For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கிறது வெயிட்டேஜ் மதிப்பெண் முறை: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 'சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்' என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை தமிழக அரசு அலட்சியப்படுத்தியதின் விளைவு, நான்கு ஆசிரியர்கள் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

vaiko

ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர் படிப்பு, பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த சுமார் 10 லட்சம் பேர் 2013-இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதினர். 10,762 ஆசிரியர் பணி இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 72,711 பேர் தேர்ச்சி பெற்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 விழுக்காடு என்று நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மட்டும் 5 மதிப்பெண்கள் சலுகை வழங்கப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல், தமிழக அரசு ஆணை எண் 71-இன் படி தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) திடீரென்று புகுத்தப்பட்டது.

இதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண், தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவை கணக்கிடப்பட்டது. இதைப்போலவே பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்., தகுதி தேர்வு மதிப்பெண் ஆகியவை கணக்கிடப்பட்டது.

இவைகளின் அடிப்படையில்தான் தகுதிகாண் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 31,500 இடைநிலை ஆசிரியர்கள் தகுதிகாண் மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதிகாண் மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்தம் 13,836 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கி உள்ளது.

தமிழக அரசு புகுத்தி உள்ள தகுதிகாண் மதிப்பெண் காரணமாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்துள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிராமப்புற மற்றும் இடஒதுக்கீட்டு உரிமை பெற்றிருக்கின்ற பிரிவினர், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும், அரசு பணி நியமனம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து வடிகட்டுவது என்பது ஏற்புடையது அல்ல.

சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும், தகுதி - திறமை என்று கூறி 50 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட மோசடிகளை மீண்டும் செயல்படுத்தவும், அறிமுகம் செய்யப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இதற்காக போடப்பட்ட அரசு ஆணை எண் 71-ஐ திரும்பப் பெற வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்துப் பேசி சுமூகத் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK leader Vaiko urged the government, should cancel the weightage mark into the TRB exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X