• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த வைரமுத்து...#hbdvairamuthu

|

சென்னை: அறிஞர் அண்ணாவின் தமிழ் நடையும், தந்தை பெரியாரின் சிந்தனைகளும், கலைஞர் கருணாநிதியின் இலக்கியத் தமிழும் ஒன்றுசேர்ந்து சிறுவன் வைரமுத்துவை தாக்க... அந்த தாக்கம், பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசனின் கவிதைகளால் ஈர்க்க... தன் கிராமிய சூழலும் தன்னை ஊக்குவிக்க... 12 வயதில் கவிஞரானார் வைரமுத்து!பள்ளியில் நன்றாக படித்து மதுரை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவரானார்.

சென்னை பச்சையப்பா கல்லூரியில் படிக்க ஆரம்பிக்கும்போதே, 'வைகறை மேகங்கள்'என்ற முதல் பாடல் திரட்டை வெளியிட்டார். அப்போது வயது 19 தான். ஆனால், இந்தப் படைப்பானது, சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதுதான் சிறப்பே. திரைப்பட பாடல்கள் மட்டுமா என்ன? நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நூல்கள் என படைப்புகள் நீள்கின்றன.

"வான மகள் நாணுகிறாள் "வேறு உடை பூணுகிறாள் " என்று இரவை இவர் வரவேற்ற அழகை கண்டு திரையுலகமே திரும்பி பார்த்தது. வானம் எனக்கொரு போதி மரம்,நாளும் எனக்கது சேதி தரும்"என்றபோது அதே திரையுலகம் அவரை வாரி அணைத்தது.. "விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே.." என்றார். இப்போது, திரையுலகம் அவரை உச்சாணிக்கொம்பில் தூக்கி நிறுத்தியது.

காதலும் விஞ்ஞானமும்

காதலும் விஞ்ஞானமும்

எத்தனையோ விஞ்ஞானிகள் மண்டையை உடைத்து, கணித்து, தன் வாழ்நாளை காணிக்கையாக்கி உருவாக்கி சென்ற அறிவியல் தத்துவங்களை, மிக சுலபமாக, எளிமையான வார்த்தைகளை இட்டு நிரப்பிவிட்டு செல்கிறார் வைரமுத்து. நிலவில் பொருள்கள் எடை இழக்கும்.. நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்.. காதலில் கூட எடை இழக்கும் என்பதிலும், வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும் என்பதிலும், விஞ்ஞானத்தையும்-காதலையும் இழைத்திருப்பார். 'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று நாள்தோறும் விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டிருக்க, உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்!', என்று ஒரு காதலை தன் பாட்டில் சொல்கிறார் வைரமுத்து. இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும் என்று காதலைக்கூட விஞ்ஞானமாக பார்க்க முடியும் என்று நிரூபித்தார் வைரமுத்து.

பரபரப்பான இளைய தலைமுறை

பரபரப்பான இளைய தலைமுறை

சுழலும் காலசக்கரத்தின் பரபரப்பு வாழ்க்கையில், இன்றைய இளம் தலைமுறைகளை தன் வைர வரிகளால் ஈர்த்தவர் வைரமுத்து. பாடல்களில் உள்ள வசீகரமும், அழகியலும் இளைஞர்களை இலக்கியத்தின் பால் ஈர்ப்புக் கொள்ள செய்தன. அந்த கவிதை தாக்கத்தால் பல இளைஞர்கள் கல்லூரிகளுக்கு தமிழ் படிக்க புறப்பட்டார்கள். வைரமுத்துவின் கவிதை தொகுப்புக்களில் ஏதாவது ஒன்று அங்கு பயிலும் மாணவர்களின் கையிடுக்குகளில் எப்போதுமே அடங்கி கிடக்கும். இளைய தலைமுறைக்கு வைரமுத்து சொல்வது, "உன்னை யாரோடும் ஒப்பிடாதே. உன்னை உன்னோடு மட்டும் ஒப்பிடு. நேற்று இருந்ததை விட இன்று நன்றாக இருப்பது போல வாழ்ந்து கொள். உழைப்பு, கல்வி, புகழ் நேற்றைவிட இன்று அதிகமாக இருப்பதுபோல வாழ்ந்துவிடு" என்பதுதான்.

