For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடுமலை சங்கர் ஆணவக் கொலை: கவுசல்யாவின் உறவினர்கள் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி கவுசல்யாவின் தாய், தந்தை உட்பட 9 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்,22. தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்த இவர், தன்னுடன் பயின்ற திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், கடந்த மார்ச் 13ம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே ஒரு கும்பல் இருவரையும் சராமாரியாக வெட்டியது. சிகிச்சை பலனின்றி சங்கர் மரணமடைந்தார். கவுசல்யா படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

Udumalai Sankar murder: Kausalya's father and mother arrest under Goondas act

இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்த படுகொலை சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுசல்யா, தனது அம்மா, அப்பா மற்றும் மாமாக்கள் இணைந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினர்.

இதையடுத்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் முன் ஆஜரான கவுசல்யா ரகசிய வாக்குமூலம் கொடுத்தார். இந்த வழக்கு தற்போது திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றதில் நடந்து வருகிறது.

ஆணவக்கொலை தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை சின்னச் சாமி, தாயார் அன்னலட்சுமி, செல்வக்குமார், மைக்கேல், பால கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டி வீரன்பட்டியைச் சேர்ந்த மணி கண்டன், பாண்டித்துரை, தன்ராஜ் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கவுசல்யாவின் பெற்றோர் சின்னசாமி, அன்னலட்சுமி மற்றும் இளைஞர் வி.பிரசன்ன குமார் ஆகியோர் ஜாமீ்ன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால நீதி பதி பி.கலையரசன் முன்பாக மே 9ம் தேதி நடந்தது.

அப்போது நீதிபதி, ‘ஜாதியின் பெய ரால் சமூகம் சீரழிந்துகொண்டு இருக் கிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். இந்த வழக்கின் குற்றவாளிகளை இப்போதைய சூழலில் வெளியே விட்டால் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

ஜாதிய ஆதிக்கத்தால் சாட்சிகளை கலைத்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், அவர்கள் 3 பேரது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறினார்.

சங்கர் படுகொலையை நேரில் பார்த்த மனஉளைச்சலால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவுசல்யா தற்கொலைக்கு முயற்சி செய்தார். சிகிச்சைக்குப் பின்னர் சங்கரின் பெற்றோருடன் அவரது வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பட்டி வீரன்பட்டி மணிகண்டன் மற்றும் கல்லூரி மாணவர் ஆகியோரை தவிர்த்து மற்ற 9 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர், மாவட்ட ஆட்சியர் ஜெயந்திக்கு பரிந்துரை செய்தார். இதையேற்று 9 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி உத்தரவிட்டார்.

English summary
Kausalya's relations 9 person including father, mother arrested under Goondas act in connection with Dalit man Sankar’s muder case case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X