For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிடிவி தினகரன் விடுதலையும், அரசியல் வாண வேடிக்கைகளும்

By Super Admin
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

அஇஅதிமுக வில் இனிமேல்தான் வானவேடிக்கைகள் அரங்கேறக் காத்திருப்பதாக விவரம் அறிந்த ஆளும் கட்சி பிரதிநிதிகளும், தமிழக அரசியலை உற்று நோக்கும் அரசியல் பார்வையாளர்களும் கருதுகின்றனர். காரணம் அஇஅதிமுக வின் (அம்மா) பிரிவு துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு டில்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதுதான்.

ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிட்டுக் கொண்டிருந்தார். ஏப்ரல் 12 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அதற்கு சில நாட்கள் முன்புதான் அஇஅதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் ஆணையத்திடம் கட்சியின் சின்னமான இரட்டை இலை யை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தனர். ஆனால் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை முடக்கி விட்டது.

Bail for TTV Dinakaran

காரணம் இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதாகவும், 2000 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பரீசீலிக்கப் பட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்து விட்டது ஆணையம்.

இந்தக் கட்டத்தில்தான் டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்தின் உயரதிகாரி ஒருவருக்கு தங்கள் அணிக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக சம்மந்தப் பட்டவர்களுக்கு 50 கோடி வரை லஞ்சம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியதாக டில்லி போலீஸ் தெரிவித்தது. இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கூறிய டில்லி போலீஸ் டிடிவி தினகரன் மற்றும் இந்த விவகாரத்தில் தினகரனுக்கு உதவியதாக குற்றஞ் சாட்டப் பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் ஆகிய இருவரையும் கைது செய்து டில்லி திஹார் சிறையில் அடைத்தது.

இந்த வழக்கை விசாரித்த டில்லி சிறப்பு நீதிமன்றம் தினகரன் மற்றும் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா ஆகிய இருவருக்கும் ஜூன் 1ம் தேதி ஜாமீன் வழங்கி விட்டது. ஆனால் இடைத் தரகர்களாக செயல் பட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டிருக்கும், ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சொல்லப் படும் நத்து சிங், லலித் குமார் மற்றும் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீனை மறுத்து விட்டது.

இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பை ஆட்டங் காணச் செய்திருப்பதாக கூறப்படுகிறது. காரணம் டிடிவி தினகரன், அஇஅதிமுக (அம்மா) பிரிவின் பொதுச் செயலாளர் சசிகலா வின் அக்காள் மகன். சசிகலா, தினகரன் இருவருக்கும் மத்திய அரசை ஆளும் பாஜக வுடனும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் தீராப் பகை ஏற்பட்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஒரு பக்கம் மோடி அரசு தன்னுடைய மூன்றாவது ஆண்டை முடித்திருக்கும் சூழலில் அதனை பாராட்டி ஒரு பக்கம் எடப்பாடியும், இன்னோர் பக்கம் ஓபிஎஸ் ஸூம் மோடியை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மறு பக்கம் அஇஅதிமுக வின் அதிகார பூர்வ ஏடான ''டாக்டர் நமது எம்ஜிஆர்'' பத்திரிகையால் மோடியை நார் நாராக கிழித்து கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. சிபிஎம் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான 'தீக்கதிரும்' திமுக வின் அதிகாரபூர்வ ஏடான 'முரசொலி' யும் கூட செய்யாத அளவுக்கு மோடிக்கு எதிரான கட்டுரைகளும், கேலிச் சித்திரங்களும் ''டாக்டர் நமது எம்ஜிஆர் '' பத்திரிகையில் வந்து கொண்டிருக்கின்றன.

''சசிகலா மற்றும் தினகரனின் முழு கட்டுப்பாட்டில்தான் ''டாக்டர் நமது எம்ஜிஆர்'' பத்திரிகை நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பத்திரிகையின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சசிகலா மற்றும் தினகரனின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப் பட்டவர்கள். ஆகவே எடப்பாடி மோடி அரசின் மூன்றாண்டு சாதனைகள் பற்றி என்ன பேசினாலும் அது முக்கியமானதல்ல. மாறாக ''டாக்டர் நமது எம்ஜிஆர்'' பத்திரிகையில் என்ன வருகிறது என்பதே முக்கியமானது'' என்கிறார் சசிகலா தரப்பை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர்.

தினகரன் வெளியில் வருவது என்பது அஇஅதிமுக வின் இரண்டு அணிகளும் ஒன்று சேரவேண்டும் என்ற சிலரின் முயற்சிகளை சிதைத்து சின்னாபின்ன மாக்கப் போகிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

''சசிகலா வை சிறையில் வைத்துக் கொண்டு அஇஅதிமுக வின் இரண்டு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்று இரண்டு தரப்புகளிலும் உள்ளவர்கள் மேற்கொள்ளும் எந்த முயற்சியையும், தினகரன் ஒப்புக் கொள்ள மாட்டார். இதில் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி தரப்பில் உள்ளவர்கள் காட்டும் ஆர்வத்தை ஓபிஎஸ் தரப்பில் உள்ளவர்கள் காட்டவில்லை. இங்குதான் சிக்கலே உருவாகும்.

