For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தேன் தடவிய நஞ்சு: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐந்து நாடுகள் முன் வைக்கும் தீர்மானம், அமுதம் தடவிய நஞ்சி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

உலகில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற இனப்படுகொலை அழிவுகளில் ஒன்றாக இலங்கைத் தீவிலும் சிங்கள அரசால் திட்டமிடப்பட்ட தமிழ் இனப்படுகொலை 1950களிலேயே தொடங்கி, 2008 இறுதிப் பருவத்திலும், 2009 மே மாதத்திலும், ஏன் இன்று வரையிலும் நடத்தப்படுகிறது.

Vaiko slams US resolution agaisnt Sri Lanka

பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், அன்னையர் தந்தையர், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் என அனைவரும் தமிழர்களாகப் பிறந்த காரணத்தினால், கொடியவன் ராஜபக்சே அரசின் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். குற்றுயிரும் குலையுறுமாக மருத்துவமனையில் கிடந்த தமிழர்கள், பாடசாலைகளில், வழிபாட்டுத் தலங்களில் அடைக்கலம் தேடிய அப்பாவிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

பல்லாயிரக் கணக்கானவர்கள் சிங்களவன் ஏவிய ராணுவ முற்றுகையால் பசிக்கும் உணவும், நோய்க்கு மருந்தும் இன்றி மடிந்தனர். இறுதி கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைக்க அவர்களின் சடலங்களை மண்ணோடு மண்ணாக கனரக எந்திரங்களைப் பயன்படுத்தி அழித்தனர். லண்டனில் ஊடகங்களில், ஏடுகளில் நிலத்தில் சிதறிக் கிடக்கும் பிரேதங்களோடு இருந்த இந்தக் காட்சியும் இடம்பெற்றது.

உலகம் தடை செய்த ராசயன குண்டுகளை சிங்கள விமானப்படை பயன்படுத்தியது. இந்த இனக்கொலை யுத்தத்தை முழுக்க முழுக்க பின்புலத்திலிருந்து காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்திய அரசு நடத்தி இயக்கியது.

இதனால்தான் சமர்க்களங்களில் அதுவரை விடுதலைப் புலிகளை வெல்ல முடியாத ராஜபக்சே ராணுவம், புலிகளை இந்தியாவின் முழு உதவியோடு ஒழித்துவிட்டோம் என கொக்கரித்தது. தமிழ்ச் சாதியின் விதி இதுதானா? என நெஞ்சில் படர்ந்த நெருப்பை தங்கள் மேனியில் படரவிட்டு முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகள் மரணத் தீயை அரவணைத்து மடிந்தனர்.

ஜெனீவா சிறப்புக் கூட்டம்

இதயத்தைப் பிளக்கும் இக்கோரக் கொலைகளை அறிந்த ஜெர்மனி நாடு 16 நாடுகளின் கையொப்பத்தோடு மனித உரிமை கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கு தாக்கீது கொடுத்ததால், மனித உரிமைக் கவுன்சிலின் சிறப்புக் கூட்டம் 2009 மே இறுதி வாரத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது.

ஐ.நா.வின் வரலாற்றில் அதுவரை நடக்காத அக்கிரமம் நடந்தது. தமிழரை ரத்த வேட்டையாடிய கொலைகார சிங்கள அரசுக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை கியூபாவும், சீனாவும், இந்தியாவும் முன்னின்று வடித்து 29 நாடுகளின் ஆதரவைத் திரட்டி நிறைவேற்றியது. 12 நாடுகள் எதிர்த்தன. 6 நாடுகள் நடுநிலை வகித்தன. இதுதான் ஐ.நா. தமிழருக்கு வழங்கிய அநீதி.

சேனல் 4 சாட்சி

நீதிக்காக தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும் தமிழர்களின் ஆவேசக் குரல் எழுந்தது. சேனல்-4 தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் இனக்கொலை சாட்சியங்களை தந்தன. 2010லும் நீதிக்கான நகர்வு எதுவும் இல்லை. 2011 பிப்ரவரியில் இலங்கை உள்நாட்டுப் பிரச்னையில் வேறு நாடுகள் தலையிடக்கூடாது என இந்திய அரசு ஐ.நா.வில் கருத்துக்கூறிய மறுநாள் நான் மிகக் கடுமையான கண்டன அறிக்கை தந்தேன்.

நீதி கிடைக்கவில்லை

அநீதியை உணர்ந்த தமிழக பிரதான கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பின்னர், இந்திய அரசு தந்திரமாகப் பதுங்கியது. மனித உரிமை கவுன்சிலில் நீதி கிடைக்கவில்லை.

ஈழத் தமிழர் படுகொலை குறித்து உலகின் பல பகுதிகளில் கண்டனமும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில், லண்டனில் ஈழத் தமிழர்கள் நடத்திய கிளர்ச்சிகளும் இலங்கையில் நடந்ததைக் கண்டறிய மார்சுகி தாரிஸ்மன் தலைமையில் மூவர் குழுவை ஐ.நா. பொதுச்செயலாளர் அறிவிக்கச் செய்தன.

