For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்தும் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை: வைகோ

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் வகுப்பறைகள் உள்ள போதிலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று மதிமுக பொதுச் செலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவக் கண்மணிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ, மாணவிகள் சோர்வடையாமல் அடுத்த முறை தேர்வில் வெற்றி காண பெற்றோர்களும், ஆசிரிய சமூகமும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Vaiko appreciates Govt. school students who clear SSLC exam

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 90.7 விழுக்காடு என்று இருந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 92.9 விழுக்காடாக உயர்ந்து இருக்கின்றது. இதில் சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 98.75% அரசு பள்ளிகள் 89.23 % ஆகவும் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் தேர்ச்சி விகிதிம் 89.23% இருப்பது பாராட்டுக்குரியது ஆகும். மேலும் இந்த ஆண்டில் 1164 அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், கடந்த ஆண்டை விட 606 அரசு பள்ளிகள் கூடுதலாக 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கூறியிருக்கின்ற தகவல் அரசு பள்ளிகளின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

மாநில அளவில் 499 மதிப் பெண் பெற்று 41 மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் அரசு பள்ளிகளில் பயின்றவர்கள் என்பது மகிழ்ச்சியுடன் வரவேற்கத்தக்கது ஆகும். இதைப் போன்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் கடந்த ஆண்டைவிட 1.5 விழுக்காடு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.15 விழுக்காடாகவும், 22 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியும் பெற்று சாதனை புரிந்துள்ளன.

தமிழக அரசால் புறக்கணிக்கப்பட்ட அடிப்படை வசதிகள், கல்விச் சூழல் குறைபாடுகள் இவற்றிற்கு இடையே அரசு பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது பெரும் முயற்சியால் 89.23 விழுக்காடு தேர்ச்சியை எட்டியுள்ளனர். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் அரசு நிலை ஆணை எண் 270ன் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் எந்தப் பள்ளியிலும் இல்லை என்பது வேதனைக்குரியது.

குடிநீர், கழிவறை, துப்புரவு உள்ளிட்ட கல்வி பயில்வதற்கான சூழல் அனைத்துமே அரசு பள்ளிகளில் கண்டுகொள்ளப்படுவது இல்லை. மேற்கூரை இடிந்துவிழும் நிலையில்தான் வகுப்பறைகள் உள்ளன.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் கிடையாது. அரசு ஆணைப் படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை நிறைவேற்ற தமிழக அரசு இதுவரை முயற்சிக்கவில்லை. இருக்கின்ற குறைவான ஆசிரியர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் வேலைகள், ஆதார் அட்டை விசாரணை என்று பல வேலைகளுக்கு அனுப்பி, ஆசிரியப் பணியை அரசே சீர்குலைக்கிறது.

மேலும் உடற்பயிற்சி, கணினி, அறிவியல், இசை, ஓவியம் மற்றும் தொழில் பயிற்சி போன்ற பாடங்களுக்கு பல இடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இருக்கும் ஒருசில பள்ளிகளிலும் நிரந்தரப் பணி ஆசிரியர்கள் இல்லை. பள்ளிகளில் எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் பணிகளையும் ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டிய சூழல். இதுதான் தமிழ்நாட்டில் இன்றுள்ள அரசு பள்ளிகளின் உண்மை நிலைமை. சாதாரண ஏழை எளிய கிராப்புற மக்களின் பிள்ளைகள் பயின்று வரும் அரசு பள்ளிகள் கவனிப்பாரின்றி கிடப்பது நல்லதல்ல.

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழிசெய்யும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளை தமிழக அரசு மூடி இருப்பது கண்டனத்துக்குரியது.

அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி உரிய முறையில் கவனிக்கப்படுமானால், கல்வித்தரம் உயர்ந்து சாதனைகளையும் எட்ட முடியும் என்பதை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் உணர்த்துகின்றன. எனவே தமிழக அரசு பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, போதிய ஆசிரியர் நியமனம் மற்றும் சிறந்த கல்விச் சூழல் போன்றவற்றில் கவனம் செலுத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK chief Vaiko wants TN government to provide proper facilities to the government schools in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X