• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கை விவகாரம்.. அமெரிக்கா தூதரகத்துக்குள் சென்று மனு கொடுக்க அனுமதி மறுப்பு- வைகோ கொந்தளிப்பு!

By Mathi
|

சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக இன்று ஆர்ப்பாடம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ அமெரிக்கா தூதரத்துக்குள் நுழைந்து மனு கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை இலங்கை அரசே நடத்தும் வகையிலான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில், சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் எதிரே இன்று தமது ஆதரவாளர்களுடன் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

Vaiko condemns US Consulate

இதன் பின்னர் அமெரிக்கா தூதரகத்துக்குள் சென்று கோரிக்கை மனு அளிக்க வைகோ திட்டமிட்டிருந்தார். ஆனால் வைகோவை உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்து வாசலிலேயே மனுவை வாங்கி திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.

இது தொடர்பாக வைகோ கூறியதாவது:

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசின் இனக்கொலைக் குற்றத்தை அனைத்து நாடுகளின் சுதந்திரமான விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று 2014 மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க அரசு கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அந்த விசாரணைக் குழுவை இலங்கைத் தீவுக்குள் இராஜபக்சே அரசு அனுமதிக்கவே இல்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற வேண்டிய மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தை, இலங்கை அரசுக்கு உதவுவதற்காக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கக் காரணமாயின.

இந்நிலையில், அமெரிக்க அரசின் வெளிவிவகாரத்துறை துணைச் செயலாளர் நிசிய தேசாய் பிஸ்வால் எனும் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்மணி பன்னாட்டு விசாரணை தேவை இல்லை, இலங்கை அரசே போர்க் குற்றங்களை விசாரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அண்மையில் கொழும்புக்குச் சென்று தெரிவித்த கருத்து தமிழர்களின் தலையில் பேரிடியாய் விழுந்தது.

அமெரிக்க அரசின் துரோகத்தைக் கண்டிக்கும் விதத்தில் சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்துக்கு எதிரே என்னுடைய தலைமையில் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தேன்.

அமெரிக்கத் துணைத் தூதரகத்துக்கு எதிரே செம்மொழிப் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என சென்னை காவல்துறையினரிடம் கேட்டபோது, இதற்கு முன்னர் அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சும், வன்முறையும் ஏற்பட்டதால் அனுமதி கொடுக்க இயலாது என்று தெரிவித்தனர்.

காவல் துறையினரின் கருத்தை ஏற்றுக்கொண்டு, ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு அருகில் இன்று காலை அறப்போர் ஆர்ப்பாட்டம் முறையாக நடந்தது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் உள்ள கான்செல் ஜெனரலான துணைத் தூதரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க தொலைபேசி வழியாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி அன்றே அனுமதி கேட்டபோது, அதனைத் தூதரக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

செப்டம்பர் 1 ஆம் தேதி பகல் 12.45ல் இருந்து 1 மணிக்குள் நானும், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாÞ அவர்களும், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் நன்மாறன் அவர்களும் சந்திக்க வருகிறோம் என்று பெயர்களும் கொடுக்கப்பட்டன.

இன்று காலை 9 மணி அளவில், அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, துணைத் தூதரை நாங்கள் சந்திப்பதை உறுதி செய்துகொண்டேன். புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி உண்டா? என்று கேட்டேன். அனுமதி இல்லை என்றனர். ஏற்றுக்கொண்டேன்.

நேற்று முன்தினம் ஜூலை 30 ஆம் தேதி, இரவு எட்டு மணி முதல் அதிகாலை 3 மணி வரை கோரிக்கை மனு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டேன் (Memorandum). இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பகல் 12.20 மணிக்கெல்லாம் அவசரமாக என் உரையை முடித்துக்கொண்டு, 12.45 மணிக்கெல்லாம் துணைத் தூதரக வாசலுக்குச் சென்றேன். சென்னை மாநகரக் காவல்துறையினர் எங்களை அழைத்துச் செல்வதற்கு வசதியாக உடன் வந்தனர். ஆனால், அமெரிக்கத் தூதரகத்தில் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது.

தூதரக வாசலில் உள்ளே வருவோரை பரிசோதனை செய்யும் இடத்தில் நானும், தேவதாஸ், நன்மாறன் ஆகியோர் பத்து நிமிடங்கள் காத்திருந்தோம். அப்பொழுது அமெரிக்கத் துணைத் தூதரகத்தைச் சேர்ந்த அரசியல் பொருளாதார ஆலோசகர் என்னை நோக்கி வந்து, துணைத் தூதரகத்துக்குக் கொடுக்க வேண்டிய மனுவை என்னிடம் கொடுங்கள் என்றார். அவரைச் சந்திப்பதற்காகத்தானே நாங்கள் வந்தோம் என்றேன். அவருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன, உங்களைச் சந்திக்க இயலாது என்றார்.

