For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கும் ரத்தாகும்: வைகோ நம்பிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பதன் மூலம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையும் ரத்து செய்யப்படும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

"இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர்கள் ரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்திசிங் ஆகிய மூவர் அமர்வு, 15 பேர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக அறிவித்து இருக்கின்ற தீர்ப்பு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆகும்.

தமிழர்கள் நால்வர்

தமிழர்கள் நால்வர்

வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோருக்கு, 2004 இல், உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. குடியரசுத் தலைவருக்கு அவர்கள் தந்த கருணை மனு, ஒன்பது ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டு, 2013இல் நிராகரிக்கப்பட்டது. அவர்கள் தூக்கில் இடப்பட இருந்த நிலையில், தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

15 பேரின் தூக்கு ரத்து

15 பேரின் தூக்கு ரத்து

உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் காலின் கொன்சால்வ்ஸ், மும்பை வழக்கறிஞர் யுக்மொகித் சௌத்ரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். இந்த நால்வரும் உண்மையில் நிரபராதிகள் ஆவார்கள். இன்று உச்ச நீதிமன்றத்தில் இப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த 15 பேர் தொடுத்த வழக்கில், 13 பேருக்கு கருணை மனு மீதான முடிவை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது. உடல்நிலை கெட்டு, மனநலம் பாதிக்கப்பட்ட காரணம் காட்டி மகன்லால், சுந்தர்சிங் ஆகிய இருவரின் தூக்குத் தண்டனையும் ரத்து ஆகி உள்ளது.

பேரறிவாளன், முருகன், சாந்தன்

பேரறிவாளன், முருகன், சாந்தன்

இந்தியாவிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு ஆகும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும், திருபெரும்புதூர் சம்பவத்தில் துளி அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகள் ஆவர். மரண தண்டனையை எதிர்நோக்கியவாறு, 23 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் மரணத்தை விடக் கொடிய சித்ரவதையை அனுபவித்து வருகிறார்கள். 11 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுடைய கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. அதன்பிறகு அவர்களது கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து, அவர்களைத் தூக்கில் போடுவதற்கு 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

ராம்ஜெத்மலானி வழக்கு

ராம்ஜெத்மலானி வழக்கு

இதன்பிறகு, 2011 ஆகஸ்ட் 30 ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடியபோது, உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது, வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

மூவரின் தூக்கு ரத்து

மூவரின் தூக்கு ரத்து

மூன்று தமிழரின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில், வருகிற ஜனவரி 29 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இன்றைய தீர்ப்பின் அடிப்படையில், அவர்களது மரண தண்டனையும் உறுதியாக ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

தூக்கு தண்டனை அகற்றப்படும்

தூக்கு தண்டனை அகற்றப்படும்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் புல்லரின் தூக்குத் தண்டனையும் ரத்து ஆகும் வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, இனி எதிர்காலத்தில் தூக்குத் தண்டனை இந்தியாவில் அறவே அகற்றப்படுவதற்கான வழியைத் திறந்து உள்ளது.

தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் கவலை அகலும் என்ற நம்பிக்கையைத் தந்து உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் துயர் போக்கும் மாமருந்தாக வரவேற்கிறேன்" என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
MDMK chief Vaiko has hoped for the cancellation of hanging to Rajiv assasins too by the SC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X