ஒரு பக்கம் எடப்பாடி அரசு மோடி அரசுக்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கும் போது மறுபக்கம் அஇஅதிமுக ஏட்டில் மோடியை மிக கடுமையாக விமர்சிக்கும் கட்டுரைகள் வருவதை, தினகரன் சிறை மீண்ட பிறகு நடக்கப் போகும் காரியங்களுக்கான அறிகுறிகளாகவே நான் பார்க்கிறேன்'' என்கிறார் இந்தியாவில் பிராந்திய கட்சிகளின் செயற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் தில்லி பல்கலைக் கழகத்தை சேர்ந்த மனோஜ் பார்கவா.

அப்படியென்றால் எடப்பாடி ஒரு கட்டத்தில் தினகரனை கை கழுவி விட்டு தன்னுடைய அரசியலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. ''நிச்சயம் அதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. தினகரன், சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி மானஸ்தர்களை முற்றிலுமாக அஇஅதிமுக விலிருந்து அகற்றுவதற்கான பணியில் எடப்பாடியும், ஓபிஎஸ் ஸூம் கூட ஒன்றாகச் சேரலாம். இதனை நாம் ஒதுக்கித் தள்ளுவதற்கில்லை. அப்போது அதற்கு அஇஅதிமுக மூன்றாக பிளவுபடுகிறது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு போதும் தினகரனின் ஆற்றல்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்'' என்று மேலும் எச்சரிக்கிறார் மனோஜ் பார்கவா.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களை வைத்து பார்த்தால் அஇஅதிமுக வில் இதுதான் நடக்கும், இது நடக்காது என்றெல்லாம் யாரும் ஆருடம் சொல்லி விட முடியாது. ஒருவேளை மோடி அரசுக்கு எதிராக கடுமையான ஒரு நிலைப்பாட்டை தினகரன் தரப்பு மேற்கொண்டால் அப்போதுதான் வாண வேடிக்கைகள் தமிழக அரசியலில் துவங்கும். ஏற்கனவே மூன்று அந்நிய செலாவணி வழக்குகள் தினகரன் மீது 21 ஆண்டுகளாக சென்னையில் உள்ள பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கின்றன.

தினகரன் திஹார் சிறைக்கு அனுப்பப் படுவதற்கு முன்பே இந்த வழக்குகள் தூசி தட்டி எடுக்கப் பட்டு, விசாரணையும் ஆரம்பமாகி விட்டது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மூன்று வழக்குகளையும் நடத்துவதற்கு அமலாக்கப் பிரிவு காட்டும் உற்சாகம், முனைப்பு இதுவரையில் நாடு கண்டறியாதது.

ஆகவே எப்படி பார்த்தாலும் டிடிவி தினகரனின் விடுதலை என்பது எடப்பாடி தரப்பை ஆட்டங் காணச் செய்திருக்கிறது என்பதுதான் உண்மை.

விரைவில் வரவிருக்கும் குடியரசு தலைவர் தேர்தலில், அஇஅதிமுக வின் அத்தனை வாக்குகளையும் அள்ளத் துடித்துக் கொண்டிருக்கும் மோடி அரசு என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பதும் சுவாரஸ்யமான ஒரு விஷயம்தான். திஹார் சிறையிலிருந்து வெளியே வந்ததும், முதலில் தினகரன் செல்லவிருப்பது பெங்களூர் பரப்பனஹாரா சிறைக்குத் தான். காரணம் அங்கேதான் சசிகலா இருக்கிறார்.

இப்போது வாசகர்களுக்கு எல்லாம் புரிந்திருக்கும் என்று நாம் நம்பலாம். ஆகவே தினகரனின் விடுதலை நிச்சயம் தமிழ் நாட்டில் வரும் நாட்களில் பல அரசியல் வாண வேடிக்கைகளுக்கு வித்திடலாம் .... மோடி வித்தை எப்போதுமே வெற்றிப் பெற்றுக் கொண்டுதான் இருக்கும் என்ற பொதுவான அரசியல் பார்வை தினகரனின் விடுதலைக்குப் பிறகு பொய்த்துக் கூட போகலாம் ..... காரணம் அரசியலில் இது தான் நடக்கும், அது நடக்காது என்று எந்த நிகழ்வையும் நாம் புறந் தள்ளி விட முடியாது.

English summary
TTV Dinakaran has been released on Bail. It has created much expectations in the Political circles and among the supporters of ADMK Amma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X