For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு நரேந்திர மோடி அரசு தான் காரணம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரியும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க கோரியும், பால் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் ம.தி.மு.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று போராட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான மதிமுகவினர் பங்கேற்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

தமிழ்நாட்டில் விசித்திரமான காட்சி புதுமையான காட்சி இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்றார்.

2 முதல்வர்கள்

தமிழகத்துக்கு 2 முதல்வர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே ஜெயிலில்தான் இருக்கிறார்கள். ஒருவர் மக்கள் முதல்வர் என்கிறார். சிறை தண்டனை விதிக்கப்பட்டு 3 மாத பிணையில் வெளி வந்துள்ள அவர் இப்போது சிறைவாசியாகவே போயஸ் கார்டனில் இருக்கிறார். அவரது தண்டனை நிறுத்திதான் வைக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படவில்லை.

இன்னொருவர் கண்ணீர் மல்க முதல்வராக பதவி ஏற்று இருக்கிறார். நான் இதை கேலி கிண்டலுக்காக சொல்லவில்லை. தமிழகத்தின் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கூறுகிறேன். ஓ.பன்னீர் செல்வம் அடி மட்டத்தில் இருந்து வந்தவர். சாதாரண கிளை செயலாளர், வட்ட செயலாளர் என இருந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஏற்கனவே ஒருமுறை தற்காலிக முதல்வராகவும் பதவி வகித்தவர். அவரை நான் மதிக்கிறேன். ஆனால் அவர் வகிக்கின்ற முதல்வர் பதவி மிடுக்கான, கம்பீரமான நடைபோடுகிற பதவி. அந்த நடை- உடை- பாவனை எங்கே போய்விட்டது. அவருடைய மதிப்பு, அன்பு, படிப்பு எல்லாம் போயஸ் கார்டனில் அடங்கி இருக்கிறது.

உத்தரவிடுங்கள்

பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தால் வேண்டாம் என்று மறுக்கிறார். அந்த அளவுக்கு அவர் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிறார். அவரது அறையில் இன்னும் முதல்வர் போர்டு கூட மாட்டவில்லை. ஏன் இந்த இழுக்கு. நான் மக்கள் முதல்வரை கேட்கிறேன். இன்றைய முதல்வரை உங்கள் இருக்கையில் அமர்ந்து வேலை செய்யுங்கள் என்று கூறவேண்டியது தானே.

அனுதாபப்படுகிறேன்

அப்படி செய்யாமல் அவரை சங்கடத்துக்கு ஆளாக்கி இருப்பது ஏன்? அவர் நிம்மதியாக, சந்தோஷமாக இருந்து பணியாற்ற முடியாது. அவருக்காக நான் அனுதாபப்படுகிறேன். ஜெயலலிதா சிறையில் இருந்து போது எனக்காக யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று ஏன் அறிக்கை வெளியிடவில்லை.

உச்சநீதிமன்றம் சவுக்கடி

தீக்குளிப்பு செய்தியை பார்த்த உடன், அவர் அறிக்கை விடுத்து இருந்தால் 200-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி இருக்காது. அவருக்கு மனசாட்சி உண்டா? மனித நேயம் உண்டா? தீக்குளித்து இறந்தவர்களின் சாவு கணக்கை பட்டியல் போட்டு வருகிறார்கள். உங்களுக்கு மனித நேயம் துளியும் கிடையாது. சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் சவுக்கடி கொடுத்த பிறகுதான் நீங்கள் அறிக்கை விட்டீர்கள்.

நம்பிக்கையிழந்த மக்கள்

இறந்தவர்களின் குடும்பத்துக்கு உதவுவதை பாராட்டுகிறேன். கைது செய்யப்பட்ட போது கடைகளை அடித்து நொறுக்கினார்கள், இடையூறு செய்ததை தடுத்து நிறுத்தினாரா?. காவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை இழக்கும் வகையில் செயல்பட்டார்கள்.

சர்வாதிகார நிழல்

இது சக்ரவர்த்தி ராஜ்ஜியமா? சர்வாதிகார ராஜ்ஜியமா? ஏதேச்சதிகார மனப்பான்மை, சர்வாதிகார நிழல் இன்று பரவிக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் பால் விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.

பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு உங்களுக்கு சாதாரணம். ஏனென்றால் பணத்தை எடை போட்டு எண்ணுகிறீர்கள். உங்களுக்கு என்ன கவலை. இது சாதாரண ஏழை மக்களை வெகுவாக பாதிக்கும். இலவசங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வதை நிறுத்திவிட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்கலாம். விற்பனை விலை உயர்த்தக்கூடாது.

கோடிக்கணக்கில் கொள்ளை

சர்க்கரை விலை, மின்கட்டண உயர்வைத் தொடர்ந்து டீ, காபி விலையும் உயரப்போகிறது. பாலில்தான் தண்ணீரை கலப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அ.தி.முக.கவினர் தண்ணீரில் பாலை கலப்படம் செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்து இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக நடந்த இந்த கொள்ளையர்கள் இப்போது சிக்கி இருக்கிறார்கள்.

உதவாத அரசு

கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவுக்கு இந்த அரசு ஒருதுரும்பை கூட தூக்கிப்போட்டு உதவவில்லை. நீதித்துறையை அவமதிக்கிற கட்சியாக அ.தி.மு.க உள்ளது. சகாயத்தின் விசாரணை கூடாது என்று முதலில் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திற்கும் போய் அங்கும் நிராகரிக்கப்பட்டது.

மடியில் கனம்

இதையடுத்து மறு சீராய்வு மனு போடுகிறார்கள். உயர்நீதிமன்றம் இந்த அரசுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் போடுகிறது. சகாயம் தலைமையிலான குழு விசாரிக்க என்ன தயக்கம், யாரைக்காப்பாற்ற விசாரிக்க கூடாது என்கிறார்கள். சகாயம் நேர்மையானவர். மனசாட்சி உள்ள அதிகாரி. மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் இருக்கும். ஊழல் பேர் வழிகளை பாதுகாக்க இந்த அரசு முயற்சிக்கிறது.

மீனவர்களுக்கு தூக்கு

தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை தூக்கு தண்டனை விதித்து உள்ளது. அவர்கள் எல்லை தாண்டி சென்றவர்கள்தான். போதை பொருள் கடத்தியதாக வழக்கு போட்டு இருக்கிறார்கள். போதை பொருள் கடத்தவில்லை என்று தமிழக உளவுத்துறை தெரிவித்துள்ளது. அப்படி இருக்கும்போது 5 மீனவர்களுக்கு இந்த கொடூர தண்டனையை ராஜபக்சே அரசு விதித்து இருக்கிறது.

Vaiko slams Modi government for fishermen issue, warns of dire consequences

மோடி அரசு கொடுத்ததா?

இது மோடி அரசு கொடுத்த தைரியமும் துணிச்சலும்தான். 5 பேரின் உயிருக்கும் மோடி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கொடுங்கோலன் ராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று ஒருவர் சொல்கிறார். அவரை பா.ஜனதாவினர் கண்டித்தார்களா? இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகாவது மத்திய அரசு உணரவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று வைகோ ஆவேசத்துடன் பேசினார்.

ஆர்பாட்டத்தில் பால் விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஒழியட்டும், ஒழியட்டும் தூக்குத் தண்டனை ஒழியட்டும் என்றும் மதிமுகவினர் முழக்கமிட்டனர்.

English summary
MDMK party hold demonstration in Chennai on today, against the recent hike in the price of Aavin milk announced by the government. Vaiko slams Modi government for fishermen issue, warns of dire consequences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X