For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசுத் தலைவரே சொன்ன பிறகும் தமிழை வழக்காடு மொழியாக்கவில்லையே!- கவிஞர் வைரமுத்து

By Shankar
Google Oneindia Tamil News

Recommended Video

    மறைமலையடிகள் குறித்த கட்டுரையை அரங்கேற்றிய வைரமுத்து

    சென்னை: தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் விழாவுக்கு முன்னிலை வகித்தார்.

    தொடக்கவுரையில் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:

    மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறுகொண்ட தமிழ் மொழியின் தலையாய ஆளுமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் ஓர் ஆவேசம்தான் இந்தத் தமிழாற்றுப்படை.

    Vairamuthu urges to make Tamil as official language in courts

    சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் நான்கு நூல்கள் ஆற்றுப்படை இலக்கியங்கள். ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் என்று பொருள். பக்தர்களை முருகனை நோக்கி ஆற்றுப்படுத்தும் இலக்கியத்திற்குத் திருமுருகாற்றுப்படை என்று பெயர். அந்த அடிப்படையில் புதிய தலைமுறையைத் தமிழை நோக்கி ஆற்றுப்படுத்தும் ஆய்வுக்கட்டுரைகள் என்பதனால் இதற்குத் 'தமிழாற்றுப்படை' என்று தலைப்பிட்டேன்.

    திருவள்ளுவர் - இளங்கோவடிகள் - கம்பர் - அப்பர் - திருமூலர் - வள்ளலார் - உ.வே.சாமிநாதையர் - பாரதியார் - பாரதிதாசன் - புதுமைப்பித்தன் - கண்ணதாசன் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற வரிசையில், 13ஆம் கட்டுரையாகத் தமிழை ஆண்டாள் என்று ஆண்டாளை எழுதினேன். 14ஆம் ஆளுமையாக மறைமலையடிகளை ஆய்வு செய்து இப்போது அரங்கேற்றுகிறேன்.

    தமிழை முன்னிறுத்துவதும் தமிழ் மொழியைப் புதுப்பிப்பதுமான தேவை இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் மிகுந்திருக்கிறது. மொழியை வெறும் ஒலிக்கூட்டமென்றோ, கருத்து விளக்கக் கருவியென்றோ கருதிவிடமுடியாது. இந்தியா போன்ற கூட்டுக் கலாசாரமுள்ள ஒரு நாட்டில் மொழி என்பது ஓர் இனத்தின் அதிகாரம் என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

    உறங்கிக்கிடந்த தமிழுணர்வும் இன உணர்வும் அண்மையில் உயிர்த்துடிப்போடு எழுந்து நிற்பது கண்டு தமிழ்ச் சமூகம் சிலிர்த்து நிற்கிறது. ஒரு மொழி பெருமையும் உரிமையும் பெறவேண்டும் என்றால் அதிகார மையங்களில் அது நின்று நிலவ வேண்டும். மாநில அரசு அலுவலகங்களில் - தமிழ்நாட்டுக்குள் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் - நீதிமன்றங்களில் - கல்விக்கூடங்களில் - ஊடகங்களில் - ஓர் இனத்தின் அன்றாடப் பேச்சு வழக்கில் அது தொடர்ந்து நிலைபெற வேண்டும்.

    நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழ் திகழ வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கனவு. இந்தியக் குடியரசுத் தலைவருக்கு 30.10.2017 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன். 'கொச்சியில் நடந்த ஒரு விழாவில் நீதிமன்றங்களில் தாய்மொழியில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள்; வரவேற்கிறேன். அதை இந்தியாவின் குரலாகப் பார்க்கிறேன்,' என்று வாழ்த்தி எழுதியிருந்தேன். ஆனால், குடியரசுத் தலைவர் இப்படிக் குரல்கொடுத்த பின்னும் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்க மத்திய அரசு அண்மையில் மறுத்திருக்கிறது.

    ராஜஸ்தான் - உத்திரப்பிரதேசம் - மத்தியப் பிரதேச நீதிமன்றங்களில் இந்தியில் தீர்ப்பளிப்பது நடைமுறையில் இருக்கும்போது தமிழில் தீர்ப்பளிப்பது மட்டும் சாத்தியம் ஆகாதா? இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் தமிழ் குறைந்ததா? சிவபெருமான் தன் உடுக்கை எடுத்தான். ஒரு பக்கம் அடித்தான் தமிழ் பிறந்தது; மறுபக்கம் அடித்தான் சமஸ்கிருதம் பிறந்தது என்று நம்புகிறவர்களின் நம்பிக்கை பொய்யா? வெகுவிரைவில் தமிழ் வழக்காடு மொழியாகித்தீர வேண்டும்.

    ஆதி வரலாற்றிலிருந்து ஆரம்பித்தால் தமிழர்களின் மொழிபேசும் எல்லை சுருங்கியே வந்திருக்கிறது. தமிழர்களின் ஆதிநிலமான லெமூரியாக் கண்டம் மடகாஸ்கர் வரை நீண்டு கிடந்தது. அது கடற்கோளில் மூழ்கிப்போன பிறகு சிந்து சமவெளி வரைக்கும் தமிழ்க் கலாசாரம் பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. திராவிட மொழிக் குடும்பம் தோன்றுவதற்கு முன் தென்னிந்தியா முழுக்கத் தமிழ் பரவியிருந்தது. இன்று தென்னிந்தியாவில் ஒரு பகுதியாக வெறும் 1,30,058 சதுர கிலோமீட்டராகச் சுருங்கியிருக்கிறது. இது மேலும் சுருங்குவதற்குத் தமிழ் சம்மதிக்காது; தமிழர்களும் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் தமிழ் உணர்வு மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் இனி எந்தக் கட்சியும் தமிழ்மொழி குறித்த கொள்கை வரைவை முன்வைத்தே தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும்.

    தமிழ்ப் பண்பாடு அன்பையும் சகிப்புத் தன்மையையும் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதை முடிந்தவரை பின்பற்றுவோம்.

    சுத்தம் என்பது கண்காணாத இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது. பொறாமை என்பது முடியாதவர்களின் பாராட்டு. ஒழுக்கம் என்பது சாட்சி இல்லாத இடத்தில் நேர்மையாக இருப்பது. அதைப்போல தாக்குவதல்ல வீரம்; தாங்குவதே வீரம். பொறுமை காப்போம்; ஒற்றுமையால் தமிழ் இனத்தைக் கட்டிக்காப்போம்.

    - இவ்வாறு அவர் பேசினார்.

    English summary
    Poet Vairamuthu has urged the centre to make Tamil as official language in Courts
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X