For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ் கூட்டணி அரசை விட மோடி அரசு மோசம்...: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கூட்டணி அரசை விட மிக வேகமாக மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ரயில்வே நிதி நிலை அறிக்கையில் உத்தேசிக்கப்பட்டுள்ள ரயில்வே கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Vaiko slams NDA government to have UPA-like approach in Public Sector

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஜூன் மாதம் ரயில்வே பயணிகள் கட்டணம் 14.5 விழுக்காடு உயர்த்தப்பட்டு, சரக்குப் போக்குவரத்துக் கட்டணமும் 6.5 விழுக்காடு உயர்ந்தது. தற்போது மீண்டும் ரயில்வே பயணிகள் கட்டணமும் சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட்டு, பிப்ரவரி 2015 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தின் தகவல்கள் வந்துள்ளன.

எரிபொருள் விலைக்கு ஏற்ப ரயில்வே கட்டணங்களை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். மொத்தக் கட்டண உயர்வில் எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டு பயணிகள் கட்டணம் 4.2 விழுக்காடு அளவுக்கும், சரக்குக் கட்டணம் 1.4 விழுக்காடு அளவுக்கும் ஜூன் 2014 இல் உயர்த்தப்பட்டது.

2015 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இந்தக் கட்டண உயர்வு விகிதம் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. அரசாங்கத்தின் சுமையை மக்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் கூறுகிறார். விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு விலையேற்றம், பொது விநியோகத் திட்டங்களுக்கான மானியங்கள் ரத்து போன்றவற்றால் மக்கள் தாங்க முடியாத சுமையைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மத்திய ரயில்வே துறை அமைச்சர் உணர்ந்ததைப்போல் தெரியவில்லை.

ரயில்வே துறையின் மேம்பாட்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் முதல் 8 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி தேவைப்படுகிறது. எனவே ரயில்வே துறையில் பெரிய அளவில் நிதி மூலதனம் திரட்டப்பட வேண்டும் என்பதையும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

காங்கிரஸ் கூட்டணி அரசை விட மிக வேகமாக மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறையாக சிறந்து விளங்கும் ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. ரயில்வே துறையின் சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு இதனை உறுதி செய்கிறது. ரயில்வே துறையின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக உயர்நிலைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முன்னாள் செயலாளர் டி.கே.மித்தல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர், ரயில்வே வாரியத்தின் ஆலோசகர் (கணக்கு) மற்றும் ஆறு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். உறுப்பினர்களில் நான்கு பேர் இரயில்வே துறை தொடர்பான அலுவலர்களும், இரண்டு பேர் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இடம் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கென்சி நிறுவனமும் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள உயர்நிலைக்குழுவில் இடம் பெறுகிறது. இந்தக் குழு ரயில்வே துறையின் வருவாய் கட்டமைப்பு, அதன் திறன், வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை தர வேண்டும் என்று பணிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்க அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக்குழுவில் தனியார் நிறுவனப் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருப்பது மோடி அரசின் தனியார் மயமாக்கும் திட்டத்தைப் பறைசாற்றுகிறது.

மேலும் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் ரயில்வே துறையில் நூறு விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டுக்கான திட்டங்களைத் தெரிவித்து உள்ளார். அதிவேக ரயில் திட்டங்கள், தனியான சரக்கு ரயில் தடங்கள், ரயில் இயந்திரங்கள் மற்றும் பெட்டிகள் தயாரிப்பு, பராமரிப்பு மற்றும் ரயில்வே மின்சாரமயம், பயணிகள் மற்றும் சரக்குகள் முனையம் அமைத்தல் உள்ளிட்ட ரயில்வே கட்டமைப்புத் துறைகளில் நூறு விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பெரும் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்க்குச் சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு, ரயில்வே துறையைத் தனியார் மயம் ஆக்க முயற்சிப்பதற்கும், ரயில்வே பயணிகள் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணம் உயர்த்த திட்டமிட்டுள்ளதற்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2015ஆம் ஆண்டு இரயில்வே நிதி நிலை அறிக்கையில் உத்தேசிக்கப்பட்டுள்ள இரயில்வே கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

English summary
MDMK general secretary Vaiko slamming the NDA government. NDA follows the UPA policy on Public sector to Privatitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X