கோடானுகோடி தமிழர்களின் இதயத்தை வாட்டுகிற ஈழத் தமிழர் பிரச்சினையில், அமெரிக்க அரசின் அணுகுமுறை குறித்து விளக்கமான கோரிக்கை மனு தயாரித்துள்ளேன். ஐந்து நிமிடம் அவகாசம் தந்தால் போதும். அவரிடம் நேரில் கொடுக்கிறேன் என்றேன். அதற்கு வாய்ப்பில்லை என்றார். பிறகு ஏன் அவரைச் சந்திப்பதற்கு வரலாம் என்று கூறினீர்கள் என்றேன்? தகவல் தந்ததில் பிழை ஏற்பட்டுவிட்டது என்றார்.

நான் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர். இதற்கு முன்னர் இதே தூதரகத்தில் இருந்த தூதர்கள் மூன்று பேர் என் இல்லத்துக்கே வந்து உணவு அருந்தியிருக்கிறார்கள். தமிழர்களின் மனக் குமுறலை வெளிப்படுத்த மனு கொடுக்க வந்தேன். வாசலிலேயே நிற்க வைத்து மரியாதை இல்லாமல் நடத்துகிறீர்கள். மற்றவர்களுக்கு எப்படி மரியாதை கொடுப்பது என்பதை உலகத்துக்கே கற்றுக் கொடுத்தவர்கள் நாங்கள். எனக்கு அவமரியாதை என்று கருதவில்லை; தமிழர்களை அவமதிக்கிறீர்கள். இது எங்கள் மண். எங்கள் நிலம். உங்கள் தூதரகம் இருப்பது எங்கள் பூமி. அமெரிக்காவிலிருந்து வந்து எங்கள் தாயகத்திலேயே எங்களை அவமதிக்கிறீர்கள். நாங்கள் அமெரிக்க அதிபரின் உருவபொம்மையைக் கொளுத்தவில்லை. அமெரிக்க நாட்டுக் கொடியை எரிக்கவில்லை. தூதரகத்தை நோக்கிக் கல் வீசவில்லை. ஜனநாயக உரிமையின்படி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, கண்ணியமான முறையில் உங்களைச் சந்திக்க வந்தோம். ஆனால் அடிப்படை பண்பாடின்றி நீங்கள் நடந்துகொண்டீர்கள் என்றேன்.

துணைத் தூதரைச் சந்திக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையில் கோரிக்கை மனு பிரதிகள், ஊடகங்களுக்கும், செய்தி ஏடுகளுக்கும் கொடுக்கப்பட்டுவிட்டதால், கோரிக்கை மனுவை உங்களிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறேன் என்று கூறிவிட்டு வெளியேறினேன். இந்தப் பிரச்சினையில் அமெரிக்கத் துணைத் தூதரகத்தினர் என்னை நடத்திய விதத்தை எவ்விதத்திலும் எவரும் நியாயப்படுத்த முடியாது. துணைத் தூதரகம் அமைந்திருக்கின்ற கட்டடத்துக்குள்ளேயே நாங்கள் செல்ல அனுமதி இல்லை. குறைந்த பட்சம் அலுவலகக் கட்டடத்துக்குள் எங்களை வரச்செய்து, பொருளாதார அரசியல் ஆலோசகர் அறைக்கு எங்களை அழைத்துச் சென்று, முறையாக எங்களிடம் பேசி மனுவை எங்களிடம் பெற்றுக்கொண்டிருக்கலாம். ஏகாதிபத்திய திமிரையும், அகம்பாவத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் எங்களை அவமதித்தார்கள்.

நான் சகித்துக்கொண்டு பொறுமையோடு வெளியே வந்தேன்.

நான் வெளியே வந்தபோது, என்னுடன் வந்த தமிழக காவல்துறை அதிகாரிகளே அமெரிக்கத் தூதரகத்தினர் நடந்துகொண்டது குறித்து மனம் வெதும்பினார்கள்.

இந்தச் செய்தி அறிந்து கழகக் கண்மணிகள் ஆத்திரப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

English summary
MDMK Cheif Vaiko has condemned US Consulate over Lankan row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X