For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழரின் உரிமை போராட்டத்தை உதாசீனப்படுத்தும் மத்திய, மாநில அரசுகள்! ஜனநாயகத்திற்கே கேலிக்கூத்து

இதுவரை முதல்வரோ, அமைச்சர்களோ, மத்திய அரசு பிரதிநிதிகளோ ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் போராட்டத்தை கைவிட கோரிக்கைவிடுக்கவில்லை.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர கோரி மாநிலம் முழுக்க தமிழர்கள் தன் எழுச்சியாக, அறப்போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியுள்ளது.

கடந்த இரு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்த தேவையான சட்ட திருத்தத்தை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தது மத்திய அரசு. அவர்களுக்கு நெருக்கடி தராமல் 'தேமே' என்று அசைவற்று இருந்தது மாநில அரசு.

இந்நிலையில்தான் 3வது வருடமான இவ்வாண்டும் ஜல்லிக்கட்டு தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் கொதித்தனர் மக்கள். குறிப்பாக இளைஞர்கள். வெகுண்டெழுந்து வீதிக்கு வந்தனர்.

தமிழர் கலாசாரம் காக்கப்பட வேண்டும் என்ற ஒற்றைவார்த்தைதான் அவர்களை ஒருங்கிணைத்தது. அரசியல் கட்சிகள் யாரையும் எதிர்பாராமல், வந்தவர்களையும் திருப்பியனுப்பிவிட்டு, தமிழர்களால், தமிழ் பண்பாட்டுக்காக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

வன்முறை போராட்டம் இல்லை

வன்முறை போராட்டம் இல்லை

இந்த போராட்டங்கள் அனைத்துமே அறவழி போராட்டங்கள். காவிரியில் தண்ணீரை திறக்கச் சொன்னதற்கே பல நூறு தமிழர் வாகனங்களை தீயிட்டு எரித்து, கடைகளை உடைத்து எரிந்து ஒரே நாளில் போர் பூமியாக பெங்களூரை பிரகடனப்படுத்திய அண்டை மாநில அன்பர்களை போலான போராட்டம் இல்லை இது. காந்தி காட்டிய அறவழி போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதை பார்த்து உலகே வாய் பிளந்து நிற்கிறது.

கண்ணிருந்தும் பார்க்காமல்..

கண்ணிருந்தும் பார்க்காமல்..

ஜல்லிக்கட்டுக்கு நீதி கேட்கும் ஹேஷ்டேக், தேசிய அளவில் டிரெண்டிங் ஆகிக்கொண்டுள்ளது. தமிழ் டிவி சேனல்கள் கிட்டத்தட்ட 24 மணி நேரமும் இந்த செய்திகளை காண்பிக்கின்றன. தேசிய ஊடங்கள் வழக்கம்போல தமிழர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை, கண்டுகொள்ளவில்லை என்றபோதிலும், சமூக ஊடகமும், தமிழ் ஊடகங்களும் முறையே மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு போராட்ட களத்தை தத்ரூபமாக படம்பிடித்து காட்டிவிட்டன.

மாநில அரசின் விழா

மாநில அரசின் விழா

அலங்காநல்லூரில் போராட்டக்காரர்கள் மீது கை வைத்ததற்கே, மெரினா, வேலூர், கோவை, கடலூர், நெல்லை என தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இளைஞர் படை வீதிக்கு வந்து நிற்பதை பார்த்து போலீசார் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் மாநில அரசு விழா நடத்தியபடி உள்ளது.

கூப்பிடும் தூரத்தில் போராட்டம்

கூப்பிடும் தூரத்தில் போராட்டம்

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு தபால் தலை வெளியிடுவதி்ல் முதல்வர் பன்னீர் செல்வமும், சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவும் நாள் முழுக்க பிஸியோ பிஸி. எட்டிப்பார்த்தால் தெரியும் தூரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினாவில் உச்சி வெயிலில் எதையும் எதிர்பார்க்காமல் போராடியும், அதை ஏன் என்று கேட்க இந்த இருவருக்கும் மனது வரவில்லை. ஓ.பி.எஸ் வர வேண்டும்.. ஓ.பி.எஸ் வர வேண்டும்.. என்ற ஒற்றை வரியை, உச்சஸ்தாபியில் அவர்கள் திரும்ப திரும்ப சொல்லியும் முதல்வர் மனம் இளகவில்லை.

