For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் திலகம் சிவாஜி சிலையை அகற்ற முயல்வது அக்கிரமச் செயல்! வைகோ கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சிவாஜி சிலையை நிறுவியது தி.மு.க. அரசு காலத்தில் என்ற காழ்ப்புணர்ச்சியால்தான் முதல்வரின் உத்தரவின்பேரில் சிலையை அகற்ற முயற்சி நடைபெறுகிறது என்று வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ் கலை உலகம் தரணிக்குத் தந்த தவப்புதல்வனாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகத்திலேயே ஈடு இணையற்ற நடிகராவார். அதனால்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், "ஹாலிவுட் புகழ் நடிகரான மார்லன் பிராண்டோ சிவாஜி கணேசனைப் போல நடிக்க முயற்சி செய்யலாம்" என்றார்.

Vaiko condemn to TN govt for removal of Shivaji Ganesan statue

அறிவாசான் பெரியார் அவர்களால் "சிவாஜி" என்ற பட்டத்தைப் பெற்ற நடிகர் திலகத்தை எங்கிருந்தாலும் வாழ்க! என வாழ்த்தினார் பேரறிஞர் அண்ணா. கலைஞர் கருணாநிதியின் கனல் தெரிக்கும் வசனங்களுக்கு தன் சிம்மக்குரலால் உயிர் தந்தவர் செவாலியே சிவாஜி ஆவார்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் அவரது நடிப்புக்கு ஆசிய-ஆப்பிரிக்க படவிழாவில் சிறந்த நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப்பட்டார்.

மனித உணர்ச்சியின் அத்தனை கோணங்களையும் தன் கண்களிலும், முக அசைவிலும் காட்டக்கூடிய திறன் அவருக்கு நிகராக உலகில் எந்த நடிகரிடமும் நான் கண்டது இல்லை.

மாணவப் பருவத்திலிருந்து நான் அவரது பரம ரசிகனாகவே என்றும் இருக்கிறேன். வாஜ்பாய் அரசில் அன்றைய அஞ்சல்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், விதிமுறைகளைத் தளர்த்தி, முப்பது நாட்களுக்குள் சிவாஜி கணேசன் அஞ்சல் தலையை சென்னையில் வெளியிட்டுச் சிறப்புச் செய்ய காரணமாக இருந்தவன் நான்.

நடிகர் திலகத்தின் சிலை கடற்கரை காமராஜர் சாலையில், 2006 இல் தி.மு.க. அரசு நிறுவியபோது, கடற்கரையில் உள்ள இன்னொரு சிலையை சிவாஜி சிலை மறைக்கும் என்று ஏற்க இயலாத ஒரு காரணத்தைக் கூறி, உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்தார். ஆனால், உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு தடை விதிக்காமல் சிலை திறக்க அனுமதித்தது. வழக்குத் தொடுத்தவரும் இறந்துபோனார்.

இன்னொருவர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்த முற்பட்டதில் ஒரு மாதத்துக்கு முன்னால், அக்டோபர் 23 ஆம் தேதி அன்று, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல் சோமயாஜி சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டியது இல்லை என்று வாதிட்டார்.

ஆனால், செவ்வாய்கிழமையன்று 26.11.2013 இல் தமிழக அரசின் சார்பில், போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில், கடற்கரை சாலையில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலை இருப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது என்றும், அங்கிருந்து சிலையை வேறு இடத்துக்கு மாற்றி வைக்கலாம் என்று தெரிவித்திருப்பது சிவாஜியின் புகழுக்கு பங்கம் விளைவிக்க முனையும் அக்கிரமச் செயலாகும்.

கோடான கோடி தமிழர்கள் நெஞ்சில் புகழிடம் பெற்றுள்ள நடிகர் திலகத்தின் கீர்த்தி காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும்.

அதே கடற்கரைச் சாலையில் மதுபோதையில் வானங்களை ஓட்டுவதாலும், தாறுமாறான வேகத்தில் செல்வதாலும் வேறு இடங்களில் எண்ணற்ற விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசு சிலையை அகற்றவதற்குச் சொல்லும் காரணத்தை ஏற்க இயலாது.

முந்தைய தி.மு.க. அரசு இந்தச் சிலையை நிறுவியது என்ற காழ்ப்புணர்ச்சியால்தான் முதலமைச்சரின் உத்தரவின்பேரில் உயர்நீதிமன்றத்தில் காவல்துறை இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. இதே வக்கிர எண்ணத்தோடுதான் பத்தினி தெய்வம் கண்ணகி சிலையை அ.தி.மு.க. அரசு அகற்றியது.

சிவாஜி சிலையை அகற்ற முனையும் தமிழக அரசுக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அந்த முயற்சியை அடியோடு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

English summary
MDMK General secretary Vaiko has condemned to Tamil Nadu Government for transfer the Shivaji Ganesan Statue at Radhakrishnan salai in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X