For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 950 கோடியில் விரிவடைகிறது திருச்சி ஏர்போர்ட்.. "ரூஃப்" உடையாம பார்த்துக்கங்க பாஸ்!!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி விமான நிலையம் ரூ. 950 கோடியில் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. 61,634 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனையம் கட்டப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளன.

திருச்சி விமான நிலையத்தை, சென்னை விமான நிலையம் போல பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய முனையத்திற்கான வடிவமைப்பு மாதிரியை வெளியிட்டுள்ளார் விமான நிலைய ஆணைய குழு பொது மேலாளர் சஞ்சீவ் ஜின்டால்.

வர்த்தக ரீதியில், தமிழகத்தின் மிகப் பெரிய விமான நிலையமாக சென்னை விளங்குகிறது. அடுத்த பெரிய விமான நிலையம் திருச்சிதான். தற்போது புதிய முனையம் கட்டப்படுவதன் மூலம் திருச்சி விமான நிலையம் மேலும் பிரமாண்டமாகவுள்ளது.

சர்வதேச விமான நிலையம்

சர்வதேச விமான நிலையம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் (டெர்மினல்) கட்டப்பட இருக்கிறது. இந்த புதிய முனையத்தின் மாதிரி வடிமைப்பை வெளியிடும் நிகழ்ச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. அப்போது இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்தின் பொது மேலாளர் (பொறியியல் மற்றும் சமூக பொறுப்புணர்வு) சஞ்ஜீவ் ஜிண்டல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விரிவாக்கப் பணி குறித்து விளக்கினார்.

10 ஆண்டு கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு

10 ஆண்டு கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு

திருச்சி விமான நிலையத்தை மேம்படுத்துவதோடு, அடுத்த 10 ஆண்டுகளில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்து, எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய முனையம் அமைக்கப்படுகிறது. தற்போது 11,777 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள திருச்சி விமான நிலையத்தை, 61,634 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனையம் அமையும். பயணிகள் வருகைக்கும், புறப்பாடுக்கும் தனித்தனி கட்டடம் அமைகிறது.

சென்னை விமான நிலையம் போல

சென்னை விமான நிலையம் போல

சென்னை சர்வதேச விமான நிலையத்தைப் போன்று திருச்சி விமான நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டு போக்குவரத்தில் சிறப்பான சேவை அளித்து வருகிறது. அதேபோல, சரக்கு ஏற்றுமதியிலும் திருச்சி விமான நிலையம் குறிப்பிடத்தகுந்த பணியை ஆற்றி வருகிறது. புதிய ஒருங்கிணைந்த பயணிகள் விமான முனையத்தின் மேற்கூரை வடிவமைப்பானது, திருச்சியின் பாரம்பரியத் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. 48 சோதனை மையங்கள், 40 குடியேற்றப் பிரிவு மையங்கள், 3 சுங்கத்துறை சோதனை மையங்கள், 10 பயணிகள் ஏரோ பிரிட்ஜ் போன்றவை இந்த முனையத்தில் அமைகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவகையில் முனையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரத்தைச் சேமிக்கும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்படும். சூரிய ஒளியைப் பயன்படுத்தி 300 கி.வோ. முதல் 500 கி.வோ. வரை மின்சாரம் உற்பத்தி செய்து, அதனை பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பிரான்ஸ் நிறுவனம்

பிரான்ஸ் நிறுவனம்

திருச்சி விமான நிலைய புதிய முனைய கட்டுமான பணிக்கான பூர்வாங்க வேலைகளை பிரான்சு நாட்டை சேர்ந்த ஈஜிஸ் என்ற நிறுவனம் தொடங்கி விட்டது. கட்டுமான பணிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கும். புதிய முனையத்தின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.950 கோடியாகும். இதில் முனைய கட்டிடம் ரூ.872 கோடியிலும், விமானங்கள் நிறுத்துமிடம் (ஏப்ரன்) ரூ.63 கோடியிலும், வான் போக்குவரத்து கோபுர கட்டுப்பாட்டு அறை (ஏ.டி.சி. டவர்) ரூ.15 கோடியிலும் கட்டப்படும். 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஏப்ரன் மற்றும் கட்டுப்பாட்டு அறை பணிகள் நிறைவடையும். முனைய கட்டிடம் கட்டுமான பணிகள் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்து பயன் பாட்டுக்கு வரும்.

திருச்சியின் கலாச்சாரம்

திருச்சியின் கலாச்சாரம்

இந்த புதிய முனையமானது 61 ஆயிரத்து 634 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும். திருச்சி மண்ணின் பண்பாடு மற்றும் கலையம்சத்தை விளக்கும் வகையில் சர்வதேச தரத்துடன் கட்டிடத்தின் முன்பகுதி பிரமாண்டமாக அமைக்கப்படும். பயணிகள் புறப்பாடு பகுதியில் 10 வாசல்களும், வருகை பகுதியில் 6 வாசல்களும் இருக்கும். பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்ய 48 கவுண்ட்டர்களும், குடியுரிமை சோதனை தொடர்பாக 40 கவுண்ட்டர்களும் இயங்கும். எக்ஸ்ரே சோதனை கருவிகள் 15 அமைக்கப்படும். பயணிகளின் பொருட்களை அனுப்புவதற்காக 5 மையங்கள் அமைக்கப்படும்.

பணிகள் கையாளுகை

பணிகள் கையாளுகை

புறப்பாடு மற்றும் வருகை பகுதியில் ஒரே நேரத்தில் 2,900 பயணிகளையும், ஒரு வருடத்திற்கு 30 லட்சத்து 63 ஆயிரம் பயணிகளையும் கையாள முடியும். தற்போது ஒரே நேரத்தில் 470 பயணிகளை கையாளும் வசதி உள்ளது. புதிய முனையத்தின் கூரை சர்வதேச தரத்தில் நவீன கட்டிட கலையை பிரதிபலிக்கும் வகையில் மிகவும் உறுதியாக இருக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை கட்டிடமாக அமைக்கப்படும். சூரிய ஒளி மூலம் 300 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். மழை நீர் வடிகால் மற்றும் மழை நீர் சேகரிப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். விமான நிலைய வளாகத்திலேயே பயணிகள் வாகனங்களில் வந்து செல்வதற்கு வசதியாக 4 வழிச்சாலை அமைக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள், பெண்கள்

மாற்றுத் திறனாளிகள், பெண்கள்

ஒரே நேரத்தில் 1000 கார்களை நிறுத்த முடியும். புதிய முனையத்திற்கான மாதிரி வடிவமைப்பு சர்வதேச விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்பது பெருமைக்குரியதாகும். புதிய கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக வந்து செல்வதற்கான வசதிகள் செய்யப்படும். நெருக்கடி இன்றி பயணிகள் நிற்பதற்கும் இடம் ஒதுக்கப்படும். முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருக்கும். ‘கிரிகா' எனப்படும் 4 நட்சத்திர அந்தஸ்துடன் புதிய முனைய கட்டிடம் கட்டப்படும் என்றார் அவர்.

சென்னை விமான நிலையம் போல இல்லாமல் நல்லா ஸ்டிராங்கா மேற்கூரை போடுங்க பாஸ்.. இல்லாட்டி அது பாட்டுக்கு தொப்பு தொப்புன்னு விழுந்திட்டிருக்கும்.. சென்னை மாதிரி!

English summary
Trichy airport is being expanded at a cost of Rs 950 crore. The new terminal will have more facilities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X