For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி கண் முகாமில் 66 பேரின் பார்வை பறி போன வழக்கு.. 3 டாக்டர்களுக்கு ஒரு ஆண்டு சிறை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருச்சி: இலவச கண் சிகிச்சை முகாமில் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட 66 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்ட வழக்கில் 3 மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி முதன்மை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம் இணைந்து 28.07.2008 ஆம் ஆண்டு நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் விழுப்புரம் மாவட்டம், நைனார்பாளையம், கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த 66 பேர் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Two doctors among three sentenced to jail in Perambalur botched eye surgery case

பார்வை இழப்பு

கண் புரை அறுவை சிகிச்சை செய்ததில் அவர்கள் அனைவருக்கும் பார்வை இழப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அரசு சார்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வேண்டி மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜூ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

முதலில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மற்றொரு கண்ணுக்கு சிகிச்சை அளிக்க உயர்மட்ட மருத்துவர்கள் குழு அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அனைவருக்கும் எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சி.பி.ஐ விசாரணை

வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மனு அளித்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2011ஆம் ஆண்டு இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதோடு, வழக்கு விசாரணையை திருச்சி முதன்மை நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டது மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக் காலமாக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிபிஐ இவ்வழக்கை விசாரித்து 15.03.2011 அன்று குற்றப்பத்திரிக்கை தயாரித்து, 14.09.2011-ல் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஜோசப் மருத்துவமனை இயக்குநர் நெல்சன் ஜேசுதாசன், துணை இயக்குநர் கே.அவ்வை, தலைமை நிர்வாகி ஜே.கிறிஸ்டோபர் மற்றும் மருத்துவர்கள் அசோக், சவுஜன்யா, தென்றல் பொன்னுதுரை, ஆண்ட்ரூஸ் ஆகியோர் மீது கொடுங்காயம் விளைவித்தல் சட்டப் பிரிவின் கீழ் குற்றப்பத்திரிக்கையை திருச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் 2014 மார்ச் மாதம் சிபிஐ தாக்கல் செய்தது.

ஓராண்டு சிறை தண்டனை

இவ்வழக்கு விசாரணை கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த நிலையில் திருச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் நேற்று தீர்ப்பு வழங்கினார். ஜோசப் மருத்துவமனை இயக்கு நர் நெல்சன் ஜேசுதாசன், தலைமை நிர்வாகி ஜே.கிறிஸ்டோபர் மற்றும் மருத்துவர் அசோக் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து அவர் தீர்ப்பளித்தார். மருத்துவமனை துணை இயக்குநர் கே.அவ்வை, மருத்துவர்கள் சவுஜன்யா, தென்றல் பொன்னுதுரை மற்றும் தொழில்நுட்பப் பணியாளர் ஆண்ட்ரூஸ் ஆகியோரை விடுவித்ததுடன், அவர்கள் மீது இந்திய மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தார்.

ரூ.4 லட்சம் இழப்பீடு

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக, அவர்கள் கோரிய ரூ.5 லட்சத்தில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்ட நிலையில் எஞ்சிய 4 லட்சத்தை இழப்பீடாகக் கருதி, அந்தத் தொகைக்கு 7.5 சதவீதத்தை வட்டியாகக் கணக்கிட்டு, கண் அறுவை சிகிச்சை செய்த தினத்திலிருந்து தீர்ப்பு தேதிவரை கணக்கிட்டு இந்த இழப்பீட்டை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜோசப் மருத்துவமனை இயக்குநர் நெல்சன் ஜேசுதாசன், தலைமை நிர்வாகி ஜே.கிறிஸ்டோபர் மற்றும் மருத்துவர் அசோக் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதன் முறையாக தண்டனை

இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் தவறாக சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர்களுக்கு முதன் முறையாக சிறை தண்டனை அளிக்கப்பட்டது இந்த வழக்கில்தான் என்று சிபிஐ வழக்கறிஞர் கண்ணன் தெரிவித்தார்.

மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும், பார்வை இழந்தவர்களுக்கான இழப்பீடு போதுமானதாக இல்லை எனவும் கருத்து தெரிவித்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர், "இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும்" என்றனர்.

English summary
The chief judicial magistrate in Trichy on Wednesday sentenced three persons, including two doctors, to a one-year imprisonment in a case relating to the loss of vision to 66 people who underwent cataract surgeries at Joseph's Eye Hospital in Perambalur on July 29, 2008.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X