• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொலைநோக்குப் பார்வை கொண்ட பட்ஜெட்: வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் வரவேற்பு

By Mayura Akilan
|

சென்னை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ம.க தலைவர் ராமதாஸ் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநில உரிமைகளை மதிக்கும் அரசாகத் திகழும் என்பதற்கு அடையாளமாக, நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

Vaiko, Vijayakanth, Ramadoss welcome Union Budget

நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்காக சென்னையில் அகில இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி தொழில்நுட்ப மருத்துவமனை, சூரிய மின்சக்தித் திட்டம், ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா, சென்னை மருத்துவக் கல்லூரியில் காசநோய், பல் மருத்துவ சிகிச்சைகள் தொடங்குதல் போன்ற அறிவிப்புகளைத் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.

8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆட்சியில் 4.1 விழுக்காடாக இருந்த நிதிப் பற்றாக்குறையை 3.6 விழுக்காடாகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

வரி வருமானம் மட்டும் இன்றி மாற்று வழிகளிலும் அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதும், அரசின் செலவினங்களை நிர்வகிக்கத் தனி ஆணையம் ஏற்படுத்தி இருப்பதும் மிகத் தேவையான நடவடிக்கைகள் ஆகும்.

பெரும் சரிவை நோக்கிப் போய்க்கொண்டு இருந்த விவசாயத்துறை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. நிலம் இல்லாத 5 இலட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் நிதி உதவி, வேளாண் துறையில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிக்க ரூபாய் 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, வேளாண் கடன் வழங்க ரூபாய் 8 இலட்சம் கோடி ஒதுக்கீடு, நீர்ப்பாசனத் திட்டங்கள் மேம்பாட்டிற்காக ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு, நிலங்களுக்கு ஏற்ற பயிர் சாகுபடிக்கு மண்வள அட்டை வழங்கும் திட்டம், விவசாய துறைக்குத் தனி தொலைக்காட்சி அலைவரிசை, கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு 33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து விவசாயத்தைப் பயனுள்ள வகையில் மாற்றுவது போன்ற அறிவிப்புகள் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் அளித்தல், பெண் குழந்தைகளுக்கு சிறப்பு சேமிப்புத் திட்டம், பெண்கள் பாதுகாப்பிற்கு மேலாண்மை வாரியம் போன்ற அறிவிப்புகள் பெண்கள் நலனில் மத்திய அரசின் அக்கறையைக் காட்டுகிறது. பார்வையற்றோர் அறிந்து கொள்கின்ற வகையில், ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்துகள் அச்சிடுவது புரட்சிகர அறிவிப்பாகும்.

சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் மீது சுமைகள் விழக்கூடிய அளவுக்குப் புதிய வரிகள் இல்லாததும், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு இருப்பதும் இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்புக் கூறுகள் ஆகும். மொத்தத்தில் இந்தியத் திருநாட்டை வளர்ச்சிக்கான புதிய திசையில் அழைத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை கொண்ட நிதிநிலை அறிக்கை என்று வரவேற்பு தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வரவேற்பு

மத்திய அரசின் 2014-15ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக பிரதமர் மோடியையும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியையும் பாராட்டுகிறேன்.

பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தனிநபர் வருமான வரி உச்சவரப்பை 2.5 லட்சமாக அதிகரித்தும், தொழிலாளர்களின் வைப்பு நிதி உச்சவரம்பை ரூபாய் 50 ஆயிரம் அதிகரித்தும், வீட்டு வசதிக் கடனுக்கான வட்டியிலும் ரூபாய் 50 ஆயிரம் அதிகரித்து விலக்கு அளித்திருப்பதும் மக்களிடையே தனிநபர் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும்.

பிரதமர் மோடி தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கை எல்லோருக்கும் பொதுவானதாகவும், அனைத்து துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சி உடையதாகவும் இருப்பதால், எவ்வித இடையூறும் இன்றி அவை செயல்படுத்தப்படும்போது, அது இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஒரு நல்ல துவக்கமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் பாராட்டு

மக்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ள இந்நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.

சிகரெட் மீதான வரி 72 சதவீதம் வரையும், போதைப்பாக்கு மீதான வரி 70 சதவீதம் வரையும், புகையிலை மீதான வரி 55 சதவீதம் வரையும் உயர்த்தப்பட்டிருப்பது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் இந்த தீய பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வழி செய்யும். வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரங்களுக்கு சேவைவரி நீட்டிக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளை அரசு தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது இன்னொரு வரவேற்கப்பட வேண்டிய அம்சம் ஆகும். நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க உறுதி, சூரிய ஒளி மின்னுற்பத்திக்கு சலுகைகள் ஆகியவையும் முற்போக்கு நடவடிக்கைகளாகும்.

அதேநேரத்தில் விலைவாசியையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. விலைவாசி கட்டுப்பாட்டுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், இதனால் எந்த பயனும் ஏற்படாது. அதேபோல், பல்வேறு துறைகளுக்கான வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கப்பட்டிருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் எந்த தரப்பையும் பாதிக்காத வகையில் 2014-15 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நிதி மற்றும் வருவாய் திட்டமிடலில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சரியான பாதையில் பயணத்தை தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
BJP alliance leaders Vaiko, Vijayakanth, Dr. Ramadoss Thursday welcomed the Union Budget and said it reflected the seriousness with which the new government has set about the task of addressing the challenges of revival of growth and improving the macro-economic situation of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X