அதிமுக ஒரு மொட்டை கிணறு.. அதில் சேர்வதற்கு பதில்.. தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி!
தேனி: அதிமுகவில் சேர்வதற்கு மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சேர டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தூது விடுத்துவருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
அதிமுகவில் மீண்டும் சேர அவர் வழித்தேடிக்கொண்டிருப்பதாகவும், அதற்காகவே இடைத்தேர்தல் குறித்து சவால் விடுப்பதாகவும் கூறினார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கருத்துக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி கொடுத்துள்ளார்.

சவால் விட்டேன்
அவர் கூறியிருப்பதாவது, திருப்பரங்குன்றம், திருவாரூர், இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் அ.தி.மு.க. கட்சியையும், சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு பொறுப்பாளர்கள் விலகி கொள்ள வேண்டும். அ.ம.மு.க. தோற்றால் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்து விடுகிறோம் என்று சவால் விட்டேன்.

மொட்டை கிணறு
இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ குழம்பி போய் நான் அ.தி.மு.க.வில் இணைய தூது விடுவதாக கூறுகிறார். அ.தி.மு.க. என்பது மொட்டை கிணறு. மொட்டைக்கிணறு என தெரிந்தே அதில் விழுந்தால் இறந்து விடுவோம். அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம்.

கட்சியில் விரிசல்
அ.தி.மு.க.வில் யாருக்கும் தலைமை பண்பு கிடையாது. அதனால் கட்சியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. தலைவர்கள் பேச்சை யாரும் கேட்பது இல்லை. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவர்களது இஷ்டத்துக்கு உளறி வருகிறார்கள்.

அரசுக்கு துணிச்சல் இல்லை
ஆந்திராவில் பெட்ரோல்- டீசல் விலையில் ரூ. 2 குறைத்தது போல் தமிழகத்திலும் குறைக்க வேண்டும். மத்திய அரசிடம் வலியுறுத்தி விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு துணிச்சல் கிடையாது. இவ்வாறு தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.