For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழ அகதிகள் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி ஆக. 24-ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம்: வேல்முருகன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஈழ அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி வரும் 24-ந் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயற்கை வேளாண் ஆர்வலர் நம்மாழ்வார், மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம், காந்தியவாதி சசிபெருமாள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் விவரம்:

கலாமுக்கு இரங்கல்

கலாமுக்கு இரங்கல்

இந்தியாவின் ஏவுகணையின் நாயகன், மக்களின் மகத்தான குடியரசுத் தலைவர், அப்பழுக்கற்ற மாமனிதர் மாமேதை அப்துல்கலாம் அவர்களின் மறைவுக்கும்

மது ஒழிப்புக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து அந்த போராட்ட களத்திலேயே தம்முயிரைத் தியாகம் செய்த காந்தியவாதி பெரியவர் சசிபெருமாள் அவர்களின் மறைவுக்கும் இயற்கை வேளாண் வல்லுநர் அய்யா நம்மாழ்வார் அவர்கள் மறைவுக்கும் இந்த செயற்குழுக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆந்திராவில் கூலித் தொழிலுக்காக சென்ற 20 அப்பாவி பழங்குடி தமிழர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் எனக் கூறி கடத்தி கொடூர சித்ரவதை செய்து இனப் படுகொலை செய்தது ஆந்திரா. இந்த இனப்படுகொலைக்கு நீதி கோரியும் ஆந்திரா அரசை கண்டித்தும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட சென்னை பேரணியில் நமது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியை உயர்த்திப் பிடித்தபடியே உயிரைக் கொடையாக்கி வீரமரணத்தைத் தழுவிய 'கொடிவீரன்' 'ஈகி' சிதம்பரம் வினோத் அவர்களுக்கு வீரவணக்கத்தையும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

படிப்படியாக மதுவிலக்கு

படிப்படியாக மதுவிலக்கு

மறைந்த மக்களின் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்களது நினைவைப் போற்றும் வகையில் ராமேஸ்வரம் பகுதியில் உயர் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்; அவர் பிறந்த ராமேஸ்வரத்தின் வங்கக் கடல் பகுதியில் மிக பிரமாண்டமான முழு உருவச் சிலை ஒன்றை அமைக்க வேண்டும் என்று இந்த செயற்குழு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது. மது ஒழிப்புப் போராட்ட களத்திலேயே உயிரைத் தியாகம் செய்த காந்தியவாதி பெரியவர் சசிபெருமாளின் தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

சதானந்த கவுடாவுக்கு கண்டனம்

சதானந்த கவுடாவுக்கு கண்டனம்

காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டும் தமிழகத்துக்கு உரிய நீர் திறந்துவிடப்படவில்லை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகிறார்... இந்திய நாட்டின் மத்திய அமைச்சராக இருக்கும் சதானந்த கவுடாவும் இந்த மேகதாதுவால் தமிழகத்துக்கு பாதுகாப்புதான் என கூறி வருகிறார். சதானந்த கவுடா ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களுக்குமான அமைச்சர் என்பதை மறந்துவிட்டு கர்நாடகாவின் பிரதிநிதிபோல் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் அமைப்பை மத்திய அரசு உடனே ஏற்படுத்த வேண்டும்; மேகதாதுவில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அணை கட்ட கூடாது என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று இந்த செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. தென் தமிழகத்தின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை உடனே நியமித்து அணையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது. நெய்யாறு அணையில் இருந்து உரிய நீரை கேரளா திறந்துவிட தமிழகம் மற்றும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த செயற்குழுக் கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

7 தமிழர் விடுதலை

7 தமிழர் விடுதலை

ராஜிவ் காந்தி வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை ரத்து செய்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்திருப்பதை இச்செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களையே விடுதலை செய்துள்ள நிலையில் ராஜிவ் காந்தி வழக்கில் கால் நூற்றாண்டுகாலமாக சிறை தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் ஆணித்தரமான வாதத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றியுடன் வரவேற்கிறது. இனியும் 7 தமிழர் விடுதலையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் போல் முட்டுக்கட்டைப் போட்டு குறுக்குசால் ஓட்டிக் கொண்டிருக்காமல் 7 தமிழரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் நல்லெண்ண நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது.

மத்திய அரசுக்கு கண்டனம்

மத்திய அரசுக்கு கண்டனம்

சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வரும் கொடுமை நீடிக்கிறது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் போது துப்பாக்கிச் சூடு நடத்துதல், சிறைபிடித்தல், வலைகளை அறுத்தி கொடூரமாகத் தாக்குவது என சிங்களக் கடற்படையின் அட்டூழியம் நீடிக்கிறது. இந்த கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம் என சூளுரைத்த பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வந்தும் இன்னமும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை என்ற வேதனையை இச்செயற்குழுக் கூட்டம் வெளிப்படுத்துகிறது. கடந்த 2 மாதங்களாக இலங்கை சிறையில் கொடுமைகளை அனுபவித்த 40 தமிழக மீனவர்கள் தற்போதுதான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர் விடுதலைக்காக மத்திய அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடாததை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

குஜராத்தைச் சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தால், ரஷ்யாவுக்கு சென்ற நிலையிலும் கூட பாகிஸ்தானின்பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும் பிரதமர் மோடி அவர்கள், தமிழக மீனவர்கள் விவகாரத்திலும் அதே நிலைப்பாட்டை மேற்கொண்டு தமிழக மீனவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறையில் இருந்து உயிர்தப்பி தாய் தமிழகத்தில் அடைக்கலம் கோரி வந்த ஈழத் தமிழ் உறவுகள் பல்வேறு காரணங்களால் தொடர்ந்தும் பல ஆண்டுகளாக சிறப்பு முகாம்கள் எனும் சிறைக் கொட்டடிகள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சிறப்பு முகாம்களில் இருந்து தங்களை விடுதலை செய்யக் கோரி செங்கல்பட்டு, பூவிருந்தவில்லை உள்ளிட்ட முகாம்களைச் சேர்ந்த ஈழத் தமிழ் உறவுகள் பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி முகாமில் ஈழத் தமிழர் கணவனும் மனைவியுமாக தற்கொலைக்கும் முயன்றுள்ளனர்.

ஈழத் தமிழர் நலனில் பெரிதும் அக்கறை காட்டுகிற தமிழக அரசு, ஒட்டுமொத்த இந்த வதை முகாம்களாகிய சிறப்பு முகாம்களை இழுத்து மூடி அவர்கள் இதர ஈழத் தமிழர்களைப் போல முகாம்களில் வாழவோ அல்லது விரும்பும் வெளிநாடுகளுக்கு செல்லவோ தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது. இந்த சிறப்பு முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி ஆகஸ்ட் 24-ந் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.

20 தமிழர் படுகொலை- சிபிஐ விசாரணை

20 தமிழர் படுகொலை- சிபிஐ விசாரணை

ஆந்திராவில் கூலித் தொழிலாளர்களாக சென்ற 20 அப்பாவி பழங்குடி இன தமிழர்களை செம்மரம் வெட்டியவர்கள் எனக் கூறி கடத்தி சித்ரவதை செய்து சுட்டுப் படுகொலை செய்த இனப்படுகொலைக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும் 20 அப்பாவி தமிழர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடும்பத்துக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்வைத்த வேண்டுகோளை ஏற்று தாயுள்ளத்துடன் பரிசீலித்து 20 தமிழர் குடும்பத்துக்கும் அரசுப் பணி வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் இந்த படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

English summary
Thamizhaga Valvurumai Katchi leader T. Velmurugan has demanded to the close of all eelam Tamils special camps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X