For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் ராஜபக்சேவுக்கு எதிரான தமிழ் மக்கள் தீர்ப்பு... தனி ஈழம் மட்டுமே தீர்வாகும்: வைகோ

By Mayura Akilan
|

Vaiko urged referendum on the establishment of a separate Tamil Eelam
சென்னை: சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளிலும் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே வாக்குப்பதிவில் பங்கேற்கவுமான நிலையை அனைத்துலக நாடுகளும், ஐ.நா.மன்றமும், மனித உரிமை ஆணையமும் உருவாக்கித் தரவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில், வடக்கு மாகாணத் தேர்தலில் மொத்தம் உள்ள 36 தொகுதிகளில், 28 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று இருக்கிறது. கொலைகார ராஜபக்சே கட்சியும், துரோகக் கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி படுதோல்வி அடைந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணத்தில் 4 இடங்கள், முல்லைத் தீவில் 4 இடங்கள், வவுனியாவில் 4 இடங்கள், கிளிநொச்சியில் 3 இடங்கள், மன்னாரில் 3 இடங்கள் ஆக 28 தொகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கொலை செய்யும் நோக்கோடு இராணுவ உதவியுடன் வன்முறைக் குண்டர்களின் தாக்குதலுக்கு ஆளான ஆனந்தி சசிதரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது மகிழ்க்குரியதாகும்.

இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி இனப்படுகொலை செய்த சிங்கள இராஜபக்சே அரசு, இனக்கொலை குற்றத்தை மறைப்பதற்காகவும், அனைத்துலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகவும், தமிழருக்கான நீதியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு காமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்காகவும், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தியது.

இதுவும் இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் இலங்கை அரசு வகுத்த சதித்திட்டமே ஆகும்.

தந்தை செல்வா காலத்தில் சிங்கள அரசு அறிவித்த மாகாணக் கவுன்சில் அதிகாரங்களோ, அதிபர் ஜெயவர்த்தனா காலத்தில் மீண்டும் அறிவிக்கப்பட்ட மாவட்டக் கவுன்சில் அதிகாரங்களோ கூட இப்போது மாகாண சபைகள் மூலம் கிடைக்காது.

13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதாக, 1987 நவம்பரில் அறிவித்து, 1988 ஆம் ஆண்டு வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து இந்திய இராணுவத்தின் உதவியோடு 8 சதவீத மக்கள் வாக்களித்த ஒரு போலியான தேர்தலை நடத்தி, இராஜீவ் காந்தி அரசின் கைக்கூலியான வரதராஜ பெருமாளை முதல்வராக்கி நடத்திய நாடகத்தின் இறுதிக் காட்சியாக, 1990 மார்ச் 1 இல் மாகாண சபையால் எந்தப் பயனும் இல்லை என்று வரதராஜ பெருமாள் அறிவித்துவிட்டு ஓடிப்போனார்.

தங்கள் தாயக விடுதலைக்காக ஈழத் தமிழர்கள் மானத்தோடும் உரிமையோடும் வாழ்வதற்காக தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் பிரகடனம் செய்த, சுதந்திரத் தமிழ் ஈழத்தைக் கட்டி எழுப்ப உலகம் இதுவரை கண்டும் கேட்டும் இராத வீரப் போர் புரிந்து மகத்தான தியாகம் செய்து தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தமிழ் ஈழ அரசை அமைத்தனர்.

உலகம் அதை அங்கீகரிக்கும் நிலை நெருங்கிய போது, இந்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி பணத்தையும், முப்படைத் தளவாடங்களையும் சிங்கள அரசுக்குத் தந்து யுத்தத்தை இயக்கி புலிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. ஒரு கோரமான இனப்படுகொலை நடந்த உண்மையை உலகம் அறியும் விதத்தில் சேனல்-4 தொலைக்காட்சி ஒளிப்படங்களும், ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கையும் வெளிப்படுத்திய சூழலில் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளியான இந்தியாவின் காங்கிரஸ் அரசும், சிங்கள அரசும் திட்டமிட்டுச் செய்கின்ற சதியின் ஏற்பாடுதான் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு ஆகும்.

