For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாத்மாவை பெற்றோம்.. பெருந்தலைவரை இழந்தோம்.. மறக்க முடியாத காமராஜர்!

பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைய தினம் காந்திஜி பிறந்தநாள் என்ற மகிழ்ச்சியில் நாம் திளைத்து கொண்டிருக்கும்போது, தாங்க முடியாத ஒரு சோகம் நம் இதயத்தை பிழிகிறது. ஆம்! பெருந்தலைவர் காமராஜர் இன்று மறைந்த தினம்!!

காந்திஜியின் முழுமையான சீடராக வாழ்ந்த காமராஜர் அவரின் பல நற்குணங்களை நடுமுறையில் கடைப்பிடித்தார். மனித நேயம், சேவை, தியாகம், எளிமை, நேர்மை, உழைப்பு, ஆகியவை அவரை சாதாரண காங்கிரஸ் தொண்டனிலிருந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உயர்த்தியது.

[ அகிம்சையே ஆயுதம்.. சத்யாகிரகம் கேடயம்.. இளைய தலைமுறையினர் மறக்க கூடாத மகாத்மா! ]

 படிப்பாளி இல்லை

படிப்பாளி இல்லை

அவர் பேச்சாளர் இல்லை.. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் அவரது எளிய உரையை கேட்டார்கள்!! அவர் எழுத்தாளர் இல்லை. ஆனால் லட்சக்கணக்கான மக்கள் அவரது சாதாரண எழுத்துக்களை படித்தார்கள்!! அவர் படிப்பாளி இல்லை. ஆனால் ஆயிரக்கணக்கான படிப்பாளிகள் அவரால் உருவானார்கள்!!!

 செலவுக்கு பணம் தரவில்லை

செலவுக்கு பணம் தரவில்லை

தமிழகத்தில் அவர் போகாத கிராமம் இல்லை. அவர் கால்படாத பூமி இல்லை. போலீசாரின் தடியடிகள், சிறைச்சாலைகளின் சித்திரவதைகள் அனைத்தையும், புன்முறுவலுடன் ஏற்ற புரட்சி தலைவர் அவர். தமிழகத்தையே ஆளும் முதலமைச்சரான பிறகு பெற்ற அன்னை தன் செலவுக்கு கூடுதலாக சிலரூபாய் அனுப்ப கேட்ட போதும் மறுத்தவர்.

 உன் வேலையை பார்

உன் வேலையை பார்

தன் விருதுநகர் வீட்டிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் குடிநீர் குழாயை அமைத்ததை அறிந்ததும், அதை துண்டிக்க உத்தரவிட்டவர். "நீ மந்திரியாய் இருப்பது எனக்கு சேவை செய்வதற்கு இல்லை. மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான். அந்த வேலையை ஒழுங்காக பார்" என்று அமைச்சருக்கு அறிவுரை கூறியவர். யார் காலிலும் விழாதவர். யாரையும் தன் காலில் விழ வைக்காதவர்.

 நேர்மையாக செயல்படுங்கள்

நேர்மையாக செயல்படுங்கள்

ஒரு தவறான சான்றிதழுக்காக ஒரு கான்ட்ராக்டர், மாவட்ட கலெக்டரை காமராஜர் பெயரை சொல்லி மிரட்ட, என்னால் முதலமைச்சராக முடியும், ஆனால் காமராஜரால் என்னை போல் ஐஏஎஸ் அதிகாரியாக முடியாது என்று அவர் பதில் சொல்ல, ஆணவம் பிடித்த கலெக்டர் மீது நடவடிக்கை என்று காங்கிரஸ் பிரமுகர்கள் கோரிக்கைவிட, அந்த ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டிற்கே சென்று, "கடமையிலிருந்து தவறாதீர்கள், நேர்மையாக செயல்படுங்கள்" என்று பாராட்டு தெரிவித்தவர்.

 வாராது வந்த மாமணி

வாராது வந்த மாமணி

வீடு, வாசல், தோட்டம், துறவு, பாங்க் பாலன்ஸ், வெளிநாடுகளில் 5 நட்சத்திர ஓட்டல்கள், போன்றவை ஏதுமின்றி நிஜமான ஏழையாய் நம்மை விட்டு மறைந்து போனவர் காமராஜர். ஆனால் கோடான கோடி மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தார். அவர்களது அன்புக் கடலில் மூழ்கினார். 'வாராதுபோல் வந்த மாமணி' என்ற வரலாற்று பெருமையை அடைந்தார். அவர் முதலமைச்சராக பதவி வகித்தபோது, மனித நேயத்தோடு திட்டங்கள் தீட்டினார். அவரது மதிய உணவு திட்டம் ஏராளமான கல்வியாளர்களையும், அதிகாரிகளையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பொறியியல் வல்லுநர்களையும், மருத்துவ நிபுணர்களையும் உருவாக்கியது.

 சாகாவரம் பெற்றவர்

சாகாவரம் பெற்றவர்

எவ்வளவு சிறிய பத்திரிகையை சேர்ந்த செய்தியாளரானாலும் உடனடியாக அவரை நேரில் சந்திக்க முடிந்தது. பத்திரிகையாளர்களுக்கு முதன்முதலாக இந்தியாவிலேயே பென்ஷன் திட்டத்தை அமலாக்கியவர் காமராஜர். அதனை தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல், பட்ஜெட் உரையில் சேர்க்கமல், சட்டசபையில் அறிவிக்காமல் வெறும் வாய்மொழி உத்தரவு மூலமே பென்ஷன் தொகையை வழங்கிய கருணை உள்ளத்து சொந்தக்காரர். சரித்திரம் படைத்த இந்த சிவகாமி மைந்தன் உண்மையிலேயே சாகாவரம் பெற்றவரே!

English summary
Tribute to Perunthalaivar Kamarajar Memorial Day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X