For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலர் மாறிக் கொண்டிருக்கிறதா தமிழகக் காவல் துறை?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர் மணி

ஜல்லிக் கட்டுப் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு தேவையற்ற பலப் பிரயோகத்தை உபயோகித்த தமிழக காவல் துறையின் மற்றோர் கோர முகம் தற்பொழுது வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வாகனங்களுக்கு காவலர்களே தீ வைத்த தாகவும், பொதுச் சொத்துக்களை நாசம் செய்ததாகவும் எழுந்திருக்கும் குற்றச் சாட்டுகளை விட இந்த கோர முகம் ஆபத்தான கோர முகமாகும். அப்பாவிகளை தேடித் தேடி கைது செய்வதாகவும், பொய் வழக்குகளை போடுவதாகவும் எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை விட இது மோசமான கோர முகமாக இருந்து கொண்டிருக்கிறது.

'தேச விரோத சக்திகள்' என்ற வார்த்தையை காவல் துறை அதிகாரிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதுதான் அந்த கோர முகம். சொல்லி வைத்தாற் போல ஒவ்வோர் பெரு நகரத்தின் காவல்துறை தலைமை அதிகாரியும், மற்றும் இன்ன பிற காவல்துறை உயரதிகாரிகளும் இந்த வார்த்தையை சர்வ சாதாரணமாக பயன் படுத்திக் கொண்டிருக்கின்றனர். சென்னையில் ஜனவரி 23 ம் தேதி இரவு செய்தியாளர்களை சந்தித்த மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கலவரங்களுக்கு காரணம், சமூக விரோத, தேச விரோத சக்திகள் போராட்டத்தில் ஊடுருவியதுதான் என்று கூறினார். அப்போது அங்கிருந்த என்டிடிவி யின் செய்தியாளர் "நீங்கள் அந்த தேச விரோத சக்திகள் சார்ந்திருக்கும் அமைப்புகளின் பெயர்களை வெளியிட முடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார். அதுவரையில் சாதாரணமாகவே பேசிக் கொண்டிருந்த ஜார்ஜ் கோபமும், பதற்றமும் அடைந்தார். "இந்தக் கேள்விக்கு நான் தற்போது பதில் சொல்ல விரும்பவில்லை'' என்று ஒற்றை வரியில் சொல்லிய போது ஜார்ஜின் உடல் மொழி அவரது கோபத்தை பட்டவர்த்தனமாகவே வெளிக் காட்டியது,

TN Police becomes 'Modi force' now!

ஜார்ஜின் வர்ணனையாவது ஒற்றை வரியில் முடிந்து விட்டது. ஆனால் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளிப்படையாகவே அமைப்புகளின் பெயர்களை சொல்லி அவற்றை தேச விரோத சக்திகள் என்று குற்றஞ்சாட்டினார். "ஜல்லிக்கட்டு போராட்டங்களில் சமூக விரோத, மதவாத, அடிப்படை வாத, தேச விரோத சக்திகள் ஊடுருவி விட்டனர்," என்று கூறி அத்தகைய எட்டு அமைப்புகளின் பெயர்களையும் படித்தார். அதில் இடம் பெற்றதுதான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், (DYFI), இந்திய மாணவர் சங்கம் (SFI), Campus Front of India போன்ற அமைப்புகளும்.

இதற்கடுத்து மற்றொன்றும் அமல்ராஜ் கூறினார்: "போராட்டத்தில் புதியவர்கள் பலரின் நட்பு கிடைத்திருக்கும். அந்த நட்பை புதுப்பிக்காதீர்கள். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்''. அப்போது ஒரு செய்தியாளர் இந்த அமைப்புகள் எதுவும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் கிடையாது, நீங்கள் அவற்றை தேச விரோத சக்திகள் என்று எப்படிசே சொல்லுகிறீர்கள்? நீங்கள் இந்த அமைப்புகளை தடை செய்ய முயற்சி எடுப்பீர்களா? என்று கேட்டார். இதற்கு கமிஷனரிடமிருந்து பதில் இல்லை.

வேறோர் உயர் காவல் துறை அதிகாரி இப்படி சொல்லுகிறார்: "தோழர் என்று யாராவது வந்தால் அவர்களுடன் பேசாதீர்கள்!''. இது என்ற லாஜிக் என்பது அந்த அதிகாரிக்குத்தான் வெளிச்சம்.

மற்றோர் உயர் காவல்துறை அதிகாரி, நேர்மையானவர். முக நூலில் சுறு சுறுப்பாக இயங்குபவர். ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை கலைக்க போலீஸ் நடத்திய தடியடி, மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு அவருடைய காவல்துறை செல்லங்களே தீ வைத்த அற்புத காட்சிகளைக் கண்ட பின்னர் மாற்று தொனியில் பேச ஆரம்பித்து விட்டார். "தேச விரோத சக்திகள் யாராவது என்னுடைய நட்பு பட்டியலில் இருந்தால் அவர்கள் விலகி விடலாம். அல்லது நானே அவர்களை விலக்கி விடுகிறேன். Unfriend பண்ணி விடுகிறேன்," என்று சத்திய வாக்கு மூலம் கொடுத்துவிட்டார். இவர் உபயோகிக்கும் வார்த்தையும் தேச விரோத சக்திகள் என்பதுதான். சமூக விரோத சக்திகள் என்பதற்கு இணையாக இன்னும் சொல்லப் போனால் அதனை விட அதிகமாக தேச விரோத சக்திகள் என்ற வார்த்தையை நம்முடைய தமிழக காவல்துறையின் உயரதிகாரிகள் தற்போது பயன்படுத்த ஆரம்பித்திருப்பத்தான் ஜல்லிக்கட்டு தடியடிக்குப் பிந்தய விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக இருந்து கொண்டிருக்கிறது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், (DYFI), இந்திய மாணவர் சங்கம் (SFI) போன்றவற்றை தேச விரோத அமைப்புகள் என்ற வரையறையில் கோவை போலீஸ் கமிஷனர் பேசியிருப்பது இடதுசாரிகளைக் கோபப்படுத்தயிருக்கிறது.

