For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமால் நரசிம்மராக மாறி ராஜபக்சேவை வதம் செய்துவிட்டார்: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ‘குணதிசை காலை நீட்டி, குடதிசை தலையை வைத்து, தென்திசை நோக்கும் பெருமாள்' என்று, ஆழ்வார்களால் பாடப்பட்ட ஏழுமலையான், தெற்கே தன் பார்வையைத் திருப்பி இருக்கின்றார்; திருமால் நரசிம்மமாக மாறி, தேர்தலில் ராஜபக்சேயை வதம் செய்து விட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

‘என்றாவது ஒருநாள் அறம் வெல்லும்; அநீதி அழியும்' என்பதே, தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் நம்பிக்கை. அக்கூற்றினை மெய்ப்பிக்கின்ற வகையில், தமிழ் இனக் கொலைகாரன்-சிங்கள இனவாத ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றான்.

Vaiko expresses happy over the ouster of Rajapakse

நிரந்தர சர்வாதிகாரி

குவிந்து கிடக்கும் கொடிய அதிகாரங்கள் போதாது; இலங்கையின் நிரந்தர சர்வாதிகாரியாகி விடலாம்' என்ற மனக்கோட்டையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அதிபர் தேர்தலை நடத்தினான்.

மோடி அரசு

இந்தியாவின் நரேந்திர மோடி அரசு, இந்த இனக்கொலைகாரனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடியது. மோடியின் பதவிப் பிரமாணத்திற்கு அழைத்தது; வெளியுறவுக் கொள்கையில் பின்பற்ற வேண்டிய நெறிகளைக் காற்றில் பறக்கவிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காத்மண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில், இந்தியாவில் சார்பில் ஆற்றிய அதிகாரப்பூர்வ உரையில், இலங்கை அதிபராக இக்கொலை பாதகனே மீண்டும் வெல்வான் என்று வாழ்த்துக் கூறியது வெட்கக்கேடானது. இதுவரை இந்தியாவில் எந்தப் பிரதமரும் செய்யாத தவறு.

சல்மான்கான் பிரச்சாரம்

வாழ்த்தியதோடு நிறுத்தவில்லை நரேந்திர மோடி. ராஜபக்சேயை வெற்றி பெற வைப்பதற்காக, தனது தேர்தல் பிரச்சார ஊடக உத்திகளுக்குத் தலைமை தாங்கிய அரவிந்த் சர்மா என்பவரை, இலங்கைக்கு அனுப்பி வைத்து, இராஜபக்சேவுக்கு ஆலோசகர் ஆக்கினார். இந்தி நடிகர் சல்மான்கானை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்தார். திருப்பதி கோவிலில் ஏழுமலையானத் தரிசிக்க ஏற்பாடும் செய்து கொடுத்தார்.

நரசிம்மர் வதம்

‘குணதிசை காலை நீட்டி, குடதிசை தலையை வைத்து, தென்திசை நோக்கும் பெருமாள்' என்று, ஆழ்வார்களால் பாடப்பட்ட ஏழுமலையான், தெற்கே தன் பார்வையைத் திருப்பி இருக்கின்றார்; திருமால் நரசிம்மமாக மாறி, தேர்தலில் ராஜபக்சேயை வதம் செய்து விட்டார், தமிழ் உணர்வுள்ள வைணவ பக்தர்கள் கூறுகின்றனர்.

தமிழர்களின் தீர்ப்பு

இந்தத் தேர்தலில், தமிழர் தாயகத்தில், குறிப்பாக முல்லைத் தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளில், ராஜபக்சே படுதோல்வி அடைந்தான். இதுதான் தமிழர்களின் தீர்ப்பு; நாளை தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு!

இஸ்லாமியப் பெருமக்கள் மக்கள் நிறைந்து வாழும் மூதூர் பகுதியில், ராஜபக்சேவுக்கு 7,000 வாக்குகளும், எதிர் வேட்பாளருக்கு 57,000 வாக்குகளையும் அளித்து உள்ளனர்.

வெளியேறிய ராஜபக்சே

‘அலரி அரண்மனையை விட்டு உடனே வெளியேறு' என்று, வெற்றி பெற்ற தரப்பு ராஜபக்சேவுக்குத் தெரிவித்தவுடன், அந்த அகங்கார மாளிகையை விட்டு கதறிப் புலம்பிக்கொண்டு வெளியேறி விட்டான் ராஜபக்சே.

ஏமாறவேண்டாம்

இத்தேர்தல் களத்தில் அதிபராக வெற்றி பெற்று இருக்கின்ற மைத்ரிபால சிறிபால சேனா, ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கி விடுவார் என்று எவரும் எதிர்பார்த்து ஏமாந்து விட வேண்டாம். ராஜபக்சேயின் அமைச்சரவையில் கடைசிவரையிலும் இடம் பெற்றவர்; அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர்; சிங்கள இனவாத இரத்தத்தோடு, ஈழத்தமிழருக்குக் கேடு செய்யும் உணர்வு இவரிடம் இரண்டறக் கலந்தே இருக்கின்றது.

தீமையிலும் நன்மை

அதனால்தான், ‘தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவத்தை, போலீசை வெளியேற்ற மாட்டேன்' என்று தேர்தலுக்கு முன்பே அறிவித்து விட்டார்; எனவே, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தந்து விடுவார் என்றும் எதிர்பார்க்க வேண்டாம். இவரது தமிழர் விரோத மனப்பான்மை மாறி விடும் என்றும் நம்புவதற்கு இல்லை.

ஆனால், இந்தத் தேர்தல் முடிவால் ஒரு நன்மை விளைந்து இருக்கின்றது.

தூக்கி எறியப்பட்டான்

‘ஈழத்தமிழர்கள் கொதித்து எழுந்து எதிர்ப்பைக் காட்டினர்; இனக்கொலை நடத்தியவன் தூக்கி எறியப்பட்டு விட்டான்' என்பது உலகத்திற்கு வெட்டவெளிச்சம் ஆகி விட்டது.

புதிய அதிபர் மைத்ரி பால சிறிசேனா, மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து ஜனநாயக நாடுகளும் வலியுறுத்த வேண்டும். சிறைகளில் வாடும் தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும்; சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும்; உள்நாட்டுப் பத்திரிகையாளர்களும், அனைத்துலகச் செய்தியாளர்களும் சுதந்திரமாக இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல புதிய அதிபர் அனுமதிக்க வேண்டும்; இதை எல்லாம் செய்கிறாரா என்பதைப் பொறுத்து இருந்து கவனிப்போம்.

பொது வாக்கெடுப்பு

இனக்கொலை செய்த ராஜபக்சே அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். இதுவே, உலகத் தமிழர்களின் இலக்கு ஆகும். சிங்களர்களோடு ஈழத்தமிழர்கள் ஒருநாளும் சேர்ந்து வாழ முடியாது. சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒன்றுதான் தீர்வு.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பே புதிய அதிபருக்கு வாழ்த்துச் சொன்ன பிரதமர் நரேந்திர மோடி, ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது அரசின் வஞ்சகமான துரோகப் போக்கை இத்துடனாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்க்குலத்திற்குக் கேடு செய்யும் எவ்ருக்கும் கேடு தானாக வரும் என்பதுதான் நடந்த தேர்தல் முடிவு தரும் பாடம் ஆகும் என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK leader Vaiko has expressed his happiness over the defeat of Rajapakse
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X