புண்ணுக்குப் புனுகு பூசுவதுபோல், வடக்கு மாகாணத்தில் சிங்கள அரசு தேர்தலை நடத்தி உள்ளது. முன்பு கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி, சிங்கள அரசின் ஏஜெண்டுகளை அதிகாரப் பொறுப்பில் அமர வைத்து மோசடி வேலை செய்தது. கிழக்கு மாகாணத்துத் தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. மாறாக, அங்கு வாழும் முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள அரசு கேடு செய்தது.

13-ஆவது சட்டத் திருத்தம் என்பது ஈழத் தமிழர்களுக்கு எந்த நீதியும் வழங்காத ஏமாற்றுத் திட்டம் ஆகும். அதனை அப்போதே ஈழத் தமிழ் மக்கள் முற்றிலுமாக நிராகரித்தனர்.

இப்போது 13-ஆவது திருத்தத்தையும் மேலும் நீர்த்துப்போகச் செய்து, தமிழர் தாயகத்தின் நிலம், உள்நாட்டுப் பாதுகாப்புக்கான காவல்துறை குறித்த சொற்பமான அதிகாரங்களையும் சிங்கள அரசு பறிக்க திட்டமிட்டுவிட்டது. அதனை ராஜபக்சே கூட்டம் அறிவித்தும் விட்டது.

எனினும் இருண்ட வானத்தின் ஒரு மூலையில் சிறிய வெளிச்சம் தெரிவதுபோல, மாகாண சபை தேர்தல் முடிவுகள் ஈழத் தமிழ் மக்களின் மனநிலையை, எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் மறுவாழ்வுக்கு சிங்கள அரசு செயல்படுவதாக மகிந்த ராஜபக்சே செய்த பொய்ப் பிரச்சாரத்தையும் இராணுவம், போலிஸ் மற்றும் வன்முறையாளர்களைக் கொண்டு ஏவிய அடக்குமுறை அச்சுறுத்தலையும் மீறி ஈழத் தமிழர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குகள், சிங்கள அரசின் அராஜாக அரசுக்கு எதிரான வாக்குகளே ஆகும்.

அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அரசருக்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, பின்னர் சரியான சந்தர்ப்பத்தில் சுதந்திர அயர்லாந்தை டிவேலாராவும் சின்பென் இயக்கமும் பிரகடனம் செய்ததுபோல, அத்தகைய வரலாறு தமிழ் ஈழத்திலும் மீண்டும் திரும்பும் என்பதுதான் காலத்தின் தீர்ப்பாக இருக்கும்.

தமிழ் ஈழ மக்கள்சிங்களருக்கு அடிமைப்பட்டு வாழ்வதற்கு ஒருகாலும் ஒப்பமாட்டார்கள் என்பதனால், தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்படவும், சிங்கள இராணுவமும், போலிசும் முற்றாக வெளியேற்றப்படவும், சிங்களச் சிறைகளில் வாடுகிற ஈழத் தமிழர்கள் அனைவரும் விடுவிக்கப்படவும், உலகின் பல நாடுகளில் விடுதலைக்காக நடத்தப்பட்டதுபோல் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளிலும் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே வாக்குப்பதிவில் பங்கேற்கவுமான நிலையை அனைத்துலக நாடுகளும், ஐ.நா.மன்றமும், மனித உரிமை ஆணையமும் உருவாக்கித் தரவேண்டும். அந்த இலக்கை அடையும் குறிக்கோளோடு தாய்த் தமிழகத்திலே உள்ள தமிழர்களும், உலகெங்கும் உள்ள தமிழர்களும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

English summary
Vaiko took a more cynical line on the election, saying, while the landslide vote was the verdict of the Sri Lankan Tamils against the Mahinda Rajapaksa government, the NPC would be unable to provide solutions. “The Council will not have even the powers guaranteed to it by either the Sinhalese government during the time of Thanthai Chelva (SJV Chelvanayakam) or by the (former Lankan President) Jayewardene government,” said Vaiko. He urged Tamils in Tamil Nadu and across the world to pledge to push for the conduct of a referendum on the establishment of a separate Tamil Eelam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X