"கடந்த இரண்டரை ஆண்டுகளாக மோடி வந்த பிறகு இந்தியாவில் என்ன நடக்கிறதோ, அதுதான் தற்போது தமிழக காவல்துறையிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. அரசு நிர்வாகம் காவி மயமாகிக் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கும், இந்திய சட்டங்களுக்கும் உட்பட்டு செயற்படும் அமைப்புகளை தேச விரோத சக்திகள் என்று போலீஸ் கூறத் துவங்கியிருப்பது. அரசு இயந்திரம் மதச்சார்பற்ற, முற்போக்கு இயக்கங்களுக்கு எதிராக திட்டமிட்டு தொடுக்கத் துவங்கியிருக்கும் போரின் ஓரங்கமாகத்தான் நான் இதுபோன்ற வார்த்தை பிரயோகங்களை பார்க்கிறேன். மக்களின் உணர்வுகளோடு இணைந்து, ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடிய DYFI, SFI போன்ற அமைப்புகளை தேச விரோத சக்திகள் என்று கோவை போலீஸ் கமிஷனர் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை நாங்கள் அரசியில்ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராடுவோம். இத்தகையை அணுகுமுறையைக் காவல் துறை கைவிடும் வரையில் எங்களது போராட்டம் ஓயாது,'' என்று ஒன் இந்தியா விடம் கூறினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஏ.பாக்கியம்.

இதே கருத்தையே அனைத்து எதிர்கட்சிகளும் எதிரொலிக்கின்றன. "யார் தேச விரோதிகள், யார் தேச பக்தர்கள் என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பது போலீஸூடைய வேலை கிடையாது. இது அபாயகரமான போக்கு. தேச விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவிவிட்டார்கள் என்கிறது போலீஸ். அவர்களை இனங் கண்டு அப்புறப்படுத்துவதுதான் போலீஸுடைய வேலை. மாறாக அறவழியில் போராடும் இயக்கங்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவது தவறான பேச்சு. பாஜக தங்களது கருத்துக்கு மாற்று கருத்து கொண்டவர்கள் எல்லோரையும் தேச விரோத சக்திகள் என்றே முத்திரை குத்திக் கொண்டிருக்கிறது. அந்தப் பாணியில் அதே வார்த்தை பிரயோகத்தை தமிழக காவல்துறை தற்பொழுது, மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த ஒரு போராட்டத்தில் பங்கேற்ற அமைப்புகளை குறிவைத்து பயன்படுத்துவது என்பது துரதிர்ஷ்டவசமானது,'' என்று கூறுகிறார் திமுக செய்தித் தொடர்பாளர் மனு சுந்தரம்.

சென்னை மெரீனா பீச்சில் எட்டு நாட்கள் அறவழியில் நடைபெற்ற போராட்டத்தில் மோடிக்கு எதிராக மிகப் பெரிய கோஷங்கள் எழுப்ப பட்டன. பல இடங்களில் நூற்றுக் கணக்கான மோடி உருவ பொம்மைகள் மணலில் அடித்து நாசமாக்கப்பட்டன. காரணம் அவற்றை கொளுத்த காவல் துறை அனுமதி கொடுக்காததுதான். இவை எல்லாம் மெரீனா பீச்சுக்கு போனவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்த பின்புலத்தில்தான் போராட்டக் காரர்களை கலைக்க காவல் துறை எடுத்த நடவடிக்கையை பார்க்க வேண்டும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகள்.

"எனக்கு கிடைத்த தகவலின் படி சென்னையில் காவல்துறை மூர்க்கமாக தாக்கியதற்கு காரணமே மத்திய உளவுத்துறையின் தூண்டுதலும், கட்டளையும்தான். மோடிக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பான உணர்வை இந்த முறை ஊடகங்கள் காட்ட வேண்டிய விதத்தில் காட்டவில்லை. வரும் காலங்களில் இந்த நிலைமை மாறலாம். மோடிக்கு எதிரான வெகு ஜன மக்கள் திரளின் கோபத்தை முளையிலேயே கிள்ளி எறிய மத்திய உளவுத்துறை விரும்புவதன் விளைவுதான் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையால் ஏவி விடப் பட்ட வன்முறை. அப்படித்தான் நாம் இதனை பார்க்க வேண்டும்,'' என்று கூறுகிறார் மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

English summary
R Mani's article says that the Tamil Nadu police is changing its face and now it functioning as Modi's force.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X