பன்னாட்டு விசாரணை

உலகின் கண்களில் மண்ணைத் தூவ கொடியவன் ராஜபக்சே "கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம்" எல்.எல்.ஆர்.சி. எனும் மோசடி ஆணையத்தை அறிவித்தான். குற்றவாளியே இங்கு விசாரணை அதிகாரியானான். ஐ.நா.வின் மூவர் குழு ஈழத்தில் நடந்த தமிழ் இனக்கொலை கொடூரத்தை ஆதாரங்களோடு அறிக்கையாக்கியது. நீதி கிடைக்க வேண்டுமெனில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அவசியம் என்றது.

நீர்த்துப் போன தீர்மானம்

2012 இல் ஜெனீவாவில் எந்த முன்னேற்றமும் இல்லை. உலகத்தை ஏமாற்ற ஒப்புக்காக தீர்மானம். 2012 பிற்பகுதியிலும், 2013 தொடக்கத்திலும் தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு நீதி கேட்டு மாணவர் கிளர்ச்சி வெடித்தது. எனவே கடந்த வருடம் ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசிடமே விசாரணை பொறுப்பை ஒப்படைத்து நீதிக்கான கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டேவிட் கேமரூன்

இவ்வாண்டின் பிற்பகுதியில் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் கள நிலைமையை ஆய்வு செய்து தந்த அறிக்கையில் சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடைபெற்றால்தான் நீதிக்கு வழி கிடைக்கும் என அறிக்கை தந்தார். உலகத்தின் மனசாட்சி மெல்ல மெல்ல விழித்துக்கொண்டுவிட்டது என நாம் கருதினோம். யாழ்ப்பாணம் சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூற்று அந்த நம்பிக்கையைச் சற்று வளர்த்தது.

நீதிக்கான கதவு திறக்கும்

இப்போது ஜெனீவாவில் மனித உரிமை கவுன்சில் கூட்டம் தொடங்கிவிட்டது. முருகதாசன் தீக்குளித்து மடிந்த ஜெனீவா திடலில் மார்ச் 10 ஆம் தேதி இலட்சக் கணக்கான தமிழர்கள் சங்கமித்து நீதிகேட்டு எழுப்பும் சத்தியத்தின் ஆவேசக் குரல் மனித உரிமை கவுன்சிலின் செவிகளில் ஒலிக்கும். நீதிக்கான கதவு திறக்கும் என நம்பினோம்.

5 நாடுகள் தீர்மானம்

அமெரிக்கா, பிரித்தானியம், மாண்டிநிரோ, மாசிடோனியா, மொரீசியஸ் ஆகிய ஐந்து நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் மார்ச் 3 ஆம் தேதி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. அமெரிக்க அரசு முன்நின்று தயாரித்துள்ள இத்தீர்மானம் மிகவும் வஞ்சகமானது. வரிக்கு வரி திரும்பத் திரும்பப் படித்து அதிர்ச்சியுற்றேன்.

சதிவேலை

சிங்கள அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்துவிட்டதாகவும், ஆனாலும் அதை அலட்சியப்படுத்துகிறோம் என்று சிங்கள அரசு கூறுவதும், தமிழர்களுக்கான நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைக்க திரைமறைவு சதி வேலையாகவே தெரிகிறது.

விடுதலைப்புலிகள் மீது பலி

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ற சொற்களின் பின்னால் கொடூரமான சிங்கள அரச பயங்கரவாதத்தை மறைத்துவிட்டு, தாயக விடுதலைக்காக உலகெங்கும் பல தேசிய இனங்கள் ஆயுதம் ஏந்திய வழியில் சமர்க்களத்தில் போராடிய விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்தும் நோக்கம் நன்கு தெரிகிறது.

திட்டமிட்ட உள்நோக்கம்

2020 ஆம் ஆண்டில் சிங்கள தேசத்தில் வேறு இனம் என்ற அடையாளமோ, பேச்சோ இருக்கக்கூடாது என்று ராஜபக்சே சகோதரர்கள் ஊளையிட்ட கருத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இத்தீர்மானத்தில் தொடக்கத்தில் ஒரு இடத்தில் இனம் (Ethnicity) என்ற சொல்லைத் தவிர்த்து தீர்மானம் நெடிகிலும் தமிழ் தேசிய இனம் என்பது முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்கள் என்றே கூறப்பட்டுள்ளது. இதில் திட்டமிட்ட உள்நோக்கம் தெரிகிறது.

