந்தை ஆய்வு நிபுணர்கள்.

"இலவசம்" என்ற வார்த்தையை பார்த்தாலே மனசுக்குள்ள ஒரு பரவச உணர்வு தோணுதா? இது உங்களுக்கு மட்டும் இல்லை உலகம் முழுக்கவே இதே கதைதான் என்கிறார்கள். "இலவசம்" ஏன் மனுசனை இப்படி ஜொயிங்க்கனு.. ஈர்க்குது என்பதை தெரிந்துகொள்வதற்காக நிறைய ஆய்வுகளை நடத்திப் பார்த்திருக்காங்க. அப்படி சில சுவாரஸ்யமான ஆய்வுகளைத்தான் நாம இப்போ பார்க்கப் போறோம்.

அமெரிக்காவில் உள்ள உலகப்புகழ்பெற்ற MIT கல்லூரி மாணவர்களிடம் இலவசங்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனத் தெரிஞ்சிக்க ஒரு சின்ன ஆய்வு பண்ணிப் பார்த்திருக்காங்க. அதாவது, ஆளுக்கொரு சாக்லெட் என பெரிய எழுத்தில் போர்டு எழுதி வெச்சிட்டு ஒரு டேபிள் போட்டு உட்கார்ந்திருக்காங்க.

இரண்டு ஆப்ஷன்

இரண்டு ஆப்ஷன்

எதுக்கு சாக்லெட் கொடுக்கிறாங்கன்னு கிட்ட வந்து பார்த்த பசங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுத்திருக்காங்க. அதாவது ரூ50 மதிப்புள்ள காஸ்ட்லி சாக்லேட் ரூ20க்கு கிடைக்கும், ரூ.5 மதிப்புள்ள சாதா சாக்லேட் ரூ.1க்கு கிடைக்கும். உங்களுக்கு எது வேணும்னு கேட்டிருக்காங்க? கிட்டத்தட்ட 73 சதவீதம் பேர் காஸ்ட்லி சாக்லேட்டை வாங்கிக்கிட்டாங்களாம். 23 சதவீதம் பேர் சாதா சாக்லேட் கேட்டிருக்காங்க. சரிதான், ரூ.50 சாக்லேட் ரூ.20க்கு கிடைக்கும்போது அதை அதிகம் வாங்குறது வாஸ்தவம்தான்.

மாத்தி யோசி

மாத்தி யோசி

இதையே கொஞ்சம் மாத்திப் பார்ப்போம்னு, இரண்டு சாக்லேட்டுகளிலும் ரூ.1 குறைச்சிருக்காங்க. இப்போ காஸ்ட்லி சாக்லேட் விலை ரூ.19 ஆகிடுச்சி, சாதா சாக்லேட் முற்றிலும் "இலவசம்" ஆகிடுச்சி. இப்போ எது வேணும்னு கேட்டபோது கதையே மாறிடிச்சாம். 69 சதவீதம் பேர் சாதா சாக்லேட்டுக்கு மாறிட்டாங்க, வெறும் 31 சதவீதம் பேர் மட்டும் காஸ்ட்லி சாக்லேட் கேட்டிருக்காங்க. இதுதான் "இலவசம்" என்ற மாய வார்த்தையின் பவர்னு சொல்றாங்க. இப்படிதான் நாம "இலவசம்" என்ற வார்த்தையை பார்த்ததும் அதன் தரம் எப்படி இருக்கும்னு பெரிசா கவலைப்படாம வாங்கிட்டு வந்துடறோம். ஒன்னு ஓசியில வந்தா அதன் தரம் எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கிறோம்.

மனசு சொல்லுதே

மனசு சொல்லுதே

அது தேவையோ இல்லையோ அந்த பொருளை எப்படியாவது வாங்கனும்னு மனசு சொல்லுது. சமீபத்தில சென்னையில உள்ள ஒரு ஐடி கம்பெனியில ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் கொடுத்திருக்காங்க. லட்சங்களில் சம்பாதிக்கும் ஊழியர்கள் கூட அந்த ரூ500 ஸ்வீட் பாக்ஸூக்காக கூட்டத்தில் முண்டியடிச்சு வாங்கின காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலா சுத்திகிட்டிருக்கு. அவர்கள் வாங்கும் ஊதியத்திற்கு இந்த ஸ்வீட் பாக்ஸ் பெரிய விஷயமே இல்லை. ஆனால் சும்மா கிடைக்குது என்பதுதான் அவர்களை கூட்டத்தில் புகுந்து வாங்க வைக்குது.

அதே டெக்னிக்தான்

அதே டெக்னிக்தான்

இந்த டெக்னிக்கை நல்லா தெரிஞ்சி வெச்சிகிட்டதாலதான் நம்மூர் அரசியல்வாதிகள் கூட விலையில்லா பொருட்களை கொடுத்து நம்மையே ஈசியா விலைக்கு வாங்கிடுறாங்க. போன பொங்கலுக்கு தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் ரூ.1000 கொடுத்த போது, நல்ல வசதியான ஆட்கள் கூட கொட்டும் பனியிலும் வரிசையில் நின்னு வாங்கிட்டு போனாங்க. ஏங்க உங்களுக்கு ஆயிரம் ரூபாய் ஒரு விஷயமா என்று கேட்டால், சும்மா வர்ரதை ஏன் விடனும் என்று பதில் சொன்னார்கள். இதுதான் மக்களின் மனநிலை. இதை அரசியல்வாதிகள் சரியாக பயன்படுத்திக்கிறாங்க. இதையேதான் பெரிய நிறுவனங்களும் செய்யுது.