கற்பனைதான் தனி சுகம்

கற்பனைதான் தனி சுகம்

ஒருநாள் இயக்குனர் ஸ்ரீதர் வீட்டுக்கு சென்றிருந்தார் வைரமுத்து. அப்போது, ஸ்ரீதரோ வைரமுத்துவிடம் "எனக்கு ஒரு நல்ல பாட்டு வேணும். ஒரு அழகான பெண்ணை இந்த படத்திற்கு ஹீரோயினாக செலக்ட் செஞ்சிருக்கேன். நீ வேணும்னா அந்த பெண்ணை ஒரு முறை பார், வரச்சொல்றேன். அவள் அழகை பார்த்தாதான் உனக்கு ஒரு இன்ஸ்பைரேஷனா இருக்கும், உனக்கு எழுதவும் வசதியாக இருக்கும். வர சொல்லட்டுமா?" என்று கேட்கிறார் ஸ்ரீதர். அதற்கு வைரமுத்துவோ "வேண்டாம்" என்கிறார். ஆச்சரியத்தில் ஸ்ரீதர் கேட்கிறார் "ஏன்?" அதற்கு பதிலளிக்கிறார் வைரமுத்து, "ஒருவேளை என் கற்பனா சக்தியின் அளவிற்கு அந்த பெண் இல்லாவிட்டால், எனது ஏமாற்றம் பாட்டிலும் இறங்கிவிடும். கற்பனைதான் தனி சுகம். அதை வைத்தே எழுதுகிறேன். வேண்டுமானால் என் எழுத்துக்கு இணையாக அந்த பெண் இருக்கிறாரா என ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்" என்று சொல்லி ஒரு பாடலையும் எழுதி நீட்டினார். அதுதான் "பனிவிழும் மலர்வனம்" நினைவெல்லாம் நித்யா பாடல். வரிகளை படித்த ஸ்ரீதரோ, அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவையே எழுத சொல்லிவிட்டார்.

 வைரமுத்து தனி மனிதனல்ல!

வைரமுத்து தனி மனிதனல்ல!

இவர்களது கூட்டணியில் எதைச்சொல்ல, எதை விட... முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், கடலோர கவிதைகள், மண்வாசனை, என எல்லாமே சூப்பர் ஹிட். ஆண்டாள் விவகாரத்தில், சர்ச்சைக்குள்ளானபோது, சொல்லக்கூசும் அளவிலான வார்த்தைகளில் அவரை விமர்சித்து தள்ளியவர் ஹெச்,ராஜா. அவர் மட்டுமல்ல, அதிமுக, பாஜகவிலிருந்து கண்டன குரல்கள், போராட்டங்கள் வெடித்தன. ஒருவரும் வைரமுத்துவுக்கு எதிராகவோ அல்லது அவரை விமர்சனங்களை கண்டித்தோ வாயே திறக்கவில்லை. "எச்.ராஜாவே... நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம்' என கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, முதன்முதலில்உரக்க குரல் பாரதிராஜாதான். "வைரமுத்து தனி மனிதன் அல்ல, தமிழுக்கும், இலக்கியத்திற்கும் மாபெரும் தொண்டாற்றியிவன், தமிழை எளிமைப்படுத்திய கலைஞனை, இழிசொற்களால் எப்படிப் பேசலாம்? வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல, தமிழினத்தின் பெரு அடையாளம்" என்றார்.

இளையராஜா - பாரதிராஜா - வைரமுத்து

இளையராஜா - பாரதிராஜா - வைரமுத்து

நிழல்கள்" படத்தின் மூலம் ஆரம்பமான கூட்டணி இது. அன்றுமுதல், பாடல் சிறந்ததா, இசை சிறந்ததா? என்றே போட்டி வைக்கும் அளவுக்கு மாறி மாறி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தனர். அந்த அளவிற்கு அற்புதமாக உணர்வுகளை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்து கொண்டே இருந்தனர். இருவரும். பெரும்பாலும் சூப்பர் ஹிட்தான். கிராமத்து பட பாடல்கள் என்றாலே இருவரும் கண்முன்னே வந்து நின்றுவிடுவார்கள். முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், போன்ற படங்களே காலத்துக்கும் இதற்கு சாட்சி. கருத்து வேறுபாடுகளுக்கு பின்பு, பல கிராமிய படங்களுக்கு இசையமைத்தாலும், பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து வைரமுத்து பாடல்களை எழுதினாலும், உயிரோட்டமுள்ள கிராமத்து இசை என்ற இடம் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது. ராஜாவும் வைரமுத்துவும் பிரிந்து இவ்வளவு வருடங்கள் ஆனாலும், தங்களிடமிருந்த வெளிக்கொணர்தலில் வாரி வழங்கிய பாடல்களை நாம் பல யுகங்களுக்கு ரசித்து கொண்டிருக்கலாம். என்றாலும், என்றாவது ஒரு நாள், ஒரு படமாவது இருவரும் இணைந்து செய்துவிட மாட்டார்களா என்ற ஏக்கம் எழாத நாளில்லை.

