For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டமன்ற தேர்தலை மக்கள் நல கூட்டு இயக்க கட்சிகள் இணைந்து சந்திக்க முடிவு... வைகோ அறிவிப்பு

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : மக்கள் நல கூட்டு இயக்க கட்சிகள் வருகிற சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார்.

ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 5 கட்சிகள் மக்கள் நல கூட்டு இயக்கம் என்ற பெயரில் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

vaiko

வருகிற 2-ந்தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில், கோவில்பட்டி காந்தி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது...

எனது 51 ஆண்டு கால பொது வாழ்வில் இங்கு பல பொதுக்கூட்டங்களில் பேசி உள்ளேன். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பொதுக்கூட்டங்களை கூட இங்கு முன்னின்று நடத்தி உள்ளேன். ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தமிழக மக்களின் நலனுக்காக மக்கள் நல கூட்டு இயக்கமாக இணைந்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் புதிய ஆட்சி மலரும்.

இந்த மக்கள் நல கூட்டு இயக்க கட்சிகள் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியாக இணைந்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும். இதனை கோவில்பட்டியில் நடைபெறும் கூட்டத்தில் பிரகடனப்படுத்துகிறேன். இது யுத்த பிரகடனத்துக்கு சமமானது. இதனை திருப்பூரில் நடைபெற உள்ள ம.தி.மு.க. மாநாட்டில் பிரகடனப்படுத்துவதாக இருந்தேன். தற்போது இங்கேயே அதனை அறிவித்து உள்ளேன்.

இந்த இடமானது வீரம் செறிந்த பூமியாகும். இங்குதான் வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞர் தொழில் செய்தார். இதன் அருகில் உள்ள கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் வசித்து வந்தார். வீரபாண்டிய கட்டபொம்மனின் பெருமையை நிலைநாட்டும் வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முழு உருவ சிலை அமைத்தார். அந்த இடத்தில் தமிழக அரசு மணிமண்டபம் கட்டி எழுப்பி உள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோன்று கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை சிறைவைக்கப்பட்ட இடம் சிதிலம் அடைந்து கிடக்கிறது. அந்த இடத்திலும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மண்டபம் அமைக்க வேண்டும்.

மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் சென்னை, மதுரை, தஞ்சாவூர், நெல்லை, ஈரோடு ஆகிய 5 இடங்களில் மக்கள் நலனுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். இதுவரையிலும் ஆளும் அரசும், ஆண்ட கட்சிகளும் நம்மை ஓட்டு சதவீதத்துக்காகவே பயன்படுத்தின. இந்த பஞ்ச பாண்டவர் படை, துரியோதனன் படையை வெல்லும்.

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணை மற்றும் சி.பி.ஐ. விசாரணை கேட்டு கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி முதல்வருக்கு கடிதம் எழுதினேன். 40 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பதில் வரவில்லை. ஒரு அமைச்சர் கூட பதில் அளிக்க முன்வரவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 22-ந்தேதி சந்தித்து பேசினேன். அப்போது அவரிடம், உங்களை விவசாயிகள் நம்பினார்கள். நீங்கள் கார்ப்பரேட் ஏஜெண்டாக செயல்படாதீர்கள். விவசாயிகளுக்கு பாதகமாக நடக்காதீர்கள். நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை கைவிட வேண்டும். தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுக்கடையை மூட செல்போன் கோபுரத்தில் ஏறி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட சசி பெருமாள் கொல்லப்பட்டார். அவரது கழுத்தில் கயிறு கட்டி இழுத்ததால் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. அவரது சாவுக்கு அரசுதான் காரணம்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக மக்கள் நல கூட்டு இயக்கம் தொடர்ந்து போராடும்.

இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ஆகியோர் பேசினர்.

English summary
Vaiko said that makkal nala kootu iyakkam which comprases 5 party will contest in assembly election adjoined
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X