For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காமன்வெல்த் எதிர்ப்பு: நவ.12 முழு அடைப்புக்கு தமிழக மக்கள் ஒத்துழைக்க வைகோ கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நவம்பர் 12 ஆம் தேதி, தமிழகத்தில் கடை அடைப்புக்கும் முழு அடைப்புக்கும் தமிழக மக்கள் தோள்கொடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இலங்கைத் தீவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று ஒரு கருத்து உண்மையான உணர்வாளர்களாலும், 2008-2009 இல் ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அப்போது அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளாலும் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Vaiko seeks people tp support Nov 12 tradres bandh

இப்பிரச்சினையில் தொடக்கத்தில் இருந்தே ஈழத் தமிழர்களுக்கு நீதியின் வெளிச்சம் கிடைக்க என்ன வழி என்பதை நான் அழுத்தமாகக் கூறி வருகிறேன்.

54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் அமைப்பில், எந்த நாட்டையும் நிரந்தரமாக நீக்கி வைக்க அதன் விதிகளில் இடம் இல்லை.

இராணுவ சர்வாதிகாரத்தை ஏற்படுத்தியதால் பாகிஸ்தான் இருமுறை தற்காலிகமாக நீக்கப்பட்டது. மனித உரிமைகள் அழிக்கப்பட்டதால் உகாண்டா ஒருமுறை நீக்கப்பட்டது. விவா சென் சரோ என்ற பழங்குடி போராளி தூக்கிலிடப்பட்டதால் நைஜீரியா நீக்கப்பட்டது. ஜனநாயக தேர்தல் நடைபெறாததால் பிஜி தீவுகள் தற்போது நீக்கி வைக்கப்பட்டுள்ளது.

நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டபோது, தென்னாப்பிரிக்காவின் நிறவெறி இன ஒதுக்கல் கொள்கையால் காமன் வெல்த் அமைப்பில் ஏற்கனவே இருந்த உறுப்பினர் தகுதியைத் தொடர்ந்து நீட்டிக்க விண்ணப்பித்ததை காமன்வெல்த் ஏற்காததால், தென்னாப்பிரிக்கா தானாக வெளியேறியது. மண்டேலா விடுதலையானபின் மீண்டும் காமன்வெல்த்தில் சேர்ந்தது.

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொடியவன் ராஜபக்சே அரசோச்சும் இலங்கை நாடு, காமன் வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டால்தான், காமன்வெல்த்தின் குறிக்கோள் உயிரோடு இருப்பதாக அர்த்தம்.

இலண்டன் சேனல்-4 தொலைக்காட்சி 2008 ஆகஸ்டு 25 ஆம் நாள், எட்டு ஈழத் தமிழ் வாலிபர்கள் கைகளும் கண்களும் கட்டப்பட்டு, நிர்வாணமாக இழுத்துவரப்பட்டு, கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட கோரக் காட்சி உலகத்தில் மனிதாபிமானம் உள்ளவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

2008 டிசம்பர் 02 ஆம் தேதி, அதே இலண்டன் சேனல்-4 தொலைக்காட்சி, இசைப்பிரியா மிகக்கொடூரமான முறையில் சிங்கள இராணுவ சிப்பாய்களால் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டு சிதைந்து கிடந்த காட்சி தமிழர் மனங்களை நடுங்கச் செய்தது.

இந்தக் காட்சிகளை உள்ளடக்கி "ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம்" என்ற குறுந்தட்டை நானே தயாரித்து, இலட்சக் கணக்கான பிரதிகள் எடுத்து ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் நான் நின்று மாணவர்களிடம் வழங்கினேன். தமிழகமெங்கும் பொதுமக்களிடம் வழங்க ஏற்பாடு செய்தேன். பின்னர் அதனையே ஆங்கிலம், இந்தியில் மொழியாக்கம் செய்து, நாடுமுழுவதும் வெளியிட்டேன்.

நான்காண்டு காலத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் சிதம்பரமும், தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும் தமிழக மக்களை ஏமாற்ற இந்தக் கோரக் காட்சிகளைப் பற்றி பிலாக்கண அறிக்கை வெளியிடுகிறார்கள்.

காமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் ஏற்பாடு செய்ததே சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகமாக தற்போது பதவியில் இருக்கும் கமலேஷ் சர்மா என்ற இந்தியரைக் கொண்டுதான் இம்மாநாட்டை நயவஞ்சக நோக்கத்தோடு இந்திய அரசு கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்தது.