ரகுமான் - வைரமுத்து

ரகுமான் - வைரமுத்து

மெட்டு, வாத்தியக்கருவிகள் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதுப்புது ஒலிகள் உண்டாகும் ரகுமானின் இசையில் தான் எவ்வளவு எவ்வளவு வரி ஆழமிக்க பாடல்கள். இதனால் மீண்டும் இளையராஜா -வைரமுத்து கூட்டணியை மீண்டும் எட்டிப்பிடிக்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் மணிரத்தினம், சங்கர் போன்றோர்களே. சிக்குபுக்கு ரயிலே, ஊர்வசி ஊர்வசி வரிகள் கூட அவ்வளவு அழகாக இருக்கும். கவிதை என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல, அது ஓர் உணர்வு என்பது நறுமுகையே, என் வீட்டு தோட்டத்தில் போன்ற பலவற்றில் தெரியும்.

ஒற்றை சொல் போதுமே

ஒற்றை சொல் போதுமே

வைரமுத்து பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் பாடம் நடத்துகிறார். ‘அவன் ஆண் பால். அவள் பெண்பால்' என்று. அப்போது ஒரு மாணவன் திடீரென கேட்கிறான், "அப்போ குழந்தை எந்தப் பாலில் சார் அடங்கும்?' என கேட்கிறான். ஆசிரியரோ திகைக்க, வைரமுத்துவோ, உடனே பதிலளித்தாராம், ‘குழந்தை தாய்ப்பாலில் அடங்கும்'. அது மின்னலைப் பிடித்து பாடலில் அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்று வார்த்தை விவாதம் நடத்தியபோது இது தனக்கு ஞாபகம் வந்ததாக கூறுகிறார் வைரமுத்து. எப்படியும் கற்பனை செய்யலாம்... அளவு ஏது? ஈடு ஏது? வரைமுறை? அது அழகியலை தரும்போது. அப்படிப்பட்ட வரிகள்தான், "கண்ணில் மிதக்கும் கனவா நீ, கை கால் முளைத்த காற்றா நீ......கைய்யில் ஏந்தியும் கனக்கவில்லையே நுரையால்..செய்த சிலையா...." என்றும், இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது? கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி! என கேள்விகளை உருவாக்கி பதில்களையும் தொடுத்து தருகிறார்.

உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்

உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்

"கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டுஉந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்.. வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்.. வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்", ப்ளுட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்.. விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்.. முக்கோணங்கள் படித்தேன் உன் மூக்கின் மேலே.. விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின் மேலே", தாயருகே சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருகே தாயாகும் பெண்ணே என்று சொல்லிக் கொண்டே போகலாம். அட... வரிகள் கூட வேண்டாம்.. வைரமுத்துவின் சொற்றொடரே போதும். அவை புதுமை தரும் புதுவளம்தான்.. பூமிதொடா பிள்ளை பாதம், 50 KG தாஜ்மஹால், பூவுக்குள் பூகம்பம், இதயம் கருகும் ஒரு வாசனை , அழகான ராட்சசி, நகம் என்ற கிரீடம்.. என விரிவடைந்தே செல்கிறது.

எளிய வரிகளில் தமிழ் பாடல்கள்

எளிய வரிகளில் தமிழ் பாடல்கள்

அறிவியலை, பல தமிழ் பாடல்களில் எளிமையாக சொல்ல முயன்றவர் வைரமுத்து. தமிழின் பெருமையை இந்திய அளவிலும் உலக அளவிலும் உயர்த்தி கொண்டிருக்கும் ஒரு தமிழ் மேதை. புதுமை முயற்சிகளை கையாள்வதுடன் அதிலும் வெற்றி பெற்றுள்ளார். சமகாலத்தோடு தன்னையும், தன்னை சமகாலத்தோடும் ஒன்றோடொன்றி பின்னி பிணைந்து கொண்டே பாட்டெழுதுவதால்தான் அவரது பாடல் என்றுமே இளமையாக இருக்கிறது. சிந்தனை சிதறல், அழகியல் நடை, நவீன வார்த்தை சொருகல், கருத்துசெறிவு, உணர்ச்சி கொந்தளிப்பு, பல வடிவ காதல் என அனைத்தும் நிறைந்தே காணப்படுகிறது. இனிய பிறந்த நாளான இன்று நீடூழி வாழ வேண்டும் என்று ஒன் இந்தியா மனம் திறந்து வாழ்த்துகிறது இந்த நவீன கண்ணதாசனை!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Film lyricsist and poet Vairamuthu is celebrating his birth day today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more