அமுதம் தடவிய நஞ்சு

கொலைகார சிங்கள அரசு நியமித்த எல்.எல்.ஆர்.சி. எனும் மோசடி பித்தலாட்ட ஆணையத்தை பல இடங்களில் இத்தீர்மானம் பாராட்டுகிறது. இலங்கையில் நல்லிணக்கத்துக்கான ஆக்கபூர்வமான வேலைகளை ஆணையம் செய்துவிட்டதாக மெச்சவும் செய்கிறது. இந்த ஆணையத்தின் சில பரிந்துரைகளை இன்னும் அரசு நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டு, மேல் பூச்சு ஏமாற்று வேலையை தீர்மானம் செய்கிறது. உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்ட என்று கூறிக் கொண்டு சிங்கள அரசு அமைத்த ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையாக தோல்வியடைந்து விட்டதால், சுதந்திரமான நம்பகத் தகுந்த சர்வதேச விசாரணை வேண்டும் என்று மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தந்த அறிக்கையை ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டே, இலங்கை சிங்கள அரசே அப்படி ஒரு விசாரணையை நடத்த வேண்டும் என்றும், அதில் நீதி கிடைக்காவிடில் அனைத்து நாடுகள் விசாரணை குறித்த நவநீதம்பிள்ளை பரிந்துரையை வரவேற்பதாகவும் முன்னுக்குப் பின் முரணாக இத்தீர்மானம் கூறுகிறது.

மக்கள் தீர்ப்பாயம்

ஜெர்மனியின் பிரையன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் 2013 டிசம்பர் 10 இல் அறிவித்த தீர்ப்பில் இலங்கையில் நடந்தது தமிழ் இனப்படுகொலைதான் என்றும், அக்கொடுமை 2009 மே மாதத்திற்குப் பின்னரும் இன்னமும் தொடர்கிறது என்று அறிவித்தது.

இலங்கையில் தமிழர் தாயகத்தில் தற்போது வேகமாக சிங்களக் குடியேற்றங்கள் நடக்கின்றன. தமிழ் ஈழம் சிங்கள இராணுவத்தின் பிடியில் நசுங்குண்டு விம்முகிறது. தமிழ் பெண்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள விபரீத நிலைமையை நினைக்கவே மனம் நடுங்குகிறது. ஈழத்தமிழருக்கு நீதியும் தீர்வும் ஒன்றே ஒன்றுதான். நடைபெற்ற இனக்கொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், சிங்களக் குடியேற்றங்களும் சிங்கள இராணுவமும் தமிழர் தாயகத்திலிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டு ஒரு இடைக்கால நிர்வாகத்தை ஐ.நா.மன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொது வாக்கெடுப்பு

சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் நடத்தப்பட வேண்டும். 2011 ஜூன் 1 ஆம் தேதி பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அரங்கத்தில் நான் அறிவித்தவாறு அந்த பொது வாக்கெடுப்பு உலகின் பல நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் நடத்தப்பட வேண்டும். இவை மட்டும்தான் ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும். இனக்கொலை குற்றவாளிகளுக்கு தண்டனையும், ஈழத் தமிழர்களுக்கு நீதியும் கிடைக்க வழி அமைக்கும்.

கிரிமியாவில் ஆதிக்கம்

உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக ரஷ்யாவின் ராணுவத்தை செலுத்துவேன், கிரிமியா ரஷ்யாவோடு இணைய பொது வாக்கெடுப்பு கோருவேன் என முண்டா தட்டும் ரஷ்யா ஐ.நா.வின் பாதுகாப்புக்குழு உறுப்பினர் நாடு. இங்கிலாந்து நாட்டில் அனைத்து உரிமைகளோடும் வாழும் ஸ்காட்லாந்து மக்கள் தனிநாடாகப் போவதற்கு இதோ பொது வாக்கெடுப்பு நடக்கப் போகிறது.

தமிழனுக்கு நீதியில்லையா?

உலகில் தமிழனுக்கு மட்டும் ஏன் நீதியில்லை. நாதியற்றுப்போனோமா நாங்கள்? என தரணி வாழ் தமிழின மக்கள் சாதி, மதம், கட்சி எல்லை கடந்து தமிழர்களின் பிறவிக்குணங்களில் ஒன்றான வேற்றுமையை மறந்து மறுக்கப்பட்ட நீதியைப் பெறவும், தரணியில் தமிழருக்கு ஈழ தேசம் மலரவும் வெகுண்டு எழவேண்டிய கடமையைச் செய்ய சபதம் ஏற்போம்.

ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அரசுகள் ஈழத் தமிழர்களுக்கு வஞ்சகம் செய்யாமல், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணைக்கு ஏற்பாடு செய்யவும், சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை அங்கீகரிக்கவும் ஆன விதத்தில் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

விடியல் கிடைக்குமா?

அமுதம் தடவிய நஞ்சாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அமெரிக்க தீர்மானத்தின் ஊடாக புதைந்துள்ள நச்சுத் தன்மையை நீக்கி நீதிக்கான தீர்மானத்தை நிறைவேற்றவும் மனித உரிமை கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள் முன்வரவேண்டும். அதற்கான அறப்போர் குரலை ஓங்கி எழுப்புவோம். கரிய இரவு நீடித்துக்கொண்டே போக முடியாது. விடியல் என்பது நியதி. அதுபோலவே, ஈழத் தமிழர்களுக்கும் நீதியைப் பெற்றுத் தரும்வரை உறுதிகொண்டு தொடர்ந்து போராட தமிழ்க் குலத்தின் இளைய தலைமுறையை அன்புடன் வேண்டுகிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.

English summary
MDMK General secretary Vaiko on Friday rubbished the language of American resultution, which he said would not bring justice to Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X