இந்த மாநாடு எந்த நாட்டில் நடக்கிறதோ, அந்த நாட்டின் அதிபர்தான் அதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக செயல்படுவார். இலங்கையில் மாநாட்டை நடத்திவிட்டால் தமிழ் இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்சேவை, இனக்கொலை குற்றத்திற்கான அனைத்துலக நீதிமன்ற விசாரணை என்ற கூண்டுக்குள் சிக்க விடாமல் தப்ப வைத்துவிடலாம் என்பதுதான் இந்திய அரசின் திட்டமாகும். இந்த இனப்படுகொலையில் கூட்டுக்குற்றவாளிதான் இந்திய அரசு ஆகும்.

இலட்சக் கணக்கான தமிழர்கள் படுகொலைக்கும், இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாளியாகும். நான் நெஞ்சால் போற்றும் பிரபாகரனின் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை யுத்த களத்தில் சிங்களவன் ஒருபோதும் வென்றிருக்க முடியாது.

இந்திய அரசின் முப்படைத் தளபதிகளும் சிங்கள அரசுக்கு வகுத்துக் கொடுத்த திட்டங்களும், நேரிடையாகவே செய்த பல உதவிகளும், அள்ளிக் கொடுத்த ஆயுதங்களும், மேலும் 6 அணு ஆயுத வல்லரசுகளிடம் ராஜபக்சே ஆயுதங்கள் வாங்குவதற்கு இந்தியா செய்த பண உதவியும்தான் விடுதலைப் புலிகள் போரில் தோற்கக் காரணமாயிற்று.

எனவே, இனப்படுகொலை குறித்த நீதி விசாரணை நடைபெறுமானால், இந்திய அரசும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியது வரும்.

தமிழகத்தில் இளம் தலைமுறையினரிடம், குறிப்பாக மாணவர்களிடம் ஏற்பட்டு வரும் தமிழ் ஈழ ஆதரவு உணர்ச்சிக் கனல் இந்திய அரசுக்கு எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால்தான் காமன்வெல்த் மாநாட்டை இந்திய-இலங்கை அரசுகள் நடத்த முற்பட்டுள்ளன.

இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமல் இருப்பதாலோ அல்லது இந்தியாவிலிருந்து எந்தப் பிரதிநிதியும் பங்கேற்காமல் தவிர்ப்பதாலோ தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப்போவது இல்லை. காமன்வெல்த் அமைப்பு அதிபர் கிரீடம் கொலைகார ராஜபக்சேவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சூட்டப்பட்டு விடும். எனவே, "காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு, மாநாட்டை நடத்தாதே" என்ற கோரிக்கையும் முழக்கமும்தான் ஈழத் தமிழர் விடியல் என்ற இலக்குக்கு வழிகாட்டுவதாக அமையும்.

நவ.12ல் கடையடைப்பு

இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து அம்பலப்படுத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் சகோதரர் வெள்ளையன் அவர்கள் தமிழகமெங்கும் நவம்பர் 12 ஆம் தேதி முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதை வரவேற்று ஆதரிக்கிறேன்.

மறியல், முழு அடைப்பு

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நவம்பர் 7 ஆம் தேதி நடத்திய பல்வேறு கட்சியினர் பங்கேற்ற கூட்டத்தில், நவம்பர் 12 ஆம் தேதி தமிழகத்தில் இரயில் மறியல் நடத்துவது என்றும்; முழு அடைப்பு நடத்துவது என்றும் எடுக்கப்பட்ட முடிவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்று ஆதரிக்கிறது.

தாய்த் தமிழகத்திலே வாழும் மனிதாபிமானமுள்ள மக்கள் அனைவரையும் பணிவோடு வேண்டுகிறேன். நவம்பர் 12 ஆம் தேதி அன்று ஏற்படும் பொருள் நட்டத்தையும், சிரமத்தையும் பொருட்படுத்தாது கடைகளை அடைக்குமாறு வேண்டுகிறேன். முழு அடைப்பை வெற்றிபெறச் செய்யும் வகையில், அன்று வாகனங்களைச் சாலைகளில் இயக்க வேண்டாம் என வேண்டுகிறேன். 12 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து இரயில் தடங்களிலும் இரயில் மறியல் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும் அடக்குமுறையை எதிர்த்து முன்வர வேண்டுகிறேன்.

தவிர்க்க இயலாது மருத்துவமனைகளுக்குச் செல்வோரும், திருமணம், ஈமச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்வோரும் வாகனங்களைப் பயன்படுத்தி பிரயாணம் செய்யலாம் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English summary
MDMK chief Vaiko has urged the people to support traders bandh against CHOGM and make it a big success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X