For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லை மீறிய குடிகாரர்கள் தொல்லை: கோவிலாக மாறிய பயணிகள் நிழற்குடை

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே குடிகாரர்கள் தொல்லை தாங்க முடியாமல் பயணிகள் நிழற்குடையை கோவிலாக பொதுமக்கள் மாற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுகிராமம் மெயின் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் புதுக்கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் மழையிலும், வெயிலிலும் நனைந்து, காய்ந்து வந்தனர். இதையடுத்து நகராட்சி சார்பில் அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

Tuticorin people's shock treatment to drunkards

கோவில்பட்டியில் இருந்து வடஇழுப்பையூரணி கிராமப் பகுதிக்கு செல்லும் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. இந்நிலையில் இந்த பயணிகள் நிழற்குடையில் இரவு நேரத்தில் சிலர் கும்பலாக அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே விட்டு செல்வதும், ஒரு சில நாட்களில் போதை தலைக்கேறிய சிலர் பயணிகள் நிழற்குடை இருக்கையில் படுத்துக் கிடப்பதும் தொடர் கதையாக இருந்து வந்தது.

மேலும் பகல் நேரத்திலும் இங்கு குடிகாரர்கள் அமர்ந்து குடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் இங்கு நிற்பதற்கு பயந்து வந்தனர்.

இதையடுத்து குடிகாரர்களின் அட்டகாசத்தை ஒடுக்க பொதுமக்கள் முடிவெடுத்தனர். இதன்படி பயணிகள் நிழற்குடை சுவர்களில் குழல் ஊதும் கிருஷ்ணர், வனத்தில் கோமாதாவுடன் (பசுக்களுடன்) உலா செல்லும் கிருஷ்ணர் உள்ளிட்ட டிஜிட்டல் பேனர்களை ஒட்டினர். மேலும் நிழற்குடை முன்பு ஒரு கம்பத்தில் அணையா தீபவிளக்கும், மற்றொரு கம்பத்தில் புல்லாங்குழலையும், அருகில் துளசி செடியையும் அதிரடியாக வைத்தனர்.

கம்பத்தில் உள்ள விளக்கில் 24 மணிநேரமும் தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணர் கோவில் போல் இருக்கும் இந்த நிழற்குடையில் காலை, மாலையும் சிறப்பு பூஜையும் நடக்கிறது. இதனால் குடிமகன்கள் அங்கு வருவதை தவிர்த்துவிட்டனர். ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்ததால் மக்கள் நிம்மதியாக பழையபடி நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஷாக் ட்ரீட்மென்ட்டை மற்ற பகுதிகளிலும் பயன்படுத்தலமா என பொதுமக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர்.

English summary
Tuticorin people have given a shock treatment to drunkards which will really impress you.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X