For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்து: காவல்துறையின் அலட்சியம் - தப்பிய குற்றவாளிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருச்சி: இந்தியாவையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் பத்தாண்டுகளுக்குப் பின்னர் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பலருக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு வேதனையும் அளித்திருக்கிறது.

இதேபோன்றதொரு மற்றொரு தீவிபத்து வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாக உள்ளது.

Two tragedies, two verdicts

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து நிகழ்வதற்கு 6 மாதங்களுக்கு முன்புதான் அதாவது 2004ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி, 64 மனித உயிர்களை விழுங்கிய ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்து நிகழ்ந்தது.

இதுவும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த மிகவும் கோரமான சம்பவம். இந்த வழக்கிலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்காதபடி குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்தனர் காவல் துறையினர்.

மண்டபத்தில் பற்றிய தீ

2004-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் அமைந்துள்ள பத்மபிரியா திருமண மண்டபத்தில் நேரிட்ட தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காயமடைந்தனர்.

மின்கசிவினால் விபத்து

வீடியோ கேமரா விளக்கிலிருந்து வெப்பம் பரவியும், வீடியோ கேமரா விளக்குக்காக பயன்படுத்திய வயர்கள் வழியே மின் கசிவு ஏற்பட்டதாலும் தீ விபத்து நிகழ்ந்ததாகக் கூறி 6 நபர்கள் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தப்பிய அதிகாரிகள்

ஒரு பழைய வீட்டை முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் திருமண மண்டபமாக மாற்றி வணிகரீதியாக செயல்பட அனுமதித்த மாநகராட்சி அதிகாரிகள், உள்ளூர் திட்டக் குழும அலுவலர்கள் என யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை காவல் துறை.

தாமதமான வழக்கு விசாரணை

இந்த வழக்கில் 2 மாதங்களில் (22.3.2004 அன்று) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு 2009ஆம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. 49 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் 30 பேர் வரை சாட்சியமளிக்கவே வரவில்லை.

5 பேர் மீது குற்றப்பத்திரிகை

நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில், "சாட்சிகளின் விலாசம் கண்டுபிடிக்க முடியவில்லை" என காரணம் சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவரான பந்தல் அமைப்பாளர் செல்வம் இறந்துபோய்விட 5 பேர் வழக்கை எதிர்கொண்டனர்.

2012ல் தீர்ப்பு

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதியன்று வழங்கப்பட்டது. அப்போதைய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வேல்முருகன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 நபர்களையும் குற்றவாளிகள் என அறிவித்து மண்டப உரிமையாளர் ராமசாமிக்கு 2 ஆண்டுகளும், சடகோபன், தர்மராஜ் ஆகியோருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், முருகேசனுக்கு 6 மாதம் சிறைதண்டனையும் விதித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.35,30,000-ஐ மண்டப உரிமையாளர் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். 5 குற்றவாளிகளும் ஜாமீன் பெற்று வெளியே சென்றனர்.

காவல்துறையின் அலட்சியம்

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கவனக் குறைவாக விபத்து ஏற்படுத்துதல் என்கிற பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்ததால் திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக இரண்டாண்டுகள் சிறை தண்டனை மட்டுமே கிடைத்தது.

64 உயிர்களுக்கு பதில் என்ன?

தீ விபத்தில் கருகிப் போன 64 பேரின் உறவினர்களும் இந்த தீர்ப்பை கேட்டு கலங்கித்தான் போனார்கள். பதறித்துடித்தனர். உயிரிழந்தவர்களின் ஆன்மா மன்னிக்காது என்று சாபமிட்டனர்.

அரசு மேல்முறையீடு இல்லை

தீர்ப்பு வெளியானபோது, இந்த வழக்கில் அரசின் ஆலோசனை பெற்று மேல் முறையீடு செய்யப்படும் என போலீஸ் தரப்பில் கருத்து தெரிவித்தனரே தவிர அப்படி செய்யவில்லை.

ரத்து செய்ய மேல்முறையீடு

ஆனால், வழக்கில் சொற்ப தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட மண்டப உரிமையாளர் தரப்பில், இந்த தீர்ப்பு மற்றும் அபராதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பதுதான் வேதனை.

மறுக்கப்பட்ட நீதி

ஸ்ரீ ரங்கம் தீ விபத்து, கும்பகோணம் பள்ளி தீ விபத்து என இந்த இரண்டு தீ விபத்துகளிலும் 158 அப்பாவிகள் உயிரிழந்தனர். இந்த இரண்டு வழக்குகளிலுமே விசாரணைகளும், தீர்ப்பும் தாமதமாகவே கிடைத்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று கூறுவார்கள். இந்த இரண்டு தீ விபத்து வழக்குகளிலுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

English summary
Sixty four people attending a marriage at the Sri Padmapriya marriage mall in Srirangam on January 23, 2004, were killed and 33 sustained severe burns, in a fire, which reportedly broke out caused by short circuit and excessive heat generated by the video equipment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X