For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: வைகோ, வேல்முருகன் வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றி இந்தியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்ததடையை எதிர்த்து 2011-ஆம் ஆண்டு லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம் 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீங்கியுள்ளது.

இதனைப் பின்பற்றி இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

வைகோ

இது குறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கை:

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப் வாதாடினார். இலக்சம்பெர்க் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கம் தங்கள் தாயகத்தின் விடுதலைக்காகவும் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் போராடியதேயொழிய அது பயங்கரவாத இயக்கம் அல்ல என்றும், விக்கிப் பீடியா தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பது என்பது நியாயமற்றது என்றும் புலிகள் இயக்கத்தின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தியா உள்ளிட்ட உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகள், இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்குத் துணைபோனதும், நிதி மற்றும் இராணுவ உதவிகளை வாரி வழங்கியது சர்வதேச சட்ட நியதிகளுக்கும், உலக நீதிக்கும் எதிரானது ஆகும்.

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் மாவட்ட நீதிமன்றம் 2011 அக்டோபர் 21 இல் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்ரவாத இயக்கம் அல்ல என்று தீர்ப்பளித்தது. அதற்கு முன்பு 2011 ஜூன் 23 இல் நேபிள்ஸ் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது.

சர்வதேச சட்டங்களின்படி, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கத்தை, தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் 2009 இல் தெளிவுபடுத்தியது.

இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டிதான், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் ரிட் மனு தாக்கல் செய்தேன். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறேன்.

இந்தச் சூழ்நிலையில், இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி தீர்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி உலக நாடுகளும் இதனைப் பின்பற்றி தடையை நீக்கும் என்பது உறுதி.

இந்தியாவும் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமாக அங்கீகரித்து, அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

வேல்முருகன்

இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நீதிமன்றம் இன்று நீக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க போற்றுதலுக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த விடுதலைப் போரை ஒடுக்குவதற்காக இந்தியா- இலங்கை கூட்டுச் சதியால் இந்த தடை விதிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியமே இந்தியா விதித்த தடையின் அடிப்படையில்தான் புலிகள் மீதான தடையும் விதித்தது.

Vaiko, Velmurugan demand lifting of ban on LTTE

இதனாலேயே தமிழீழ விடுதலைப் போர் பெரும் பின்னடைவுக்குள்ளானது. ஒன்றரை லட்சம் தமிழர்கள் நிராயுதபாணிகளாக 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த களத்தில் இனப்படுகொலைக்குள்ளாக நேரிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆளுமைக் காலத்தில் எந்த ஒரு வெளிநாட்டிலும் எந்த ஒரு தாக்குதலையும் மேற்கொள்ளாத நிலையில் உலக நாடுகள் தடை மேல் தடை விதித்து தமிழர்களை தனிமைப்படுத்தியது. இந்த தடைகளை உடைக்கும் விதமாக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய ஒன்றியம் வழக்கு தொடர்ந்தது

இவ்வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதிதான் விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான அனைத்து தடை கட்டுப்பாட்டுகளையும் நீக்கி உத்தரவிட்டது.

இதன் மூலம் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 28 நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டுவிட்டது என்ற செய்தி உலகத் தமிழினத்தை பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத் தர உழைத்த அனைத்து புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் இந்திய மத்திய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்துள்ள தடையை நீக்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தி. வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசப் பேரியக்கம்

தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் கி. வெங்கட்ராமன் வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, இன்று (16.10.2014) லக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்' என்ற பெயரில், பல அமைப்புகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்டது.

இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட, இலங்கை - இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளையும் ‘பயங்கரவாத அமைப்பு' என முத்திரைக் குதித்தினர்.

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட எந்த அயல் நாடுகளிலும், புலிகள் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்ற போதிலும், இலங்கை மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் அழுத்தங்களுக்கு ஏற்ப, அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு, இத்தடை மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்ற இனக்கொலைப் போர், ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்' என்று ஞாயப்படுத்தப்பட்டது. அதற்கு இந்தத் தடை உதவியாக இருந்தது.

இந்நிலையில் தான், போர் முடிந்ததாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசே அறிவித்த பிறகும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என உலக நாடுகளில் பரவி வாழும் தமிழீழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கோரிக்கை வைத்தனர்.

இதன் விளைவாக, 2011ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் "பயங்கரவாத அமைப்பு" அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகள் மீதானத் தடையை நீக்கக் கூறும் காரணங்கள் இந்தியாவிற்கும் பொருந்தும். தமிழ்நாட்டையும் சேர்த்து விடுதலைப் போராட்டம் நடத்துவதாக, தமிழீழ விடுதலைப்புலிகள் எப்பொழுதும் சொன்னது கிடையாது. தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழக அமைப்புகளும், அவ்வாறு சொன்னது கிடையாது.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்ப்பைப் பின்பற்றி, இந்தியாவும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK leader Vaiko, TVK leader Velmurugan demand the lifting of a ban imposed on the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X