ஆபர் வருது

ஆபர் வருது

ஒருத்தர் கார் வாங்கனும்னு முடிவு பண்ணியிருக்கார். குடும்பத்துல எல்லோரும் போற மாதிரி பெரிய கார் வாங்குனும்றது அவர் எண்ணம். இதுபற்றி தேடும் போது, வேற ஒரு கார் கம்பெனியின் விளம்பரம் கண்ணில் படுது. அந்த விளம்பரம் என்ன சொல்லுதுன்னா, எங்க காரை வாங்குங்க அடுத்த 3 வருஷத்துக்கு இலவசமா ஆயில் மாற்றித் தருகிறோம்னு போட்டிருக்காங்க. நம்மாளு இலவச ஆயிலுக்கு ஆசைப்பட்டு அந்த வண்டியை வாங்கிட்டாரு. அவர் வாங்க விரும்பின பெரிய காரை விட இது அளவுல சின்னது, விலையும் கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் அதிகம். அப்புறம் பொறுமையா கணக்கு போட்டு பார்த்திருக்கார். 10000 மைல் தூரம் வண்டி ஓடின பிறகுதான் ஆயில் மாற்ற வேண்டி வரும். இவர் வருஷத்துக்கு தோராயமா 7000 மைல் ஓட்டுவார். அப்படி பார்த்தா 3 வருஷத்துல இரண்டுமுறை ஆயில் மாற்ற வேண்டி வந்திருக்கும். இதுக்கு அதிகபட்சமா சில ஆயிரங்கள்தான் செலவாகும். ஆனால் இலவசம்னு சொன்ன உடனே இதெல்லாம் யோசிக்காம, நம்ம ஆளு 4 லட்சம் ரூபாய் அதிகம் செலவு பண்ணிட்டாரு. நம்மள்ள பல பேரும் இதையே தான் பண்ணிகிட்டு இருக்கோம்.

கவனிச்சிருக்கீங்களா

கவனிச்சிருக்கீங்களா

இணையதளங்களில் பொருள் வாங்கும்போது ஒரு விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? உதாரணத்திற்கு ரூ1000க்கு மேல வாங்கினா இலவச டெலிவரின்னு போட்டிருக்கும். நாம ஒரே ஒரு பொருள் வாங்கனும்னு அந்த இணையதளத்திற்கு போயிருப்போம். அதை மட்டும் வாங்கினா ரூ.50 டெலிவரி சார்ஜ் வரும். ஆனால் அதை கொடுக்க மனசு இல்லாம, தேவையே இல்லாம இன்னும் ரெண்டு, மூணு பொருளை வாங்கி பில்லை ஆயிரம் ரூபாய்க்கு மேல போற மாதிரி பார்த்துப்போம். காரணம், நம்ம கண்ணை சுண்டி இழுத்த அந்த "இலவச டெலிவரி".

வீணாக்குகிறோம்

வீணாக்குகிறோம்

இலவசங்களைப் பெற இப்படி கூடுதல் பணம் செலவழிப்பது மட்டும் பிரச்னை இல்லை. சில நேரங்களில் நம் பொன்னான நேரத்தையும் தேவையில்லாத இலவசங்களுக்காக வீணாக்கி விடுகிறோம். ஒரு இலவச பொருளை வாங்குவதற்காக அரை மணி நேரம் லைனில் நிற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். விலை மதிப்பற்ற அந்த அரை மணி நேரத்தை எப்படி திரும்பப் பெற முடியும். இந்த ஃபார்மை பூர்த்தி செய்து கொடுத்தால் இந்த பக்கெட் இலவசம் என்று சொன்னால், உட்கார்ந்து நம்ம ஃபோன் நம்பர்ல இருந்து பூரா ஜாதகத்தையும் எழுதி கொடுத்திட்டு அந்த பக்கெட்டை வாங்கி வருபவர்கள் தான் இங்கே அதிகம்.

டேட்டா இலவசம்

டேட்டா இலவசம்

இலவச டேட்டா குடுக்குறான்னு வாட்ஸ் அப்பில் எத்தனை வீடியோ வந்தாலும் தேவை இருந்தாலும், இல்லேன்னாலும் அதை எல்லாம் திறந்து பார்த்து, ஷேர் பண்ணி எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம். அதெல்லாம் சரிப்பா, நீ இப்போ என்ன சொல்ல வர்ரேன்னு கேட்கறீங்களா? ரொம்ப சிம்பிள். இந்த உலகத்தில் எதுவுமே இலவசம் கிடையாது. எல்லாத்துக்கு ஒரு விலை இருக்கு. சிலது கண்ணுக்கு தெரியுது, சிலது கண்ணுக்கு தெரியாது. அதனால் இலவசமா கிடைக்குது என்ற ஒரே காரணத்துக்காக எதையும் செய்யாதீர்கள்.

பொங்கல் பொனான்சா

பொங்கல் பொனான்சா


ஆடி ஆஃபர்ல ஆரம்பிச்சு பொங்கல் பொனான்சா வரைக்கும் வியாபாரிகள் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து இலவசம் என்ற மிட்டாயை காட்டி நம்மை சுண்டி இழுத்துக் கொண்டே தான் இருப்பார்கள். நாம் தான் சூதானமா இருந்து தேவையானதை மட்டும் சரியான விலையில் வாங்கி வர வேண்டும். அடுத்த முறை எங்காவது "இலவசம்" என்ற போர்டைப் பார்த்தீங்கன்னா பர்ஸ்ல கைய விடுறதுக்கு முன்னாடி ஒருமுறைக்கு இரண்டு முறை நல்லா யோசிங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும்.

- கௌதம்

English summary
TN people yet to recover from the web of Freebies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X