For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள்": ஒரு வாரத்திற்கு பிறகு மறுப்பு தெரிவித்த அமைச்சர் சரோஜா

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பெண் அதிகாரி ராஜமீனாட்சி தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே பொய் குற்றச்சாட்டை கூறியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு லஞ்சம் கேட்டதாக பெண் அதிகாரி உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளதாக அமைச்சர் சரோஜா ஒரு வாரத்திற்கு பிறகு மறுப்பு தெரிவித்துள்ளார்.

TN Social welfare minister Saroja rejected the complaints against her by officer Rajameenakshi

அவர் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராகத் தற்காலிகமாகப் பணிபுரிந்து வரும் திருமதி. ராஜமீனாட்சி, என்பவர் 10.5.2017 அன்று, என்மீது உண்மைக்குப் புறம்பான புகார்களை, எனது நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் நோக்கத்துடன் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு நாளிதழ்கள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டு, ஒளிவுமறைவற்ற முறையில் ராஜமீனாட்சி தேர்வு செய்யப்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக 19.09.2016 அன்று தருமபுரி மாவட்டத்தில், தொகுப்பூதியத்தில் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டார்.

மேலும், இப்பதவிக்கு தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் அலுவலர்கள் நியமிக்கப்பட்ட காரணத்தினால், மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் நிரந்தர அலுவலராக பணிபுரிந்து வரும் மாவட்ட நன்னடத்தை அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் இணைந்து காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 01.03.2017 அன்று தருமபுரி மாவட்ட நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நலனுக்கென்று ஒதுக்கப்பட்ட மாவட்ட நிதியிலிருந்து போலியான ரசீதுகள் மூலம் அரசு நிதியை ராஜமீனாட்சி கையாடல் செய்து மோசடி செய்துள்ளதாக, சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் கடிதம் அளித்திருந்தார். அதன் பேரில் தருமபுரி மாவட்ட ஆட்சியர், சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலரை விசாரணை அலுவலராக நியமித்து ராஜமீனாட்சியின் மீது பெறப்பட்ட புகார்களை விசாரணை செய்ய 06.03.2017 அன்று உத்தரவிட்டார்கள்.

இந்த விசாரணைக்கு 21.04.2017 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜமீனாட்சி அவர்களுக்கும், தருமபுரி மாவட்ட நன்னடத்தை அலுவலர் அவர்களுக்கும் குறிப்பாணை ஒன்றை 11.04.2017 அன்று அனுப்பினார்கள். 21.04.2017 அன்று தருமபுரி மாவட்ட நன்னடத்தை அலுவலர் மட்டும் விசாரணைக்கு ஆஜராகி, அவர் ஏற்கனவே தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி ராஜமீனாட்சி அவர்கள் செய்த பல்வேறு முறைகேடுகளை பட்டியலிட்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராஜமீனாட்சி விசாரணைக்கு ஆஜராகாமல், தான் 20.04.2017 அன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதால் தன் மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என 15.4.2017 அன்று விசாரணை அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளார். விசாரணை அலுவலர் அவர்கள் இந்த விசாரணையை 08.06.2017 அன்றைக்கு ஒத்திவைத்தும், அக்குறிப்பிட்ட நாளில் தக்க மருத்துவ சான்றிதழுடன் ஆஜராக வேண்டுமென்றும் 24.04.2017 நாளிட்ட குறிப்பாணையொன்றும் மீண்டும் திருமதி. ராஜமீனாட்சிக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், ராஜமீனாட்சி, 07.05.2017 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னையில் உள்ள எனது இல்லத்தில் என்னை சந்தித்து, தற்காலிகமாக பணிபுரிந்து வரும் தன்னை அந்தப் பதவியில் பணி நிரந்தரம் செய்யவும், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யவும் கோரிக்கை வைத்தார். ஆனால், இந்த பணியில் தற்காலிமாக நியமனம் செய்யப்பட்டவர்களை நிரந்தரம் செய்யவதற்கு அரசு விதிகளில் இடமில்லை என்பதை அவரே நன்கு அறிவார்.

எனவே, இப்பணியை அவருக்கு நிரந்தரம் செய்ய அரசு விதிகளில் இடமில்லை என எடுத்துக் கூறி, அவரது கோரிக்கைகளைப் பரிசீலிக்க இயலாது என நான் கூறினேன். மேலும், தன் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், துறை ஆணையர் மற்றும் துறை செயலாளரை சந்திக்காமல் நேரடியாகத் துறை அமைச்சரை சந்தித்ததே எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது. ஊடகங்களில் ராஜமீனாட்சி குறிப்பிட்டது போல, என்னை சந்திக்குமாறு நான் அவரை அழைக்கவே இல்லை.

எனவே, தன்மீது நடத்த இருக்கும் அரசு நிதி கையாடல் விசாரணையை திசை திருப்பும் உள்நோக்கத்துடனும், எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் மக்கள் பணியாற்றி வரும் என்மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக வேண்டுமென்றே அபாண்டமாகவும், சிலரின் தூண்டுதல் காரணமாகவும் தவறான தகவல்களை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளார். ராஜமீனாட்சி கூறிய அனைத்துப் புகார்களும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு அமைச்சர் அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Tn social welfare minister Saroja rejects the bribe charges against her by officer Rajameenakshi after week of bribe charges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X