For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாலை விபத்துகள், உயிரிழப்புகளில் 12 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம்: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்களைப் பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு தான் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

TN stands first in road accidents for more than 12 years: Says Ramadoss

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துக்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியவை என்ற போதிலும், மனிதத் தவறுகளை திருத்திக் கொள்ள வாகன ஓட்டிகள் தயாராக இல்லை எனும்போது இனி பயணங்கள் பாதுகாப்பானவையாக இருக்குமா? என்ற கவலை எழுகிறது.

சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்களைப் பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு தான் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 67,757 ஆகும். இந்த விபத்துக்களில் சிக்கி 16,175 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 78,000 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோரில் சுமார் 7,000 பேர் உடல் உறுப்புகளை இழந்து முடமாகியுள்ளனர். இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் சுமார் 23,000 குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்றன. அந்த வகையில் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் இரண்டரை லட்சம் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விபத்துக்களுக்கு காரணமானவர்கள் எவரும் தவறுகளை உணர்ந்ததாக தெரியவில்லை.

தேசிய குற்ற ஆவணக் காப்பகமும், தமிழக போக்குவரத்து ஆணையமும் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கடுமையான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் விபத்துகளுக்கு காரணமாக இருப்பவை சரக்குந்துகள் தான் என்று தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிகழ்வுகளில் 9192 விபத்துக்களுக்கு சரக்குந்துகளே காரணம் ஆகும். விபத்துக்களை ஏற்படுத்திய சரக்குந்து ஓட்டுனர்களில் 70 சதவீதம் பேர் மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டியதும் கண்டறியப்பட்டது. இந்தியாவிலேயே அதிக ஊர்திகளைக் கொண்ட மாநிலம் மராட்டியம் தான். 1.75 கோடி வாகனங்களைக் கொண்ட அம்மாநிலத்தில் ஆண்டுக்கு 45,000 விபத்துக்களும், 13,963 உயிரிழப்புகளும் மட்டுமே ஏற்படும் நிலையில், 1.5 கோடி ஊர்திகளை மட்டுமே கொண்ட தமிழகத்தில் 68,000 விபத்துக்களும், 16,175 உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் பெரும்பாலான ஓட்டுனர்கள் போதையில் வாகனம் ஓட்டுவது தான்.

அண்மையில், அரியலூர் அருகே 15 பேர் உயிரிழக்கக் காரணமான கொடூரமான சாலை விபத்துக்கு காரணம் சரக்குந்து ஓட்டுனர் அளவுக்கு அதிகமான போதையில் வாகனத்தை ஓட்டி பேரூந்து மீது மோதியது தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது கூட பேருந்துகளையும், மற்ற வாகனங்களையும் உரசிக் கொண்டு சரக்குந்துகள் சீறிப் பாய்வதையும், இதனால் சரக்குந்துகளைப் கண்டாலே மற்ற வாகனங்களின் ஓட்டுனர்கள், குறிப்பாக இருசக்கர ஊர்தி ஓட்டுபவர்கள் பயந்து ஒதுங்குவதையும் பார்க்க முடிகிறது. புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் தாறுமாறாக பறக்கும் சரக்குந்துகள் மோதி இரு சக்கர ஊர்திகளில் சென்ற கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுகள் ஏராளம்.

இதே போல் புதுச்சேரியிலிருந்து கடலூர், விழுப்புரம் செல்லும் சாலைகளிலும் இத்தகைய விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன. சரக்குந்துகளின் ஓட்டுனர்கள் போதையில் கண்மூடித்தனமாக ஊர்திகளை ஓட்டுவது தான் இதற்கு காரணம் ஆகும். சரக்குந்து ஓட்டுனர்களில் பெரும்பாலானவர்கள் கவனத்துடனும், பொறுப்புடனும் வாகனங்களை ஓட்டும் போதிலும், சிலர் குடித்துவிட்டு தாறுமாறாக ஓட்டுவதால் சரக்குந்து என்றாலே அஞ்சி நடுங்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் குடித்துவிட்டு ஊர்தி ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

டெல்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே உயிரிழக்கக் காரணமான சாலை விபத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, சாலை விதிகளை 3 முறை மீறும் வாகன ஓட்டிகளின் உரிமம் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், அதன் பிறகும் விதிகளை மீறினால் அவர்களின் ஓட்டுனர் உரிமம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது தான் என்ற போதிலும், விபத்துக்களைத் தடுக்க இது மட்டுமே போதாது. சரக்குந்து உள்ளிட்ட அனைத்து ஊர்திகளின் ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டியதாக ஒருமுறை பிடிபட்டாலே அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்; தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமின்றி, மாநில நெடுஞ்சாலைகளிலும் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற விதியை மிகவும் கடுமையாக செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 50 கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் சோதனைச் சாவடிகளை அமைத்து அனைத்து வகையான சரக்குந்துகளின் ஓட்டுனர்களும் மது அருந்தியிருக்கிறார்களா? என ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் மது அருந்தாமல் இருந்தால் மட்டுமே பயணத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். அதேபோல், அனைத்து சரக்குந்துகளிலும் வேகத்தடை கருவி பொருத்தப்படுவதை உறுதி செய்வதுடன், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேகத்தில் செல்லும் ஊர்திகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்காக காவல்துறையில் விபத்துத் தடுப்புப் பிரிவை தனியாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Ramadoss told that TN stands first in India in road accidents for more than twelve years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X