For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி: அமெரிக்க கப்பல் பிடிபட்ட வழக்கில் 35 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்தது மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக இந்திய கடலோர படை மற்றும் க்யூ பிரிவு போலீசாரால் 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பலில் இருந்த 35 பேர் மீதான குற்றமும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் மற்றும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜசேகரன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க கப்பலிற்கு சட்டவிரோதமாக டீசல் சப்ளை செய்ததுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த "சீமென்கார்டு ஓகியா" என்னும் அமெரிக்க தனியார் பாதுகாப்பு கப்பலை கடலோர காவல்படையினர் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி மடக்கி பிடித்தனர். அந்த கப்பல் 12ம் தேதி கரைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தரப்பு அதிகாரிகளும் பிடிபட்ட கப்பல் மாலுமிகளிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

U.S. ship crew gets 5 year imprisonment in Tuticorin

35 பேர் கைது

அமெரிக்க கப்பலில் இருந்த 25 பாதுகாவலர்கள், 10 மாலுமிகள் ஆக மொத்தம் 35 பேரை கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் இந்த வழக்கு கியூ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகள், 5 ஆயிரத்து 680 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். அதே போன்று ஆயுத கப்பலுக்கு டீசல் வினியோகம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆவணங்கள் பறிமுதல்

இதையடுத்து அமெரிக்க கப்பலின் கேப்டன் உள்பட 35 மாலுமிகளை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கப்பலில் இருந்த ஆயுதங்கள் மற்றும் மாலுமிகளின் பாஸ்போர்ட்டு உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குற்றப்பத்திரிகை

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 41 பேருக்கு கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியன்று 2 ஆயிரத்து 169 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் 3 பகுதிகளை கொண்ட புத்தகமாக வழங்கப்பட்டது. டீசல் வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு தனியாக குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கப்பல் மாலுமிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் படைக்கல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

35 பேரும் விடுவிப்பு

அமெரிக்க கப்பலின் மாலுமிகள் ஆயுதப்பிரிவு சட்டத்தின்கீழ் தங்களை கைது செய்ததை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும், உடைமைகளை விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 35 மாலுமிகளையும் விடுவித்து உத்தரவிட்டது. மேலும் அவர்களின் பாஸ்போர்ட், துப்பாக்கி, ஆயுதங்களை தவிர மற்றவைகளை ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

இதை எதிர்த்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் கீழ் கோர்ட்டு இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டது.

மீண்டும் விசாரணை

அதன்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது இந்த வழக்கில் இதுவரை ஆஜராகாத கப்பல் நிறுவனம் மற்றம் இயக்குனர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. மீதம் உள்ள 43 பேர் மீதான வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

குற்றச்சாட்டு பதிவு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதியன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி என்.ராஜசேகர் முன்னிலையில் விசாரணை தொடங்கியது. ஆகஸ்ட் 24ம்தேதியன்று 43 பேர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கப்பல் கேப்டன் டுட்னிக் வாலண்டைன், தலைமை பொறியாளர் லலித்குமார் குராங், தலைமை அதிகாரி சிடரன்கோ வாலேரி, 2ம் நிலை அதிகாரி ராதேஷ்தர் திவேரி ஆகிய 4 பேர் மீதும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்து இருத்தல், உரிமம் இன்றி ஆயுதங்கள் வைத்து இருத்தல், ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் அனுமதியின்றி நுழைதல், மற்றும் சட்டவிரோதமாக டீசல் விற்பனை, வாங்குதல் ஆகிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

43 பேர் மீது விசாரணை

கப்பலில் இருந்த மற்ற 31 பேர் மீதும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்து இருத்தல், உரிமம் இன்றி ஆயுதங்கள் வைத்து இருத்தல், ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் அனுமதியின்றி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. மற்ற 8 பேர் மீதும் சட்டவிரோதமாக டீசல் விற்பனை, வாங்குதல் ஆகிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது 43 பேரும் குற்றத்தை மறுத்து விசாரணை நடத்த கோரினர்.

காரசார வாதம்

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 69 சாட்சிகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 44 சாட்சிகள் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, போலீஸ் தரப்பில் துப்பாக்கி, தோட்டா, கப்பல் உள்பட 65 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே போன்று எதிர் தரப்பிலும் பாஸ்போர்ட் உள்பட 65 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. சாட்சி விசாரணை முடிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 14ம்தேதி முதல் 17ம் தேதி வரை வக்கீல்கள் வாதம் நடந்தது. இதில் அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற அரசு வக்கீல் சண்முகவேலாயுதம், சிறப்பு அரசு வக்கீல் சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இன்று தீர்ப்பு

எதிர் தரப்பில் வக்கீல்கள் சுப்பிரமணிய ஆதித்தன், ஆறுமுகராம், ஜவகர், ஜூடுபொன்னையா, பெரியசாமி, பூங்குமார் உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். உச்சநீதிமன்றம் வழக்கை 6 மாதத்துக்குள் முடிக்க உத்தரவிட்டு இருந்தது. அதன்படி வருகிற 23ம்தேதிக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் வழக்கில் வக்கீல்களின் வாதங்கள் முடிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

35 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைதண்டனை

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் 35 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 பேர், எஸ்டோனியாவைச் சேர்ந்த 14 பேர்
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 6 பேர், இந்தியர்கள் 12 பேர் உட்பட 35 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க கப்பலிற்கு சட்டவிரோதமாக டீசல் சப்ளை செய்ததுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Tuticorin district magistrate court ordered 5 year imprisonment for Thirty five men, including the crew of the detained U.S. ship ‘Seaman Guard Ohio.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X