சட்டத்தில் இடமுள்ளது

சட்டத்தில் இடமுள்ளது

தமிழகமே பற்றி எரிந்து கொண்டுள்ள இந்த சூழலிலும் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க சிறிதும் யோசிக்கவில்லை என்பது இதில் கவனிக்க வேண்டியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருந்தாலும் அவசர சட்டம் பிறப்பிக்க சட்டத்தில் இடமுள்ளது என்று முன்னாள் நீதியரசர் மார்கண்டேய கட்ஜுவே சொன்ன பிறகும், கண்டுகொள்ளவில்லை மத்திய அரசு.

பூச்சாண்டி

பூச்சாண்டி

"போராட்டம் நடத்தாதீர்கள், பீட்டா அதையே ஆதாரமாக சுப்ரீம் கோர்ட்டில் காட்டிவிடும்" என்று பூச்சாண்டி காட்டினார் பொன்.ராதாகிருஷ்ணன். "நல்ல தீர்ப்பு வந்துவிடும்.. நல்ல தீர்ப்பு வந்துவிடும். கலைந்து போங்கள்" என்று போராட்டக்காரர்களுக்கு கோரிக்கை என்ற பெயரில் தமாசு காட்டினார் தமிழிசை. ஆனால் தங்கள் தலைமையிடம் சொல்லி அவசர சட்டம் கொண்டுவர வைக்கும் திறமை இருவருக்கும் கிஞ்சித்தும் இல்லை என்பதை, இந்த சப்பைகட்டுகள் தமிழர் கண்களில் இருந்து மறைத்துவிடாது என்பதை பாவம் அவர்கள் உணரவில்லை.

மிக்சர் சாப்பிடுவதா?

அரசு விடுமுறை தினமான இன்றுகூட, மாநிலம் முழுக்க மாணவர்கள் போராட்டம் நடந்துவது அவர்களின் ஈடுபாட்டை காண்பிக்கிறது. பெண்களும் களத்தில் குதித்துள்ளது சாமானியர்களையும் யோசிக்க வைத்துள்ளது. இத்தனைக்கு பிறகும், மத்திய மாநில, அரசுகள் நாட்டாமை பட அப்பா கேரக்டர் போல சும்மா உட்கார்ந்து மிக்சர் சாப்பிட்டுக்கொண்டுள்ளன. இதுவரை முதல்வரோ, அமைச்சர்களோ, மத்திய அரசு பிரதிநிதிகளோ ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் போராட்டத்தை கைவிட கோரிக்கைவிடுக்கவில்லை. அவர்கள் முகத்தில் விழிக்க வெட்கம் இருந்தால் ஊடகங்கள் வாயிலாக கூட இக்கோரிக்கையை விடுத்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

முடியும்.. ஆனா முடியாது

முடியும்.. ஆனா முடியாது

மக்களுக்காகத்தான் அரசுகள். ஆனால் அந்த மக்களின் தேவை என்னவென்று தெரிந்த பிறகும், சும்மா இருப்பதற்கு அரசுகள் ஏன்? என்ற கேள்வி ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளோரிடம் எழுந்துள்ளது. 8 கோடி மக்களின் வாழ்வியலில் கலந்த ஒரு கலாசார நிகழ்வை கூட நடத்த முடியாத பலமிழந்த அரசுகளை நாம் கொண்டுள்ளோமா என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது. ஒரே நாள் இரவில் நாட்டிலுள்ள 85 சதவீத பணத்தை செல்லாது என அறிவித்த அரசால் அவசர சட்டம் கொண்டுவர முடியாது என்று சொல்வதை நம்ப முடியவில்லை. அப்படியானால் தமிழர்களின் விருப்பத்தையும், அவர்கள் ஆதங்கத்தையும் மதிக்க கூடாது, மதிக்காவிட்டாலும் அவர்கள் என்னதான் செய்துவிடுவார்கள் என்ற இருமாப்பும், மெத்தனமும் தவிர மத்திய, மாநில அரசுகளின் இந்த பாராமுகத்திற்கு வேறு காரணம்தான் இருக்க முடியுமோ?

English summary
Union and TN governments yet to look pro Jallikattu protests which is going on since a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X