For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பக்ரீத் பண்டிகை: கருணாநிதி, வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையாக இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது. தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி, தள்ளாத வயதில் பெற்றெடுத்த இஸ்மாயிலை, நபி இப்ராகீம் (அலை) பலியிட முன்வந்த தியாகம் இன்றவும் உலகெங்கும் நினைவுகூறப்படுகின்றது. இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக நடைபெற்றது இந்த நிகழ்வு.

நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற உணர்வுடன், அரபா பெருவழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.

தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லீம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வாழ்த்து:

பக்ரீத் பண்டிகையொட்டி திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய மக்களால் 16.10.2013 அன்று எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஈத்-உல்-அஸா என்னும் நோன்பைக் குறிக்கும் இந்தப் பக்ரீத் பெருநாள், ‘கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது' என்பதை உணர்த்தும் நன்னாளாகும்.

"கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களைக் கட்டுப்படுத்துங்கள்; கெட்ட செயல்களை விட்டும் உங்கள் கைகளை கட்டுப்படுத்துங்கள்; பொய்களை விட்டு உண்மை பேசுவதில் முனையுங்கள்" என்று ஒவ்வொரு மனிதனுக்கும் - அவன் நல்லவனாக வாழ்வதற்கு உரிய போதனைகளைக் கூறினார் நபிகள் நாயகம்.

நபிகள் நாயகத்திடம் ஒரு மனிதர், "இஸ்லாமில் சிறந்தது எது?" என்று கேட்க; அதற்கு அவர்கள், "ஏழைகளுக்கு உணவளித்தல்; நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் கூறுதல்" என்றார்கள். ஏழைகளுக்கு உணவளித்தல் மூலம் இரக்க உணர்வும், எளியோரை அரவணைக்கும் பெருந்தன்மையும் வளரும்; சலாம் கூறுவதன் மூலம் இதயங்கள் இணையும்; மனித மனங்களில் நேச ஊற்றுகள் பொங்கிப் பெருகும். அது தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மனத் தூய்மையையும், நெருக்கத்தையும், சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்கிறது இஸ்லாம் நெறி.

இந்த நெறி தழைக்க, எங்கும் மனிதநேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம்; எல்லோரிடமும் இன்முகம் காட்டி, இன்சொல் கூறி இதயங்கள் இணைந்து இன்புற ஏற்ற வழி நடப்போம் என இத்திருநாளில் ஏற்கும் உறுதியுடன்; இஸ்லாமிய சமுதாய மக்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்திவரும் தி.மு.கழகத்தின் சார்பில் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும், எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் வாழ்த்து:

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவது தான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறை தூதரான இப்ராகிம், இறைவனின் கட்டளையை ஏற்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த தமது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முன்வந்தபோது, வான் தூதரை அனுப்பி அதை தடுத்த இறைவன், மகனுக்குப் பதிலாக ஆட்டை பலிகொடுக்கும்படி கூறினார். இப்ராகிமின் தியாகத்தையும் இறைவன் பாராட்டினார். இதை குறிக்கும் வகையிலேயே தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும்.

சோதனைகளை சாதனைகளாக மாற்ற முடியும் என்பதையும் உணர்த்துகின்ற நாள் தான் இந்தத் தியாகத் திருநாள். தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் இடர்ப்படுகிற சோதனைகளை எல்லாம் தாங்கி, சாதனைகளாக மாற்றி வெற்றிப் பயணத்தைத் தொடரவும்,அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் , மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் இந்த நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்றுச் செயல்படுவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வாழ்த்து:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

Vijayakanth

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற உன்னத நோக்கம் கொண்டது இஸ்லாமிய மார்க்கம். தியாகத்தையும், ஈகையையும் போற்றுகின்ற திருநாள் பக்ரீத் பண்டிகையாகும். அனைவரும் பகிர்ந்துண்டு வாழும் வகையில் வசதி படைத்தவர்கள் வறியவர்களுக்கு குர்பானி வழங்கி தியாகத் திருநாளாக போற்றுகிறார்கள்.

இந்த நன்னாளில் அனைத்து சமுதாயத்தினரும் ஈடுபட்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதன் மூலம் வகுப்பு ஒற்றுமையையும், சமுதாய நல்லிணக்கத்தையும் பேணிப் பாதுகாக்க முடியும். கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற வகையில் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு கடைப்பிடிக்கப்படும் இந்த நன்னாளில் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுக்கு இந்த தியாகத் திருநாள் பயன்படட்டும். இந்நன்னாளில் இஸ்லாமிய பெருமக்கள் எல்லா வளமும், எல்லா நலனும் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi, MDMK general secretary Vaiko, DMDK chief Vijayakanth and PMK founder Ramadoss have wished Muslim community ahead of Bakrid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X