For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத் தீவு விவகாரம்: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் மத்திய அரசு- வைகோ காட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை காக்க இலங்கையுடனான கச்ச தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக கூட்டணி கட்சியான மதிமுகவின், பொதுச்செயலாளரான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: கச்சத் தீவு தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு, தமிழக மக்களுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் கடும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

vaiko

‘1974 இல் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை; இங்கே ஓய்வு எடுப்பதற்கும், மீன் பிடி வலைகளை உலர்த்தவும், அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கு ஏற்பதற்கு மட்டுமே கச்சத் தீவு ஒப்பந்தம் வகை செய்கிறது' என்று இந்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்தியாவில் புதிய அரசு அமைந்த பின்னரும், இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்து இலங்கைச் சிறையில் அடைப்பதும், படகு உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நீடிக்கிறது. இலங்கை அரசின் அட்டூழியத்தை நிறுத்துவதற்கு மத்திய அரசு உறுதியான, கடுமையான நிலைப்பாட்ட எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்பார்க்கின்றபோது, கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை இல்லை என்று இந்திய அரசு கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கின்றது.

ஜூன் 24, 1974 ஆம் ஆண்டில், செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் அதன் பிரிவு 5, ‘கச்சத் தீவுக்குச் செல்ல இந்திய மீனவர்களுக்கும், அங்குள்ள அந்தோணியார் கோயிலில் வழிபாடு செய்யச் செல்பவர்களுக்கும் எப்போதும் உள்ள உரிமையின் அடிப்படையில் சென்று வர உரிமை உண்டு; அதற்கான பயண ஆவணங்களோ, இலங்கையின் விசா அனுமதியோ தேவை இல்லை' என்று கூறுகிறது.

இந்த பிரிவு 5, கச்சத் தீவில் இந்திய-இலங்கை நாடுகளுக்கு கூட்டு மேலாண்மை ஆட்சி உண்டு என்ற பொருளில்தான் அமைந்து இருக்கின்றது.

1976 மார்ச் 23 அன்று இந்திய வெளியுறவுச் செயலர் கேவல்சிங் மற்றும் இலங்கை வெளியுறவுச் செயலாளர் ஜெயசிங்கே இருவரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் இந்தியாவின் உரிமையை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக இலங்கை கூறி வருகிறது. இந்திய அரசின் நிலைப்பாடும் அதுதான் என்பதை மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் உணர்த்துகிறது.

ஆனால், இந்திய-இலங்கை வெளியுறவுச் செயலாளர்களுக்கு இடையே 1976 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தம், இந்திய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. எனவே, 1976 ஆம் ஆண்டு கச்சத் தீவு தொடர்பாகச் செய்து கொள்ளப் பட்டதாகக் கூறப்படும் 2ஆவது ஒப்பந்தம், தமிழக மீனவர்களை ஒருபோதும் கட்டுப்படுத்தாது.

இலங்கையைப் பொறுத்தவரை எந்த உடன்பாட்டையும் ஏற்றுக்கொண்டு அதன்படி அந்த நாடு நடந்துகொண்டது இல்லை. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இலங்கையில் தமிழ் மக்களின் தாயகப் பகுதிகளான, வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனால் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக ரத்து செய்து விட்டது.

இரண்டு நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்ட காலத்தில் உள்ள நிலைமை பின்னர் மாறுமானால், செய்து கொண்ட உடன்பாட்டையும் ரத்துச் செய்யலாம் என்று பன்னாட்டுச் சட்ட விதிகள் கூறுகின்றன.

எனவே, இந்திய அரசு தமிழக மீனவர்களின் உயிருக்கும், வாழ்வாதார உரிமைக்கும் உத்தரவாதம் கிடைப்பதற்கு, பன்னாட்டுச் சட்ட விதிகளின்படி கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, கச்சத் தீவை மீட்பது மட்டுமே ஒரே தீர்வு என வலியுறுத்துகிறேன்.

English summary
MDMK general secratery vaiko demands Katchatheevu agreement should be abolish as it affect Tamil fishermen livinghood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X