For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடஒதுக்கீட்டு முறையை அடியோடு ஒழிக்கும் உச்சநீதிமன்ற கருத்துகள்... தி. வேல்முருகன் கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இடஒதுக்கீட்டு முறையை அடியோடு குழிதோண்டி புதைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம், ஆந்திரா, தெலுங்கனா மாநிலங்களில் சிறப்பு மருத்துவ படிப்புகளில் ஜாதி, மதம், இருப்பிடம் சார்ந்த இடஒதுக்கீடே கூடாது; தகுதி அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரசியல்சாசனத்துக்கு விரோதமான கருத்தை உச்சநீதிமன்றம் முன்வைத்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

TVK leader condemns SC against the reservation

இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல.. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமை. ஆயிரமாயிரமாண்டுகாலமாக ஒடுக்கப்பட்டு கிடக்கும் மக்கள் மேலெழுந்து வருவதற்காக இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமை.

ஆனால் உச்சநீதிமன்றமோ, 68 ஆண்டுகாலமாக இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது; இதனால் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றெல்லாம் கருத்து தெரிவித்திருப்பது இவர்கள் என்ன வானத்தில் இருந்து குதித்துவந்து கருத்து தெரிவிக்கிறார்களா? என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

ஏனெனில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில்தான் கடந்த பல ஆண்டுகளாக இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டாலும் கூட பெரும்பான்மை மக்களின் ஜாதிவாரியான மக்கள் தொகைக்கேற்ப அந்த இடஒதுக்கீடு இன்னமும் முழுமையாக கிடைக்காத நிலை இருக்கிறது.

பிற மாநிலங்களிலோ 1995களுக்குப் பின்னர்தான் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது. 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் சில மாநிலங்களில் இடஒதுக்கீடே அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

1980களில் மண்டல் குழு பரிந்துரைகள் விவாதிக்கப்பட்ட போதும் கூட 1990களில் அமல்படுத்தப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னரே நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்ட போதும் தற்போது வெறும் 8% அளவிலானோர்தான் பணிகளில் பயனடைந்துள்ளனர்.

இப்படி இடஒதுக்கீடு என்பது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத, நிறைவேறாத நிலையில் உயர் கல்வியில் இடஒதுக்கீடே கூடாது; தகுதி அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது அதிர்ச்சிக்குரியது.

இடஒதுக்கீடு முறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற இந்துத்துவா சங் பரிவார கும்பல்களின் கருத்தையே உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்து எதிரொலிக்கிறது. சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கிற, இடஒதுக்கீட்டு முறையை குழிதோண்டி புதைக்கிற இந்த கருத்தை மத்திய, மாநில அரசுகள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.

சமூக நீதியின் குரல்வளையை நெறிக்க முயலுகிற இத்தகைய முயற்சிகளை முறியடிக்க சமூகநீதிக்கு போராடும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.

இவ்வாறு பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

English summary
Tamizhaga Vazhvurimai Katchi leader Velmurugan has condemned the Supreme Court observations against reservation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X