• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொத்து குண்டுகளால் ஈழத் தமிழர் இனப்படுகொலை- சர்வதேச நீதிபதிகள் விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்

By Mathi
|

சென்னை: தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள் மூலம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து சர்வதேச நீதிபதிகள், வல்லுநர்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தீவில், 2008 ஆம் ஆண்டின் இறுதியிலும், 2009 ஆம் ஆண்டு மே 18 வரையிலும் விடுதலைப்புலிகள் மீதும், ஆயுதம் ஏந்தாத அப்பாவித் தமிழ் மக்கள் மீதும், உலகம் தடை செய்த கொத்துக் குண்டுகளை (Cluster Bombs) சிங்கள இராணுவம் வீசி இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த உண்மையை உறுதி செய்கின்ற புதிய ஆதாரங்கள் படங்களாக, 2016 ஜூன் 20 ஆம் தேதி லண்டன் கார்டியன் ஆங்கில ஏட்டில் வெளியாகி இருக்கின்றது. இதுகுறித்துப்பல ஆண்டுகளாக நான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறேன்.

போர் நடைபெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றச் சென்ற குழுவினர், அங்கே மண்ணுக்குள் புதைந்து கிடந்த கொத்துக்குண்டுகளின் சிதறல்களை இப்போது கண்டுபிடித்துள்ளனர். உலக அளவில் புகழ் பெற்ற அதிகாரிகளே இதற்கான ஆதாரங்களைத் தந்துள்ளனர். அதனால், இலங்கை அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கின்ற பல அமைச்சர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. குறிப்பாக, அப்பொழுது இராணுவ அமைச்சராகப் பணியாற்றிய தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் உத்தரவின் பேரில்தான் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டு இருக்கின்றன.

ரஷ்யாவின் கொத்து குண்டுகள்

ரஷ்யாவின் கொத்து குண்டுகள்

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) ஆயுதங்கள் ஆராய்ச்சியாளர், இந்தக் கொத்துக் குண்டுகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவையாகத் தெரிகிறது என்று கூறுகிறார். இவை, நாலாத் திசைகளில் இருந்தும் தொடர்ச்சியாக வெடிக்கும்; பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும்.

ஒரு லட்சம் தமிழர் படுகொலை

ஒரு லட்சம் தமிழர் படுகொலை

சிங்கள இராணுவத்தால் பல முனைகளில் இருந்தும் இராணுவத்தால் துரத்தப்பட்ட மூன்று இலட்சம் தமிழர்கள் பாதுகாப்பு வலயமாக (No Fire zone) அறிவிக்கப்பட்ட பகுதிகளில் குவிந்து இருந்தனர். அவர்களை அங்கிருந்து ஒவ்வொரு இடமாக நகர்த்திக் கொண்டே வந்து, குறுகலான பகுதிக்குள் கொண்டு வந்து நிறுத்தினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என மூன்று இலட்சம் தமிழர்கள், சுதந்திரபுரம் என்ற இடத்திற்கு அருகில் கடற்கரையை ஒட்டிய குறுகலான பகுதிகளில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர். இராணுவத் தாக்குதலில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையும் தப்பவில்லை. ஆனை இறவுக்கு அருகாமையில் பச்சிலாப்பள்ளி வட்டாரத்தில் 42 கொத்துக் குண்டுகளின் சிதறல்கள் கிடைத்துள்ளன. முல்லைத் தீவின் வடக்குப் பகுதியிலும், கிளிநொச்சி வட்டாரத்திலும் பல்லாயிரக்கணக்கில் குவிந்து இருந்த தமிழர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடந்து இருக்கின்றன. வடக்கு வன்னிப் பகுதியில் மட்டும் ஒரு இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தனர்.

தடயங்கள் அழிப்பு

தடயங்கள் அழிப்பு

இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு அமைப்பு ஒன்றின் தலைவர் இதுபற்றிக் கூறும்போது, ‘இலங்கை அரசு இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என மறுத்து வருகின்றது. ஆனால், கடந்த ஏழாண்டுகளாக இத்தகைய தாக்குதல்கள் நடந்ததற்கான அடையாளங்களே இல்லாதபடி, தடய அறிவியல் மூலம் கூடக் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இலங்கை அரசு அடையாளங்களை அழித்து விட்டது என்று கூறி உள்ளார். அதற்குப்பின்னரும், இப்போது தடயங்கள் கிடைத்துள்ளன.

தாருஸ்மன் அறிக்கை

தாருஸ்மன் அறிக்கை

ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் 2010 ஆம் ஆண்டு நியமித்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழுவினர், இலங்கைக்குச் சென்று நேரில் விசாரணை செய்து அளித்த 190 பக்க அறிக்கையில், தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டது குறித்து நெஞ்சை உலுக்கிப் பதற வைக்கும் செய்திகளை ஆதாரங்களோடு வெளியிட்டு இருக்கின்றது.

ஊமை சாட்சிகளாக வல்லரசு நாடுகள்

ஊமை சாட்சிகளாக வல்லரசு நாடுகள்

சிங்கள இராணுவம் போர்க்குற்றங்களையும், இனப் படுகொலையையும் செய்தபோதும், அதுகுறித்து எந்த விசாரணையும் இதுவரையில் இலங்கையில் நடைபெறவில்லை. அயல்நாட்டு அமைப்புகள் விசாரணை நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் சிங்கள அரசு மறுத்து விட்டது. மனித உரிமை கவுன்சிலில் உள்ள வல்லரசு நாடுகள், இந்த அநீதிக்கு உடந்தையாக, ஊமைச் சாட்சிகளாக இருக்கின்றனர்.

சர்வதேச நீதிபதிகள் விசாரணை...

சர்வதேச நீதிபதிகள் விசாரணை...

சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இனக்கொலை குறித்து, வெளிநாடுகளில் இருந்து நீதிபதிகளும், நிபுணர்களும் விசாரணை செய்யும் நிலைமையை உருவாக்க வேண்டியது ஐ.நா. மன்றம், மனித உரிமை கவுன்சில் ஆகிய அமைப்புகளின் தலையாய கடமை ஆகும்.

தமிழ் இனப் படுகொலையில் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, தான் தப்பித்துக் கொள்வதற்காகத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஆதரவாகவே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய முன்னைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாகவே நரேந்திர மோடி அரசும் நடந்து வருவது சகிக்க முடியாத அநீதி ஆகும். ஆனால், நீதியின் கதவுகள் நிச்சயம் திறக்கும்; இனக்கொலைக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில், உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், ஈழத்தமிழ் உணர்வாளர்களும் போராட வேண்டியது முக்கியக் கடமை ஆகும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
MDMK general secretary Vaiko has demanded that International probe for the genocide of Sri Lankan Tamils.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more