For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே வாரியத் தேர்வில் லட்சக்கணக்கான தமிழர்களின் விண்ணப்பம் நிராகரிப்பு: வைகோ எச்சரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ரயில்வே பணியிடங்களுக்கு நடைபெறும் போட்டித் தேர்வுகளில் இந்தியாவில் பல பகுதிகளில் அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் மோதல்கள் ஏற்பட்டுள்ளன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளர். தமிழ்நாட்டில் அத்தகைய விரும்பத்தகாத சூழலை, தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் ‘குரூப் டி' பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5450 ‘குரூப் டி' பணியிடங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

Vaiko urges railway minister look into the RRB recruitment scam

இத்தேர்வு நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து ஐந்து கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் தேர்வுக்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சுமார் 2 லட்சம் விண்ணப்பங்களை ரயில்வே வாரியம் நிராகரித்து இருக்கிறது.

அரசுப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும்போது இணைக்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் சான்று ஒப்பம் (attestation) பெற வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் இதனை உறுதி செய்திருக்கின்றார். ஆனால், ரயில்வே தேர்வு வாரியம், ‘குரூப் டி' பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பங்களில் இணைக்கப்பட்ட நகல் சான்றிதழ்களுக்கு அரசு அதிகாரிகளின் சான்று ஒப்பம் இல்லை என்று நிராகரித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

ரயில்வே தேர்வு வாரியம் ‘குரூப் டி' பணியாளர் தேர்வுக்கு செய்த அறிவிப்பு விளம்பரங்களில் முரண்பாடு இருந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ‘குரூப் டி' பணியாளர் தேர்வு ஆங்கில விளம்பரங்களில் ‘சான்றிதழ்' நகல்களுக்கு ‘அரசு அதிகாரிகளின் ஒப்பம் வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், தமிழில் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் ‘அரசு அதிகாரிகளின் ஒப்பம் தேவை இல்லை' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இதே தேர்வு விண்ணப்பங்கள் இணைய வழியாகவும் விண்ணப்பிக்கலாம். அதற்கு நகல் சான்றிதழ்களுக்கு சான்றொப்பம் தேவை இல்லை என்றே அதிகளவு வெளியிட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் சான்றொப்பம் இல்லாமல்தான் விண்ணப்பங்களை ரயில்வே வாரியம் ஏற்றுக்கொண்டு தேர்வு நடத்தியது. தற்போது ரயில்வே வாரியத்தின் அலட்சியத்தால், ‘குரூப் டி' தேர்வு அறிவிப்பில் செய்யப்பட்ட குளறுபடிகளால் இரண்டு லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ரயில்வே பணியிடங்களுக்கு நடைபெறும் போட்டித் தேர்வுகளில் இந்தியாவில் பல பகுதிகளில் பாரபட்சமான அணுகுமுறை மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் அத்தகைய விரும்பத்தகாத சூழலை, தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது.

எனவே சான்றொப்பம் இல்லாமல் விண்ணப்பங்கள் அனுப்பியுள்ள தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களின் அனைவரது விண்ணப்பங்களையும் ரயில்வே தேர்வு வாரியம் ஏற்றுக் கொண்டு ‘குரூப் டி' பணியாளர் தேர்வை நடத்த வேண்டும் என்றும், மத்திய ரயில்வேதுறை அமைச்சர் இதில் கவனம் செலுத்தி உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

English summary
Vaiko has urged the railway minister to take action in the RRB recruitment scam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X